நிறைகுடம் நீர் தளும்பல் இல்

நிறைகுடம் நீர் தளும்பல் இல் 


பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும்

வழிகாட்டவல்ல சான்றோர் பெருமக்களின்

அனுபவமொழிகள்.


உலக நடைமுறையை உள்ளதை உள்ளபடி

உணர்ன்ற உண்மையை

நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள்

என்று அறிவுரை தந்து நிற்பவை.

வாழ்க்கைத் தத்துவங்களை 

ஒற்றை வரியில் உணர்த்திச்

செல்பவை.

ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான

வாழ்வியல் உண்மையைக் காட்சிப்படுத்தி

கடந்து போகும்.


"பழமொழியில் உமி கிடையாது "என்பார்கள்.

எந்தப் பழமொழியும் பயனற்ற வெற்றுச் சொற்களால்

புனையப்பட்டது அல்ல.

எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே

இருக்கும்.



"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப "

என்று முதுமொழிக்கு இலக்கணம்

சொல்கிறது  தொல்காப்பியம்.


முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக

நடைமுறை உண்மையும் கொண்டதாக 

இருக்கும்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்

பண்பு முதுமொழிக்கு உண்டு.

குறித்த பொருள் ஒன்றனையே வரையறுத்து 

உரைக்கும் தன்மை முதுமொழியின் சிறப்பு.


எப்போதுமே அறிவுடையவர்கள் பெரிதாக

அலட்டிக் கொள்வதில்லை.

அமைதியாக காத்திருப்பர்.

பேசும் வாய்ப்பும் சூழலும் இருந்தாலொழிய

அதிகம் பேசமாட்டார்கள்.


அறிவுடையவர்கள் தன்மை எப்படி இருக்கும்

என்பதை  ஔவை,



"அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு "


என்று தனக்கே உரித்தான உவமை நயத்தோடு

தெளிவுபடுத்தியுள்ளார்.



ஒருவர் அடக்கமாக இருக்கிறார் என்பதற்காக

அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம்.

நீர் பாயும் தலைமடைப் பகுதிகளில் கொக்கு

வாடி இருப்பதுபோல இருக்கும். 

அது எதற்காக ?

எதுவரை இந்த வாட்டம் ? 


பெரிய மீன் வந்ததும் அப்படியே கொத்தி

தூக்கிச் சென்றுவிட காத்திருக்கத்தான்

இந்த வாட்டம்.


இப்படித்த்தான் அறிவுடையவர்கள் அடங்கி

அமைதியாக இருப்பார்.அவர்களின் அமைதியைக்

குறைவாக எண்ணிவிட வேண்டாம்.

அவர்களை எளிதில் வென்று விடலாம் என்று

சாமானியமாக எடை போட்டுவிடாதீர்கள்

என்கிறார் ஔவை.


இப்போது பழமொழிக்கு வருவோம்.


"நிறைகுடம் தளும்பாது,

குறைகுடம் கூத்தாடும் "

என்று ஒரு பழமொழி உண்டு.



"கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

 நிறைகுடம் நீர் தளும்பல் இல்"

 

என்கிறது பழமொழி நானூறு.


கற்றவர்களின் அடக்கத்தின் பின்னால்

மறைந்திருக்கும் ஆற்றல்கள் அரைகுறை

அறிவாளிகளுக்குப் புரியாது.

அவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து

பேசி, தான் ஒரு அறிவாளி என

எல்லோரையும் நம்ப வைக்க வேண்டும்

என்று நினைப்பர்.அதாவது குறைகுடம்

கூத்தாடும்.



நிறைய கற்றவர்கள் அதாவது மிகுந்த 

அறிவுடையவர்கள் அமைதியாக இருப்பர்.

எனக்கு இவ்வளவு தெரியும். நான்

இவற்றை எல்லாம் செய்திருக்கிறேன்

என்ற தற்பெருமை ஒருபோதும் இருக்காது.

அதனால்தான் நிறைகுடம் தளும்பாது 

என்று கூறுவர்.


ஒரு குடத்தில் குறைவாக நீரை ஊற்றி

தூக்கி வாருங்கள். நிறைய அலம்பி

வெளியில் சிந்தும். அது போலதான் 

கொஞ்சம் தெரிந்தால் போதும். 

எனக்கு எல்லாம் தெரியும்...எனக்கு எல்லாம்

தெரியும் என்று தம்பட்டம் அடித்துக்

கொள்ளும் கூட்டம் ஒன்று உண்டு.

அரைகுறை அறிவாளிகள் கிடைக்கிற 

சந்தர்ப்பங்களில் எல்லாம் தான் ஒரு

அறிவாளி என்று காட்டிக் கொள்ள வேண்டும்

என விரும்புவர்.


அரைகுறை அறிவு எப்போதுமே ஆபத்தானது.


 நல்ல அறிவுள்ள ஒருவன் அடக்கமாக இருப்பான். 

 எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டான்

 என்பதற்கு புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த

 நியூட்டனை எடுத்துக்காட்டாக கூறலாம்.

 புவியின் இயக்கம் சரிவர நடைபெற, மேலே வீசப்படும்

 பொருள் புவியை நோக்கி ஈர்க்கப்பட,

 கோள்கள் அதனதன் பாதையில் இயங்க

 ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது  என்பதை

  கண்டுபிடித்து உலகுக்கு தெரிவித்த

  பெருமை நியூட்டனையே சாரும்.

      

 சர் ஐசக் நியூட்டன்  இங்கிலாந்து 

  நாட்டின் உயரிய விருதான

 சர் பட்டம் பெற்ற பெருமைமிகு அறிவியலாளர் ஆவார்.

 அவ்வளவு உயரிய விருதுக்குத் தகுதி வாய்ந்த

 தகைமையாளர்  மனதில் தான் சாதித்து

 விட்டேன் என்ற பெருமை ஒருபோதும்

 இருக்காது.

 


 அவர் எப்போதும் எளிமையாகவே இருப்பார்.

 அவருடைய கண்டுபிடிப்புகளைப்பற்றி

 யாராவது பெருமையாக கூறினால்

  நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லையே

  என்பார்.

  

கடற்கரையில் விளையாடும் ஒன்றும் 

அறியாத ஒரு சிறுவனைப் போன்ற

மனநிலை உள்ளவனாகவே இப்போதும்

இருக்கிறேன்  என்று தான் கற்றுக் கொள்ளும்

மனநிலையில் உள்ளவன்தான் என்பதைக்

குறிப்பிடுவார்.

கூழாங்கற்களையும் சிப்பிகளையும் 

எடுத்து அவற்றுள் எது சிறப்பானது 

என தேர்வு செய்யும் சாதாரண நிலையில்தான் 

நான் இப்போதும் உள்ளேன் என்று

தாழ்மையாகப் பேசுவார்.

 

உண்மை என்னும் பெருங்கடல் என்முன் 

விரிந்து கிடக்கிறது. 

இந்த உலகில் கண்டுபிடிக்கப்படாதவை 

எவ்வளவோ உள்ளன.

நான் கண்டுபிடித்ததைக் காட்டிலும் 

 கண்டுபிடிக்கப்பட வேண்டியவை

 எண்ணிலடங்காதவை.

 

  நான் கண்டுபிடித்தது

 ஒரு சிறு துளிதான் என்பார். 

 எவ்வளவு தன்னடக்கம் பாருங்கள்!

 

 இதைத்தான் நிறைகுடம் தளும்பாது என்பார்களோ?

      

 

   

Comments