இனியது கேட்கின்...

இனியது கேட்கின்....

வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும் ?


கை நிறைய பணம் வேண்டும்.

ஆசைப்பட்டப் பொருட்கள் எல்லாம் வாங்கி

சாப்பிட வேண்டும்.

விரும்பிய ஆடைகளை எல்லாம் 

அணிந்து அழகு பார்க்க வேண்டும்.

உலகிலுள்ள எல்லா நாடுகளையும்

சுற்றிப் பார்க்க வேண்டும்.


அழகான வீடு வேண்டும்.

கால்மேல் கால் போட்டு

இருந்து சாப்பிட வேண்டும்.


அன்பான மனைவி 

அறிவான குழந்தைகள் என்று

வாழ்க்கை இனிதாக ஓட வேண்டும்.


நாளொரு உடை...

பொழுதெல்லாம் உடன் நடக்க...

உரையாட... நண்பர்கள்

உடனிருக்க வேண்டும்.


ஏன்? எதற்கு ?எங்கே? என்று

கேட்காத பெற்றோர் வேண்டும்.


துள்ளித் திரிய கால்கள் வேண்டும்.

தொட்டுத் தழுவ ஓடியாட பட்டாம்பூச்சி

சூழ் மலர் வனம் வேண்டும்.


நோயில்லா உடல் வேண்டும்.

ஏனென்று கேட்க 

விழுந்தால் தூக்கிவிட

பிள்ளைகள்  வேண்டும் .


இவைதான் இனிமை.


இப்படி இனிமை

ஆளுக்கு ஆள் காலத்திற்கு காலம்

இடத்திற்கு இடம் மாறுபடும்.

 வேறுபடும்.


இவைதான் இனிமை என்று

எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறனர்.


இவற்றைத் தேடித்தான் 

 ஓட்டம்... தேட்டம்....

 நாட்டம்..... எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

.


ஆனால் இவை எல்லாம் கிடைத்தவர்கள் 

நிம்மதியாக வாழ்கிறார்களா என்றால்

இல்லை என்றே பலரிடமிருந்து

பதில் வருகிறது.


அப்படியானால்....நிம்மதி 

இல்லாத வாழ்க்கை எப்படி

இனிமையாக இருக்க முடியும்?


அப்படியானால் இனியது என்பதுதான்

யாது? என்ற கேள்வி அனைவர்

மனதிலும் எழாமலில்லை.



இந்த வேளையில் அருமையான 

கவிதை ஒன்று

காதோடு வந்து முட்டி மோத

திரும்பிப் பார்க்கிறேன்..


யாருமில்லை.


நான்தான் மனதோடு 

இனிமையான பாடலை

ஒத்திகை பார்த்திருக்கிறேன்

என்று புரிந்து கொண்டேன்.


இனிமை இனிமை இனிமை ...

எது இனியது?


 எத்தனை பட்டிமன்றம் நடத்தினாலும்

 இனிமையைப் பற்றிய 

 முடிவான கருத்து எட்டுமா?

இப்படியொரு ஐயப்பாடு.

அறிந்தே ஆக வேண்டும் என்ற

உறுதி இவை யாவும் உந்தி தள்ள

பட்டிமன்றம் நடத்தி முடிவைத்

தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவோடு

எழும்பினேன்.


இதற்கு எதற்கு பட்டிமன்றம்? 

ஆளாளுக்கு இதுதான் இனிமை

என்று வெவ்வேறு கருத்தை முன் வைக்க

முடிவு தெரியாமல் விழி பிதுங்கி

நிற்பதற்கு நேரடியாகவே

பட்டிமன்ற நடுவரிடமே 

கேட்டுவிட்டால்...

மனது குறுக்கே வந்து 

கேள்வி கேட்டு பட்டிமன்ற

விவாதத்தை முடித்து வைத்தது.


யாரந்த நடுவர்?...யாரந்த நடுவர்?

என் கேள்விக்கு சரியான விடையைத்

தீர்ப்பாக வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ள நடுவர் யார்?

நீண்ட நெடிய தேடல்.


கொடியது எது என்று சொல்லித் தந்தவர்.

பெரியது எது எனப் பேச வைத்தவர்.

அரியது எது என்று அறிய வைத்தவர்.

இனியது எது எனச் சொல்லித்தர 

மாட்டாரா என்ன?

அவரை விட்டால் வேறு 

பொருத்தமான ஆள் யார் இருக்கப் போகிறார்கள்.?


அவரை அழைத்துவந்து  உங்கள் முன்

நடுவராக அமர வைத்து தீர்ப்புரைக்க

நினைத்தேன்.


நினைத்தது நடந்தது.


கிடைத்தது தீர்ப்பு பாடல் வடிவில்...


பாடலைக்.

கேட்டதும் அதிர்ந்து போனேன்.

அசந்து போனேன்.

என் அடிமனதில் சம்மணமிட்டு

ஆக்ரோஷமாக வாதிட்டு கொண்டிருந்த

இனியவை எல்லாம் இருந்த இடம்

தெரியாமல் போயிற்று.


கேட்ட கருத்தும் எனது

கருத்தும் ஏதாவது ஓரிடத்திலாவது

ஒத்துப் போயிருக்குமா

என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.முற்றிலும் முரண்பட்டிருந்தது


என் எதிர் பார்ப்பைப் பொய்யாக்கி

 இறுதியில் இனிமை

எது என யான் எதிர்பார்க்காத

 ஒன்றல்ல இரண்டல்ல

 நான்கு இனியவை உண்டு.

 அவற்றுள் நனிசிறந்தது  எதுவென்

  தரம் பிரித்துக் காட்டி

 தக்கத் தீர்ப்பு வழங்கிவிட்டார்..



பாடல் உங்களுக்காக...


"இனியது கேட்கின் தனிநெடு  வேலோய் 


இனியது இனியது ஏகாந்தம் இனியது


அதனினும் இனியது ஆதியைத் தொழுதல்


அதனினும் இனியது அறிவினர்ச் சேர்தல்


அதனினும் இனியது அறிவுள் ளாரைக்


கனவிலும் நனவிலும் காண்பது தானே!"


என்றார்.


விளக்கம் கேட்டேன். 


"இனியது  இனியது ஏகாந்தம்

இனியது..."

அதாவது தனிமை இனியது.

தனிமையில் நம்மை ஒருமுகப்படுத்தி வாழ்வது

இனியது "என்றார்.


"அப்படியால் கூடி வாழ்வதில்

 இனிமை

இல்லையா? கூடி வாழ்ந்தால்

கோடி நன்மை என்று

சொல்லியதெல்லாம்...."என்றேன்.


"அது நன்மை. நீ கேட்டது இனிமை."


"தனிமைதான்  இனியது.

சிக்கலில்லாதது"


"எந்த ஒரு முடிவுக்கும் 

உடனடியாக வந்துவிட வேண்டாம்.

தனிமையினும்

இனியதும் உண்டு."

என்றபடி என்னைப் பார்த்தார்.


"அதனை முதலிலேயே சொல்லியிருக்கலாமே.."


"ஏன்...

ஏன் அவசரப்படுகிறாய்?

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்."


"கடவுளைத் தொழுதல் என்று சொல்லுங்கள்

அது என்ன ஆதி என்று 

 கேட்டுவிட ஆசை.ஒஒ 

கேட்டுவிட்டு சூடுபட்டுப் போய்விடக்கூடாதே என்ற

நினைப்பு வந்ததும் நாக்கை

உள்ளிளுத்துக் கொண்டேன்."


"என்ன உள்ளுக்குள் உரையாடல் 

நடத்திக் கொண்டிருக்கிறாய்?"


"ஒன்றுமில்லை. கடவுளைத் தொழுவது

இனிதுதான்.ஒத்துக்கொள்கிறேன்.

இனிமை வேண்டுமா

இறைவனைத் தொழுங்கள் "என்று 

சொல்லிவிட்டு எழுப்பினேன்


"இன்னும் நான் முடிக்கவே இல்லை 

அதற்குள் எங்கு

செல்கிறாய்?"


"இறைவனுக்கு மேல் இனிமையாது

வேறென்ன இருக்கப் போகிறது?"


"ஏன் இல்லை.

அதனினும் இனியது அறிவினர்ச்

சேர்தல்"


"அறிவுடையோரோடு சேர்ந்திருத்தல்

அத்தனை இனிமையானதா?"


"அறிவுள்ளவர்களோடு கூடியிருக்க வேண்டும். 

அறிவுடையோர் சேர்க்கை

அகமகிழ்வு தரும்.

நம்மைச் சுற்றி நல்ல அறிவுடையவர்கள்

இருக்கும் போது ஒரு பாதுகாப்பு உணர்வு. ஏற்படும். எந்த இடரும் ஏற்பட

வாய்ப்பிருக்காது.

இடரில்லா வாழ்க்கை.

அதுதான் இனிமை."


" ஒத்துக்கொள்கிறேன்.

இனியது எதுவென

அறிந்தேன்.

இனிதாய் 

 நான் கடந்து செல்லலாமா?"


"நடப்பதும் கடப்பதும் உன் விருப்பம்.

ஆனால் இன்னும் நான் உன் கேள்விக்கான

பதிலை முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லையே..."


"இன்னும் முடியவில்லையா?

அப்படியானால் இதுவரை 

இனியது என்று சொன்னது?"


"எல்லாம் இனிமையானதுதான்.

ஆனால் எல்லாவற்றையும்விட

இனிமையானது ஒன்று உண்டு.


அதனினும் இனியது கனவிலும்

நனவிலும் அறிவுள்ளோரைக் காண்பது தானே"


 கனவிலும் நனவிலும்

அறிவுடையோரோடு இருத்தல்.

அது என்ன கனவிலும் நனவிலும்

அறிவுடைய வரை காண்தல் ?


இருத்தல் வேறு. காணுதல் வேறு.

அறிவுடையோரோடு கூடி இருக்கும்போது

நம் மனநிலை மகிழ்ச்சியாக

இருக்கும்.

அவர் இல்லாதபோதும் அவர் நினைவில்

அவர் வழியில் நடப்பது நன்று.

முன்னும் பின்னும் முரண் இல்லா

வாழ்க்கை வாழ்வது

இனிமையும் இனிமையானது"

என்றார்.


எப்போதும் அறிவுடையோர் வழி நடத்தல்

நன்று . அதுதான் இடரற்றது.

இன்பம் தருவது.

இனிமை தருவது என்று புரிந்து கொண்டு

அங்கிருந்து நகர்ந்தேன்.


இனிமை வேண்டுமா...


மனதிற்குள் ஒருமுறை ஒத்திகை 

பார்த்தபடியே நடந்தேன்.


ஏகாந்தம் இனியது.

ஆதியைத் தொழுதல் இனியது

அறிவினர்ச் சேர்தல் இனியது

அதனினும் இனியது

அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது..


இதுதான் ஔவையின் தீர்ப்பு.


ஔவையின் தீர்ப்புக்கு மேல் முறையீடு இருக்கவா போகிறது!

.














Comments