நீரளவே ஆகும் நீராம்பல்

நீரளவே ஆகும் நீராம்பல் 


ஔவை என்றதும் கையில் கோலூன்றிய பாட்டி ஒருவர் கண்முன் வந்து நிற்பார்.

முதல் வகுப்பில் படித்த" அறம் செய விரும்பு'"

" ஆறுவது சினம்"  ...எல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி

நின்று எட்டிப் பார்க்கும்.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

என்று மனப்பாடம் செய்த பாடல் எல்லாம்

ஓடி வந்து மறுபடி ஒருமுறை மனதிற்குள் ஒப்பித்துப்

பார்க்க வைக்கும்.

மறுபடி  மறுபடி எனைப்படி எனத் தூண்ட வைக்கும்.

ஔவை என்ற இந்தப் பாட்டிக்குள் எங்கிருந்து வந்தது

 இத்தனை பாடும் திறன் என வியக்க வைக்கும்.

இப்படி பார்த்து, படித்து மகிழ்ந்த பாடல்கள்

எத்தனை எத்தனையோ உள்ளன.

மூதுரையில் ஔவை எழுதிய முப்பது 

பாடல்களும் நல்ல விழுமியங்களை

சொல்லித் தருவனவாக இருக்கும்.

மூதுரைக்கு வாக்குண்டாம் என்று

இன்னொரு பெயரும் உண்டு.


ஔவையின் இந்தப் பாடல்களைப் படிக்கப் படிக்க 

சில நுட்பமான உண்மைகள் தெரியவரும்.

அவற்றுள் மறுபடியும் என்னைப் படிக்க வைத்து ,

பாடலின் நுட்பத்தை அறிய வைத்து,

மகிழ்வித்தப் பாடல் இதோ  உங்களுக்காக...




" நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற

 நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு _ மேலைத்

 தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

 குலத்தளவே ஆகுமாம் குணம் "


  நீர் ஆம்பல் வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ

  அதுவரை இருக்கும்.

  ஒருவனுடைய நுண்ணறிவும் தான் கற்ற  நூல்களைப்

   பொருத்தே அமையும்.

  முற்பிறப்பில்  செய்த நற்பேற்றின் அளவுக்கு ஏற்பவே

  ஒருவரின் வாழ்வில் செல்வம் வந்து குவியும்.

  தான் பிறந்த குலத்திற்கு ஏற்பவே ஒருவனுக்கு நல்லியல்புகள்

  வாய்க்கப் பெறும். இதுதான் பாடலின் பொருள்.

  

  நீர்மட்டம் உயர உயர நீராம்பல் வளர்ச்சியும் 

  நீர் மட்டத்திற்கு ஈடு கொடுத்து உயர்ந்து 

  கொண்டே இருக்குமாம். நீர்மட்டம் உயர்ந்து விட்டதே 

  என்று ஆம்பல் நீருக்குள் மூழ்கிப் போய்விடுவதில்லை.

  திடீரென்று நீர் வரத்து அதிகமாகிவிட்டால்

  இரண்டே நாளில் தண்டானது் 

  தன் நீட்சியை அதிகப்படுத்தி இலையை 

  நீருக்குமேல் பரப்பி செடியைத் தலைதூக்கி நிற்க

  வைத்துவிடுமாம். தண்டின் நீட்சியை

   அதிகப்படுத்தும்  இயல்பு ஆம்பலுக்கு  உண்டு.

  

  ஒருவனுடைய அறிவு அவன் படிக்கும் நூலின்

   அளவைச் சார்ந்தது.  

   அதிகமான   நூல்களைப் படிக்கப் படிக்க 

   அறிவு பெருகும். 

    அறிவு பெருகப் பெருக ஒருவனின் வளர்ச்சி

    அதிகமாகும்.

    வளர்ச்சி அதிகமானால் எப்போதும் சமுதாயத்தில்

    தலை நிமிர்ந்து வாழ முடியும்.

    

   இங்கே ஆம்பலுக்கும் நூலுக்குமான ஒப்புமையை

   சாதாரணமாக கூறப்பட்டுள்ள ஒரு உவமை என்று

 நம்மால் கடந்து போய்விட முடியாது. 

ஆம்பலை ஔவை இங்கே கூறுவதற்கான

 காரணம் என்ன ?

ஆம்பலில் அப்படி என்ன சிறப்பு உள்ளது

என்பதை ஒரு இயற்கை ஆர்வலரால் மட்டுமே கண்டறிந்து கூறமுடியும்.


ஔவை தான் ஒரு   இயற்கை ஆர்வலர்

 என்பதை  இந்தப் பாடலில் மெய்ப்பித்துள்ளார்.

 

உயரமாக வளர்ந்து நிற்கும் ஒரு பனை மரத்தையோ

ஒரு தென்னைமரத்தையோகூட உவமையாக

கூறி இருக்கலாம். அப்படி கூறியிருந்தால்

இந்தப்பாடல் சாதாரண பாடலாகப் பார்க்கப்

பட்டிருக்கும்.

  

ஆம்பலின் வளர்ச்சி எப்படி

 இருக்கும் என்பதை நாளும் உற்று நோக்கிவரும்

ஒரு தாவரவியல் வல்லுநரால்தான் இத்தனை 

உண்மைகளை அறிந்து  கொள்ள முடியும்.  அந்த விதத்தில் ஔவையும்

தனக்கும் தாவரவியல் அறிவு உள்ளது என்பதை இந்தப் பாடல்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.


அதனையும் ஏற்ற இடத்தில் பயன்படுத்தி

தான் சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்த்துள்ளார்.

   

  ஏதோ நாலுவரியை எழுதினேன் போனேன்

என்பதுபோல் அல்லாமல் உலக உண்மைகளோடு

சொல்ல வந்த கருத்தைச் சொல்லி இருப்பதால்தான்

ஔவையின் பாடல்கள் கால வெள்ளத்தில்

அடித்துச் செல்லப்படாமல் இன்றும் நிலைத்து

நிற்கின்றன என்ற உண்மையை மறுபடியும்

 மறுபடியும் படிக்கும்போதுதான் புரிந்து

 கொள்ள முடிகிறது.

  

 இதற்காகவே ஆம்பலைப் பார்க்க வேண்டும்  

அதன் தன்மைகளை நாமும் அறிந்து

கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா!

இப்படி ஒரு உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டுவதாக

 இருப்பதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு.

  வள்ளுவரும் ஒரு இயற்கை ஆர்வலர் என்பதை,

 "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் 

 உள்ளத்தனையது உயர்வு"

என்ற பாடல்மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

Comments