நதி எங்கே போகும்

நதி எங்கே போகும் 


தாத்தா கையைப் பிடித்தபடி துள்ளித் துள்ளி

நடந்து வந்தாள் மீனா.


"என்ன...தாத்தாவும் பேத்தியும் காலையிலேயே 

புறப்பட்டுடீங்க." கேட்டார் மதியழகன்.


"ஓடைக்கரைக்குப் போகணும்

என்று ஒரே பிடிவாதம். அதுதான் கூட்டிட்டு

போய் காட்டணும் என்று போறேன்."

என்றார் வேதமுத்து தாத்தா.


"அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கு...?

சீமைகருவேல மரமும் நாலு வேப்பம்மரமும்

நிற்கு... உங்க பட்டணத்தை மாதிரி

இங்கே கட்டடம் ஒண்ணும் கிடையாது "

என்றார் மதியழகன்.


"சரி பட்டணத்துல இருக்கிற புள்ள. பார்க்க

ஆசைப்படுது. கூட்டிட்டுப் போறேன்."

என்றபடி பேத்தியின் கையை இறுக்கமாகப்

பற்றியபடி நடந்தார்  வேதமுத்து.


"தாத்தாவும் பேத்தியும் நல்லா பார்த்துட்டு

வாங்க..."


தாத்தா பேசிக் கொண்டிருக்கும்போதே கையைப்

பிடித்து இழுத்தாள் மீனா.


சரி. வாறேன்  என்று கையைப் பிடித்தபடி

இருவரும் நடந்தனர்.


"தாத்தா இந்த பாதை எங்கப் போவுது ?"


"நம்ம தோட்டத்துக்குத்தான்."


"அப்போ  முன்னால ஒரு பாட்டி போறாங்க

அவங்களும் நம்ம தோட்டத்துக்குதான்

போறாங்களா ? "


"இல்லை...அவங்க காட்டுக்கு

கீரை பறிக்கப் போறாங்க "


"இப்போதான் இந்தப்  பாதை 

நம்ம தோட்டத்துக்குப்

போகுது என்றீங்க..

இப்போ இந்தப் பாதை கீரை

காட்டுக்குப் போகுது என்கிறீங்க...

உண்மையைச் சொல்லுங்க தாத்தா

இந்தப் பாதை நம்ம தோட்டத்துக்குப்

போகுதா?இல்லை கீரை காட்டுக்குப்

போகுதா?"


"நம்ம தோட்டத்துக்கும் போகும்.

அவங்க காட்டுக்கும் போகும்."


"இந்த இரண்டு தோட்டத்துக்கும்

ஒரே பாதையா?

காட்டுக்கும் நம்ம தோட்டத்துக்கும் மட்டும்தான் போகுமா?"


"இல்லை...இந்த வழியில் வருகிற 

எல்லா தோட்டத்துக்கும்

போகலாம்"


"எங்க தெரு மாதிரியா? "


" அப்படி வச்சுக்கிடலாம்."


"அப்போ ஏன் இன்னும் ரோடு போடல..."


"இது காட்டுப் பாதை அதனால் இங்கு

ரோடு போடமாட்டாங்க."


"அப்போ காட்டுக்குப் போறவங்க எல்லாம்

ரோட்டுல போகக் கூடாதா?"


"போகலாம்...போகலாம்."


"ரோடு போட்டா காலில் முள் குத்தாது

இல்லியா தாத்தா ?"


"நீ சொல்வது சரிதான்.

ஆனால் காட்டுக்குப் போற பாதையில்

ரோடு போட முடியாது "


"ஏன் ? பஸ் போகிற ரோடும்

காட்டுவழியாகப் போகிறதே.

அதற்கு மட்டும் ரோடு போடலியா?"


"உன் செருப்பெல்லாம்

மண்ணாயிற்று என்றுதானே அப்படி

சொல்லுற...

 வா...இந்த ஆத்துல போயி கழுவிடலாம்."


"மாட்டேன்...."


"ஏன் ....."


"பாட்டி சொல்லியிருக்காங்க. ஆற்றின்

தண்ணீர்தான் குடிக்க 

குழாய் வழியாக வீட்டுக்கு வருதாம்.

நான் ஆற்றுத் தண்ணீரை அழுக்காக்க

மாட்டேன்."


சிரித்துக் கொண்டார் தாத்தா.


இருவரும் ஆற்றங்கரையோரம் நடந்தனர்.


"தாத்தா இந்த மரம் எல்லாம் யாருக்க...?"


"அரசாங்கத்துடையது."


"அரசாங்கம்ன்னா....அது யாரு.?"


"அது ...அது...நாம்தான்.

அரசாங்கம்"


"அப்போ இந்த மரம் எல்லாம் நம்ம

மரமா தாத்தா? "


"ஆமாம் ,எல்லோருக்கும் பொதுவானது.

நமக்கும் அதில் பங்கு உண்டு."


"அப்படின்னா?"


"அப்படின்னா நம்மைப் போல அனைவருக்கும்

சொந்தமானது."


"குழப்புறீங்க தாத்தா...

எனக்குப் புரிய மாட்டேங்குது"


"இப்போ புரியாது. பிறகு புரியும்."


"என்ன நீங்க எங்க டீச்சர் மாதிரி

பேசுறீங்க. அவங்களும் புரியல என்று

சொன்னால் இரண்டு மூன்றுமுறை

படிச்சு பார். அப்புறம் புரியும் என்பார்கள். "


பேசிக் கொண்டிருக்கும்போதே தொலைவில்

எதையோ பார்த்த மீனா,


"தாத்தா.. தாத்தா கொஞ்சம் நில்லுங்க.

ஏய் ....கௌ பாய் என்ன பண்ணுற.?"

கத்தினாள்.


நிமிர்ந்து பார்த்த மாட்டுக்கார

சிறுவன் "என்ன வேணும"் என்பதுபோல

கண்ணை உயர்த்திக் கேட்டான்.


"என்ன பண்ணுற..."


"கண்ணு தெரியலியா...?

மாடு குளிப்பாட்டுறேன்."


" எதுக்கு ஆத்து தண்ணியில மாடு

குளிப்பாட்டுற...தண்ணி அழுக்காயிடாது?


 மாட்டுக்கார சிறுவன் சிரித்தபடியே.."தாத்தா

இது  உங்க பேத்தியா? பட்டணத்திலிருந்து

வந்துருக்காங்களோ?"

 

"ஆமாம் ..."என்று தலையாட்டினார் தாத்தா.


"அதுதான் ஆற்றில் ஏன் மாடு குளிப்பாட்டுற

என்று கேட்குறாங்க"


"தாத்தா அந்த கௌ பாயை வெளியில்

வரச் சொல்லுங்க.." சீ...என்பதுபோல முகத்தைச்

சுழித்தபடி அந்த மாட்டுக்காரப் பையனைப்

பார்த்தாள். 


"அவன் மாடு குளிப்பாட்டிகிட்டு

இருக்கான் இல்லையா?

மாடு குளிப்பாட்டி முடிஞ்சதும்

வெளியில் வருவான். "


"மாடு குளிப்பாட்டுற தண்ணியைத்தான்

நீங்க குடிப்பியளா....?"


"ஓடுகிற தண்ணீர் தானே....

ஓடுகிற தண்ணீரில் அழுக்கு

நிற்காது...."


"இது உங்களுக்கு யார் சொல்லித் தந்தாங்க....."


"எதுக்குப் சொல்லித் தரணும்?

எனக்கே தெரியும்."


"எப்படித் தெரியும்?"


"இப்படித் தெரியும்...."என்றபடி கையில்

வைத்திருந்த ஓலையை நீரில் போட்டார் தாத்தா.


"பார்த்தாயா?

ஓலை எங்கே... ?"


"தண்ணீர் இழுத்தூட்டுப் போயிற்று."



"அப்படித்தான் ஓடுகிற தண்ணீரில்

அழுக்கு நிற்காது."


"நம்ம ஊருக்கு வரும் முன்னே அடுத்த ஊரில்

போடும் அழுக்கு 

நம்ம ஊருக்குத் தானே வரும்.

அந்த அழுக்கையா குடிப்பீங்க...."


"அப்படிப் பார்த்தால் தண்ணீரே குடிக்க

முடியாது...."


"போங்க தாத்தா.... தண்ணீரை அசுத்தப்

படுத்தக்கூடாது.

அது எந்த ஊருக்குப் போனாலும்

சுத்தமாகப் போகட்டுமே..."


"நீ சொல்வதும் சரிதான்...."


இனியாவது ஆற்றில் மாடு 

குளிப்பாட்டக்கூடாது என்று சொல்லுங்க..."


"ஆகட்டும் தாயி....

பட்டணத்தில் இருந்தாலும் உனக்கு நீரைப் பற்றி

நல்ல அறிவு இருக்கு..."


"நான் உங்கள் பேத்தி தாத்தா...

எனக்கு அறிவு இல்லாமல் இருக்குமா?"


"சரியாக சொன்னாய்..."


"நதி எங்கே போகிறது தாத்தா?"


"ம்.....தெரியலியே...."


"குளத்துக்குப் போகும்."


"அப்புறம்"


"அப்புறம்...வயலுக்குப் போகும்"


"வயலுக்குப் போன பிறகு..."


"வயலுக்குப் போன பிறகு செடி

குடித்துவிடும்"


"செடி அவ்வளவு தண்ணீரையுமா

குடித்துவிடும்?"


"ஆமாம்..."



" அட... போங்க தாத்தா

உங்களுக்கு சரியாகவே தெரியல. நதி நீர் மண்ணுக்கும் விண்ணுக்கும் போகிறது.

மீதி இருந்தால் கடலுக்கும் போகும்.

இது கூடவா தெரியல...?"

சொல்லி தாத்தாவை கிண்டலடித்தாள்

மீனா.


அப்படியே பேத்தியைக் கட்டி அணைத்துக்

கொண்டார் வேதமுத்து தாத்தா.












Comments