காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே


தமிழகத்தில் வாழ்ந்த எத்தனையோ சித்தர்களுள் பட்டினத்தார்க்கு என்று தனிச்சிறப்பு  உண்டு. 


பட்டினத்தார் என்றதும்

வாழ்வின் நிலையாமை பற்றி நிறையப் பேசியவர். ஆசைகளை அறுக்கச் சொன்னவர். அதிலும் பெண்ணாசை பெருந்தீங்கென்றவர்  என்பதுதான் நினைவுக்கு வரும். கூடவே அவர் துறவியாகவே வாழ்ந்தவர். எளியவர் என்ற நினைப்பு நமக்குள் வந்துவிடும்.


ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது யாரும் எதிர்பாராத 

பல திருப்பங்களைக் கொண்டது.



பட்டினத்தார் வசதி மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையோடு சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டு  ஓடியாடிப் பெரும் பொருள் சேர்த்தவர்.

திருமணம் செய்து மகிழ்ச்சியாக 

இல்லறம் நடத்தியவர்.

செல்வமும் மகிழ்ச்சியும் 

ஒருபோதும் அவர் இல்லத்தில் குறைந்திருக்கவில்லை.

ஆனால் இந்தத் தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது.

ஆண்டுகள் கடந்தன.

ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்க 

நினைத்தார்.


அவர் நினைத்தது போலவே

இறைவன் திருவருளால் ஒரு பிராமணர் மூலம் ஓர் ஆண்குழந்தை கிடைத்தது. அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர் சூட்டி சீராட்டி வளர்த்து வந்தார்.

ஒரே மகன் என்பதால் அதிக செல்லம்  கொடுத்து வளர்த்தனர்.


அவனைப் பெரிய ஆளாக்கிப் பார்க்க நினைத்தார் பட்டினத்தார்.

ஆனால்  அவனுக்கு படிப்பில் விருப்பம் இல்லாதிருந்தது.

 வாணிகத்திலாவது முழு ஈடுபாடு இருக்கும்  என்று எதிர்பார்த்தார்.

ஆனால் அவன் எதிலும் அதிக ஈடுபாடு இல்லாது  விளையாட்டுப் பையனாகவே இருந்து வந்தான்.


மகனைக் கடல் கடந்து வாணிகத்துக்கு அனுப்பினால் புத்தி வரும். சொத்துக்களைக் காப்பாற்றுவான் என்று எண்ணினார் .அவனும் வெளியில் சென்று

வாணிகம் செய்ய சம்மதித்தான். மகிழ்ச்சியோடு கப்பலில் கடாரத்துக்கு அனுப்பி வைத்தனர்.


ஏறக்குறைய மூன்று மாத காலம் கடந்த பின்னர் மகன் ஊர் திரும்பினான். மருதவாணனிடம் பல மாற்றங்கள்  காணப்பட்டன.

துள்ளலோடு போனவன் சாதுவாகத் திரும்பி வந்தான். 

சிவ பக்தனாக மாறிவிட்டான்.

என்னவொரு பக்தி.

முன்பு இருந்த ஆர்ப்பாட்டமும்

துள்ளலும் அப்படியே அடங்கிப் போயிருந்தது.

ஊர் திரும்பியவன் அப்பாவிடம் 

வரவில்லை.நேரே பாட்டியைத் தேடி  ஓடினான்.



வெளிநாட்டிலிருந்து அவன்

கொண்டு வந்த சரக்குகளை வேலையாட்கள் ஒன்று ஒன்றாக இறக்கிக் கொண்டு வைத்தனர்.

அனைத்தும் சாக்கு மூட்டைகள்.

எந்தவொரு விலை உயர்ந்த பெட்டியும் இல்லை.

என்ன இது வெளிநாட்டிலிருந்து பொன் பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தால்  இப்படிச் சாக்கு மூட்டையில் என்ன அள்ளிக்கொண்டு வந்திருக்கிறான்?

 அதிர்ச்சியில் அப்படியே 

பார்த்துக்கொண்டு நின்றார்.



ஒரு மூட்டையைப் பிரித்துப் பார்த்தார் உள்ளே எரு , தவிடு, உமி

என்று நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆத்திரமடைந்தார் . பரம்பரையாக வசதியாக வாழும் வணிகக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவான் என்று நினைத்தால்...


கோபமாக மகனைத் தேடிய பட்டினத்தார், தனது தாயை அழைத்துப் 'பார்த்தாயா உன் பேரன் லட்சணத்தை' என்றார்.


"என்ன...என்ன செய்து விட்டான் "

கேட்டார் பாட்டி.

என்ன செய்திருக்கிறார் பார் என்றபடி 

பட்டினத்தார் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார். மூட்டை கிழிந்து வீடு முழுவதும் எரு ,உமி,தவிடு எல்லாம் சிதறியது.


கூடவே நவமணிகளும் உருண்டோடின. உமிகள் எல்லாம் தங்கமாய்ப் பளபளத்தது.


சட்டென மாறிப் போனார் பட்டினத்தார். ஆனந்தக் கூத்தாடினார். மருதவாணன் தனது ஒரு பயணத்திலேயே கோடிக்கணக்கில் செல்வம் கொண்டு வந்து சேர்ந்துவிட்டானே

என்று மகனை நினைத்துப் பெருமிதம் கொண்டார்.

 மகனைக் கட்டி அணைத்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார்.


'மகனே... மகனே மருதவாணா' என்று அழைத்தார். ஆனால் மகனைக் காணவில்லை. 

அங்குமிங்கும் தேடினார்.

ஆனால் மருதவாணன் எங்கும் கிடைக்கவில்லை.


அப்போது மருதவாணன் கொடுத்து விட்டுப் போனதாக ஒரு பெட்டியைப் பாட்டி பட்டினத்தாரிடம் கொடுத்தார்.


அதை வாங்கித் திறந்து பார்த்த பட்டினத்தார் அதிர்ந்து போனார்.பெட்டியின் உள்ளே ஒரு  ஓலை இருந்தது.

அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

பட்டினத்தார் கையில் எடுத்துப் 

படித்தார்

அதில் 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று எழுதியிருந்தது. அதைப் படித்ததும் உறைந்து போனார் .

பணம் பொன் பொருள் என்று அலைகிறாயே...

இறுதியில் உன்னோடு வருவது எது என்று மகன் சம்மட்டியால் தலையில் ஓங்கி அடித்தது  போல இருந்தது.


அப்போதுதான் உலக வாழ்வின் நிலையாமை பட்டினத்தாருக்குப் புரிய ஆரம்பித்தது.

கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்படியே அடங்கிப் போனார்.

அமைதியாகிப் போனார்.

எதும் நிரந்தரமில்லை.

கடைசிவரை பொன்னும் பொருளும் வரப் போவதில்லை . ஏன் மனிதனும் வரப்போவதில்லை.

தனியாக உலகிற்கு வந்தோம்.

தனியாகத்தான் போக வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

அப்போதுதான் அரசனைப் போல் வாழ்ந்தவர் ஆசைகளைத் துறந்து துறவு பூண முடிவு செய்தார்.


வீட்டை விட்டு வெளியேறிய பட்டினத்தார், கால் போன போக்கில் எங்கெங்கோ நடந்தார் .ஆங்காங்கு உள்ள கோவில்களுக்குச் சென்று   பாடல்கள் பாடினார். 

அவை வெறும் பக்திப் பாடல்கள் மட்டும் அல்ல. ஞான மார்க்கத்தைக் காட்டும் தத்துவப் பாடல்களாக வெளிவந்தன.


சாதாரண ஒரு வணிகரைப் பட்டினத்தாராக மாற்றியது மகன் எழுதி வைத்த ஒற்றை வரி.


அப்படியே வீட்டைவிட்டு போனவர் தாய்க்குக் கொடுத்த வாக்குப்படி அவர் இறந்தபோதுதான் ஊர் திரும்பினார். 


அவர் தாய்க்குச் சிதை மூட்டும்போது பாடிய பாடல்களை இன்றும் பல இடங்களில், இறந்தவர்கள் சிதைக்குத் தீ மூட்டும்போது பாடுகின்றனர்.


ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்றுப்

பையலென்றுபோதே பரிந்தெடுத்துச் செய்யவிரு

கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பிற் காண்பேன் இனி?


என்று தொடங்கி அவர் பாடிய பத்துப் பாடல்களும் நெஞ்சை உருக்குவதாக

இருக்கும்.



வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

கடைசி வரை யாரோ?

என்று கண்ணதாசனை எழுத வைத்தது

பட்டினத்தாரின் இந்தப் பாடல்களாகத்தான் இருக்குமோ?


ஆனால் பட்டினத்தாரை இப்படி உலக நிலையாமையைப் பாட வைத்தது


"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"


என்ற ஒற்றை வரி.


Comments