பாகப்பிரிவினையில் அம்மா

பாகப் பிரிவினையில் அம்மா

பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.

 

  "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்

   கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து

    கதவைத் திறந்தார் பாட்டி.

    

   கதவைத் திறந்ததும் "யாரும்மா..

   மூத்தவன் பிள்ளையா?

  

   கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..

   பள்ளிக்கூடத்துக்குப் போகல"

    கரிசனமாக கேட்டார்.

    

   "போகல..."ஒற்றை வார்த்தையோடு 

   பேச்சை முடித்துக் கொண்டான்.

   

   " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?"

   

  "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது.

  

    "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"

    

   "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல

    என்றால் போகல்ல

    .விடுங்களாம் பாட்டி."

    

   " பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா..."

     என்ற  பாட்டி.,

   "உங்க அப்பாவும் இப்படித்தான்.

   பள்ளிக்கூடம் போன்னா எங்கேயாவது 

   போய் ஒளிந்து கொள்வான்.

   சாயங்காலம் பள்ளி விடும் நேரத்தில்

   டாண் என்று வீட்டில் வந்து நிற்பான்.

   அதனால்தான் படிக்காமல் போய்விட்டான்."

   மகன் படிக்காமல் போனதற்காக இப்போது வருத்தப்பட்டார் பாட்டி.

   

" பாட்டி புறப்படுங்க...புறப்படுங்க.."

.கையைப்பிடித்து இழுத்தான் பேரன்.


" எங்க போகணும் ... "


" இன்றைக்கு என்ன நாளு....சொல்லுங்க பார்ப்போம் "


" எனக்கு என்ன தெரியும். கண்ணா தெரியுது.."


" வாங்க...எங்க வீட்டுக்கு போக வேண்டிய நாள் ...

 வாங்கன்னா...வாங்க..."கையைப்பிடித்து இழுத்தான்.

 

 பாட்டிக்கு இதற்குமேல் ஒன்றும் கேட்க 

 தெரியவில்லை.புரிந்து போயிற்று.

 

 மனசுக்குள் ஒரு வலி வந்து 

 சுருக்கென்று குத்தியது.

 

 நாலு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு பூமணி

 பாட்டி பட்டபாடு கடவுளுக்கு ஏற்காது.

 

 சூரியன் உதிக்கும் முன்னே காட்டில் போய் 

 நிற்பாள்.

 கீரை பறித்து வந்து நாலுபணம் கொண்டு வந்தாதான்

 நாலு புள்ளைகளுக்கும் வயிறார சோறு போட

  முடியும்.

  தாத்தா காட்டு காவல்காரர்.

  நல்லா காடு விளைஞ்சா விளைக்கு

  நாலு மரக்கால் 

 கடலை   கிடைக்கும்.

  இல்லை என்றால்...வயிற்றுப்பாட்டுக்கே

  தகினத்தோம் போட வேண்டியதுதான்.

  

தாத்தாவுக்கு ஒருமுறை கால் ஒடுஞ்சிப்போனதால

ஒத்தக்காலை தாங்கித்தாங்கி நடப்பாவ...

கனத்த வேலைக்குப் போகமுடியாது.


சும்மாவே இருக்கதைவிட

கங்காணி வேலைக்காவது போகலாம்

என்றுதான் ஊர் பெரிவுகிட்ட கேட்டாவ...


அவுங்களும் பாவம் பாத்து கங்காணி

 வேலை செய்ய ஒத்துக்கிட்டாவ...

 காலையில் போனா அடஞ்சா வருவாவ...

 வீட்டுல ஒரு ஆட்டுக்குட்டி கிடக்கு.

 அதுக்கு ஒரு கொடுக்குபோல கொழைகிளைபறிச்சி 

 கக்கத்துல வச்சுகிட்டு வந்து 

 நிப்பாவ


  

  

  ஊரு மெப்புக்கு இல்ல என்று சொல்லாம

  நாலுபேருக்கும் நாலு நாலு சென்ட்

இடம் வாங்கிப் போட்டுருந்தா.

அதுல ஒரு பெறைய மடக்கி 

நாலு பேரையும் கலியாணம் பண்ணி தனித்தனியாக

வச்சிட்டாவ...

  

 நாலு பேருக்கும் சமமாக உருட்டி

 கொடுத்துட்டு  வளர்த்தேன்னு

 பெருமையா சொல்லுவாவ

  பூமணி பாட்டி.

  

 

 தாத்தா வேலை பார்த்த வரை பிள்ளைகள் 

 தனியாக வைத்து இருப்பது  பெருசா தெரியல...

 இருவரும் பொங்கி ஆக்கி தின்னுகிட்டு 

 நல்லாதான் இருந்தாவ.

 பாட்டிக்கும் முன்ன மாதிரி காட்டுக்குப் போக முடியல..

 தாத்தாவும் தளர்ந்து போய் வீட்டிலேயே 

 முடங்கிப் போனார்.

 

 இருக்கிறதை வைத்து ஏதோ காலத்தை ஓட்டினார்கள்

 பாட்டியும் தாத்தாவும்.

 போனமாசம் வந்த ஒரு நாளு வயித்துப்

 போக்குல தாத்தா கொளக்குன்னு

 விழுந்துட்டாவ.....பாட்டி ஓடிப் போயி

 நர்ஸ் அம்மாவ

 கூட்டிட்டு வந்து பார்த்தா...

 ஒண்ணும் இல்ல...எல்லாம் முடிச்சுப் போச்சுன்னு

நர்ஸ் கையை ஆட்டிட்டு

போய்விட்டாவ ...

எல்லாம் முடிஞ்சு போச்சு.



 தாத்தா போனதும் விசயம் 

 பெருசா போச்சு.

 அம்மாவுக்கு இனி 

 யார் சோறு கொடுப்பது என்ற

 பேச்சு வார்த்தை வந்தது.

 

 யாருக்கும் தாயை கூட வைத்துப்

 பார்க்க விருப்பம் இல்லை.

 

 

 யாரும் முழுசா  ஒத்துப்போகல..

 விசயம் ஊர்ப்பெரியவர் வரை

 போய் நின்றது.

  

" அம்மாவ யாராவது ஒருத்தர் வீட்டுல வச்சி பார்த்துங்கப்பா...வயசான காலத்துல

அங்கேயும் இங்கேயும் அலையவிடாதுங்க"

என்றார் பெரியவர் .


"அது எப்படி ஒருத்தரே ஏத்துக்க முடியும்..

மூத்தவனுக்குத்தான சிறுவாட்டுப்

பணம் எல்லாம் கொடுத்தாவ

..அவனையே கூட வச்சுப்

பார்த்துக்கிட சொல்லுங்க 

என்று ஏறுக்குமாறா

பேசினான்."

இளையவன்.


"என்ன பேச்சு பெசுற....

உன்னைத்தான் பத்தாவது வரை படிக்க

வச்சாவ...என்னை மூணாவது 

படிக்கும்போதே காட்டுக்கு

கூட்டிட்டுப் போயி என் படிப்புபை ஒண்ணும் 

இல்லாம ஆஙக்கிப்புட்டாவ ...ஞாயமா

பார்த்தா நீதான் சாப்பாடு போடணும்"

என்றான் இரண்டாவது மகன்.


"ஆமா...பார்க்கிறது பார்த்துடலாம்.

கிடையில விழுந்துட்டா என்றால்

யாரு ஆஸ்பத்திரி செலவ பார்க்கிறது...

தூக்கி எடுத்து குளிப்பாட்டி எடுக்க பொண்டாட்டி  ஒத்துக்குவாளா...இல்ல உன் பொண்டாட்டி தான் பார்பாள....அதையும்

சேர்த்து யோசித்து முடி வெடுங்க"என்றான்

நடுலவன்.


'இப்போ என்னதான் சொல்ல வாறீய.?"

.

"எங்களால் முடியாது."


."உங்களால் முடியாதுன்னா...

எங்கேயாவது முதியோர் இல்லத்தில்

கொண்டு போட்டுருவோமா... பேசுறான்

பாரு பேச்சு..."


"அப்படி சொல்ல வரல..."


"அப்படி சொல்ல வரல நொப்படி

சொல்ல வரலன்னுட்டு...வேறு எப்படி தான்

சொல்ல வாறீக.."


"அம்மையையும் நாலா பிரிங்க..'


"ஏன் அவ உயிரோடு இருப்பது புடிங்கலியா

நாலு கூறு போடணும் ஐஞ்சு கூறு போடனுண்னுட்டு"


"ஏல...நீங்க எல்லாம் மனுஷ பயக்கதானால

 பெத்த தாயை ஆளாளுக்கு இப்படி ஏலம் போடுறீகள

 இது நல்லாவா இருக்கு..."

 என்றார் பூமணி பாட்டியின் தம்பி.

 

" ஏன் அவ்வளவு பாசம் பொங்கிட்டு வருதுன்னா

 நீங்க கொண்டு வைத்து பார்க்கிறது.

 உங்க உடப்பிறந்தாள் தான..."

 சீறினான் இளையவன்.

 

" அட...சும்மா இருங்கப்பா...

 ஆளுக்கு ஒண்ண பேசிகிட்டு...

 தாயை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து

 நிறுத்துன பயக்க..." என்றார் பக்கத்து

 வீட்டு தாத்தா.

 

" பெரியவரே...நீங்க   என்ன நினைக்கியளோ அதைத்

உங்க தீர்ப்பா

 சொல்லுங்க  கட்டுப்படாம எங்க போவானுவ..."என்றார்

 சின்ன தாத்தா.

 

' அப்போஆளுக்கு ஒருமாசம் 

 பெரியம்மாவுக்கு சோறு கொடுங்கப்பா..

 அவுங்க இப்போ இருக்கிற வீட்டுலேயே இருப்பதால்...

 நாளை மத்தநாளு ஏதாவது ஆச்சுன்னா

 ஒரு பய பார்க்காண்டாம்.

  நாங்க  பார்த்துகிடுவோம்.

 போய் வேலை ஜோலிய பாருங்க."

 என்று கோபமாகப் பேசிவிட்டு

 விருட்டென்று எழும்பிப் போய்விட்டார்

 ஊர் பெரியவர்.

 

 மாசம் பொறக்க இரண்டுநாள்

 இருந்ததால யாரும்  வந்து கூட்டிப் போகல...

 தம்பி வுட்டுல இருந்து தம்பி மக்க

 சோறு கொண்டுவந்து கொடுத்தாங்க...

 

  இன்று ஒன்றாம் தேதி.

 அதுதான் மூத்த மவன் புள்ள பாட்டியை 

 கூட்டிட்டுப் போக வந்திருக்கிறான்.

  பேரன் கையைப்பிடித்தபடி  தெருவில்

  நடந்தார் பாட்டி.

  

  . வழியில் வந்த பெரியவர் ஒருவர்

  "என்ன பெரியம்மா சௌக்கியமா" என்று விசாரித்தார்.

  

 "ஆமாங்க...ஆளு தெரியல...யாருங்க"

 

" நான் தெற்குதெரு பலவேசம் மகன் 

மூத்தவன் மாடசாமி"


" ஐயா...நல்லா இருக்கியளா...

  கண்  கொஞ்சம் மங்கலா இருக்கு..

  ஒரு ஆளு இனம் தெரிய மாட்டேங்குது"

  

" ஆமா  ....பெரியம்மா  இப்போ எங்க 

புறப்பட்டாப்புல  இருக்கு"


" மூத்தவன் மவன் வந்து கூப்பிட்டான். 

அதுதான் மூத்தவன் வீட்டுக்குப் போறேன்ய்யா..."


" அட...இன்னைக்கி ஒண்ணாம் தேதி இல்ல..

 இந்த மாசம் மூத்தவர் முறையா ? "


"என்ன முறையோ போங்க....

கிடக்கிற எடுத்துல நாலு பருக்கைய

தின்னுகிட்டு சத்தம்காட்டாம 

ஒரு மூலையில முடங்கிக் கிடக்கணும் "

என்றார் பாட்டி.


"பெரியாளு சரியாத்தான் சொல்லுறீயம்மா....

காலம் கலிகாலம்.... வேற என்னத்தச் சொல்ல...

மாடுகீடு வருகிற நேரம்.....பாட்டிய

பாத்து கூட்டிட்டுப் போப்பா "

என்று செல்வன் கிட்ட சொல்லிட்டுப் போனார்

அந்த மாடசாமி தாத்தா.


 

" இன்றிலிருந்து  இன்னும் ஒரு மாசம் 

 எங்க வீட்டில்தான் பாட்டிக்கு  சாப்பாடு. 

 பாட்டி கையை சிக்குன்னு பிடிச்சுகிட்டு கிடுங்க " 

என்று   பெருமையாக கூறியபடி

நடந்தான் செல்வன்.

 

" ஆமா....நாலு புள்ளைகளும் 

ஆளுக்கொரு மாசமா பெரியம்மாவ 

பங்கு போட்டுகிட்டாவல்ல......அதுதான்

பாவம் பெரியம்மா ....மூத்தவ மவன் வீட்டுக்குப் போகுது" 

 போகிற போக்கில் சொல்லிவிட்டு

 போனார் தாத்தா.

 

 அவளுக்கென்ன நாலும் ஆம்புள புள்ள...

 என்று சொன்னவர்களே  ...நாலு புள்ளையை

 பெத்து எதுக்கு? என்று பேச   ஆரம்பிச்சுட்டாங்க..

 ஆமாங்க..ஊரு மெப்புக்குத்தான்

 பூமணி   பாட்டிக்கு நாலு புள்ள.

 

 பாட்டி ஓயாம சொல்லுவார்....

 ஒரு பொட்டபுள்ள என் வயித்துல

 தங்கல....என்ன பாவம் பண்ணினேனோ....

 செத்தா அழகூட பொட்ட புள்ள இல்லன்னு

 தாத்தா கிட்ட சொல்லிகிட்டு. இருப்பாவளாம்....."


" சும்மா இரு.... எதுக்குப் 

பொட்டபுள்ள...பொட்டபுள்ள என்கிறா?

பொட்ட புள்ள இருந்தா நகை நட்டு

போட இயலுமான்னு ....."என்று தாத்தா

சொல்லுவாராம்.


"தவங்குன காலத்துல பொட்டபிள்ளதான்

ஓடி வந்து பார்க்கும்...

உமக்கு இப்போ தெரியாது "


"ஒண்ணுக்கு நாலு ஆம்பிளை பிள்ளைகளை

பெத்து வச்சுருக்கா....ஆசையைப் பாரு..."


"நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.

ஒரு பொம்பள புள்ள இருந்தா....

அவள் வீட்டுக்குப் போனோம்

வந்தோம்ன்னு இருக்கும். "

பாட்டி புலம்பிகிட்டே இருப்பாவ.


"இருந்தாலும் கீழ விழுந்த அன்னக்கி

ஒரு வாய் கஞ்சி தரணும்னா

பொட்ட புள்ள இருக்கணும் "என்று பாட்டி

ஓயாமல் சொன்னது உண்மையாகதான்

இருக்குமோ?






 

                

Comments