வாழிய நிலனே

வாழிய நிலனே


காலையில் கைபேசியைத் திறந்ததும்

கண்கள் முன்னர் வந்து

கவின்மிகு காட்சிகளை விரிய வைத்து

வாழ்த்துச்

செய்திகள் வரிசை கட்டி நிற்கும்.


இந்த வாழ்த்துகள் யாருக்காக?

எதற்காக?


நட்புக்காக இருக்கலாம்.

உறவுக்காக இருக்கலாம்.

வியாபார தொடர்ர்புகள் அறுந்து போகாமல் இருப்பதற்காக இருக்கலாம்.

ஏதோ ஒரு ஆதாரம் கருதிதான்

நமது வாழ்த்துகள் இருக்கும்.


இவர்களால் மட்டும் தான் நாம் பலன் பெறுகிறோமா?

உயிருள்ளவ உயிரற்றவை என்று எத்தனையோ வழிகளில் பயன் பெற்றதால்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


இந்த உயிர் பெற்றோர் கொடுத்தது.


அதன் பின்னர் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனைப் பொருட்களையும்

தருவது நிலமும் அதில் உயிர்வாழும்  உயிர்களும் அல்லவா?

அப்படியானால் நாம் முதன்முதலாக வாழ்த்துப் சொல்ல வேண்டியது நிலத்திற்குத்தானே...


ஆம் நிலத்தை வாழ்த்த வேண்டும்..

வெறுமனே நிலத்திற்கு வாழ்த்துப் சொல்லி கடந்து சென்றால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று

கடந்து போயிருப்போம்.

பாடலும் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கும்.


அந்த நிலத்திற்கு வாழ்த்து எதனால் கிடைக்கிறது என்ற அருமையான ஒரு கருத்தைச் சொல்லி வாழ்த்தியிருக்கிறார் ஒரு புலவர்.


 பாடல்  இதோ உங்களுக்காக 



"நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை  வாழிய நிலனே"

                  புறநானூறு: 187.



பாடியவர் : ஒளவையார்.



"நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் தாழ்ந்த நிலமாக இருந்தாலும்

அவலாக இருந்தாலும் அதாவது பள்ளமாக  இருந்தாலும் மிசையாக இருந்தாலும் அதாவது மேடான நிலமாக  இருந்தாலும் எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ அவ்விடத்தில் உள்ள நிலம் மேன்மை பெற்றுத் திகழும் .நிலமே நீ வாழ்க" என்கிறார் ஔவை



நாடு என்பது மருத நிலம்

காடு என்பது முல்லை நிலம்

அவல் (பள்ளம்) என்பது நெய்தல் நிலம்

மிசை (மேடு) என்பது குறிஞ்சி நிலம்


 இந்த  நால்வகை நிலங்களும்

சிறப்புற அமைவதற்குக் காரணமாக  இருப்பது அந்நிலத்தில் வாழும் ஆண்கள்.

ஆண்களின் உழைப்புதான் நிலத்தின் தன்மையை மாற்றி 

அமைக்கும் .

அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப அங்கு வாழும் மக்கட்பண்பு அமைந்திருக்கும்.


நிலத்தின் வளர்ச்சி ஆடவர் கையில் இருக்கிறது.

உழைக்கும் ஆடவர் இருந்தால்

அந்த நிலம் மேன்மை பெறும்


குறிப்பாக ஆடவர் பண்பினால்,  நிலத்தின் பண்பு சிறப்பாக அமையும் என்ற 

கருத்தை வலியுறுத்திப் பாடப்பட்ட பாடல் இது.

அருமையான கருத்து.

அனைவரும் ஒப்புக்கொள்ளும் கருத்து.


"எவ்வழி நல்லவர் ஆடவர் 

அவ்வழி நல்லை வாழிய நிலனே"

Comments