ஊர் வாயை மூட உலைமூடி உண்டோ
ஊர் வாயை மூட உலைமூடி உண்டோ
ஒரு செய்தியை ஊர் முழுவதும் பரப்ப வேண்டுமா?
ஊர்க்குருவிகளாக சிலர் இருப்பர்.
அவர்களில் ஒருவரிடம் மெதுவாகச்
சொல்லிவிட்டால் போதும்.
அவர் ஊர் முழுவதும் பரப்பி விடுவார்.
இப்போது செய்தி ஊர் முழுவதும் பரவியாயிற்று.
இனி அந்தச் செய்தி வெளியில் செல்லாமல் மறுபடியும் பார்த்துக்கொள்ள முடியுமா என்றால்....
அது எப்படி முடியும்?
ஊர் வாயை மூட உலைமூடி உண்டோ என்று
கேட்கிறார் ஒருவர்.
சரியாகத்தானே கேட்டிருக்கிறார்.
ஊர் வாயை மூட உலை மூடி உண்டோ?
காற்றில் கலந்த செய்தி இது.
காற்றைத் பிடித்து கைப்பையில் அடைக்க முடியுமா?
கூடாதல்லவா ? அது போன்றதுதான் ஒரு செய்தி நம் வாயை விட்டு வெளியில் போய்விட்டால் அந்தச் செய்தி பரவாமல்
மறுபடியும் தடுத்திட முடியாது.
இந்தச் சொலவடை
எங்கிருந்து வந்தது?
சாதாரணமாக நாம் அடிக்கடி பயன்படுத்தும்
சொற்களை எடுத்து தம்மைத்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கம்பர்.
கம்பர் தனிப்பாடலில்தான் இப்படியொரு சொலவடை வந்திருக்கிறது.
பாடல் உங்களுக்காக
தேரையார் செவ்விள நீருண்ணாப் பழிசுமப்பர்
நாரியார் தாமறிவார் நாமவரை நத்தாமை
கோரைவாய்ப் பொன்சொரியுங் கொல்லிமலை நன்னாடா
ஊரை வாய்மூட வுலைமூடி தானிலையே.
பாடல் :45
ஒரு தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அது ஊராருக்குத் தெரிந்துவிட்டது.
ஊருக்குத் தெரிந்தால் ஊரார் வாய் சும்மா இருக்குமா? ஊரார்
தலைவியை அலர் தூற்றுகின்றனர்.
ஊரார் பழிச்சொல்லுக்கு ஆளாகி விட்டாள் தலைவி. விரைந்து வந்து திருமணம் முடித்துக்கொள் என்பதை தோழி தலைவனுக்கு அறிவிப்பதாக
அமைந்துள்ள அகத்திணைப் பாடல்தான் இது.
கொல்லிமலை நாட்டுத் தலைவனே!
உன் கொல்லிமலைப் பகுதியில் கோரைப்புல்கூட பொன்னாக விளையும்.
அந்தப் பெருமை உனக்கு உண்டு.
தேரைநோய் விழுந்த தேங்காயின் இளநீர் சுவைக்காது.
அதனைக் குடிக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
அவ்வாறு தேரை நோய் விழுவதற்குக்
காரணம் என்ன?
தேங்காய் நார் தேங்காயைச் சரியாக மூடாமையே
தேரை நோய் வரக் காரணம்.
தான் சரியாக மூடாமையே தேரை நோய்க்குக் காரணம் என்பது தேங்காய் நாருக்குத் தெரியுமா?
தெரியாதல்லவா?
அதுபோல இந்தப் பெண்ணுக்கு (நாரிக்கு)ஒரு பழி
வந்திருக்கிறது.
ஊரார் அலர் தூற்றுகின்றனர்.
இதற்குக் காரணம் யார்?
அவள் அல்லவே.
நீ என்பது உனக்குப் புரிகிறதா?
ஒருமுறை பழிச்சொல் வந்துவிட்டால்
அதைத் தடுத்திடக் கூடுமோ?
சோற்றுப்பானையை மூட உலைமூடி இருப்பது போல அவளைப் பழி தூற்றும் ஊரார் வாயை மூட உலைமூடி இல்லையே. "
என்கிறாள் தோழி.
ஊரார் பழிச் சொல்லுக்கு ஆளாகி விட்டாள் உன் தலைவி.
விரைந்து வந்து திருமணம் முடித்துக்கொள்
என்று சொல்வதாக அமைந்ததிந்தப் பாடல்.
நாரிக்கும் நாரியலுக்கும்
அதாவது தேங்காய்க்கும் முடிச்சிப் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார் கம்பர்.
தேங்காய்யில் தேரை நோய் விழுவதற்கு காரணம் தேங்காய் நார் தேங்காயை முழுவதுமாக பாதுகாக்காததுதான் என்ற
வேளாண் செய்தியைச் சொல்லி கம்பர்
தான் ஒரு வேளாண் மதிநுட்பம் கொண்டவர் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
அருமையான சிந்தனைக்குரிய
செய்தியோடு வந்த பாடல் .
Comments
Post a Comment