உள்ளார் கொல்லோ தோழி
உள்ளார் கொல்லோ தோழி....
காதல் நேற்று இருந்தது.
இன்றும் இருக்கிறது.
நாளையும் இருக்கும்.
காதலின்றேல் உயிர்கள் வாழ்தல்
எவ்வாறு?
உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல வாழ்க்கைக்குக் காதல் முக்கியமானது.
காதலில்லாத வாழ்க்கை உயிரற்றது;
உணர்வற்றது;
மகிழ்வற்றது;
அர்த்தமற்றது.
அதனால்தான் இலக்கியங்களில் காதல் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது.
காதல் இயற்கை உணர்வு.
அதைத் தடையிட முடியாது.
கட்டுப்படுத்தலாம்.
ஒரு கன்னிக்குக் காளை மீது காதல் வர
ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
அவனுக்குள் / அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பண்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலே போதும். அது காதலாக மாறிவிடுகிறது.
அப்படி ஒரு காதல் ஒரு தலைவனுக்கும்
தலைவிக்கும் ஏற்பட்டிருக்கிறது.
காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
இப்படிச் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் எதுவரை இப்படியே
காதலித்துக் கொண்டிருப்பது.?
திருமணம் செய்ய வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். அதற்குப் பொருள் தேட வேண்டும்.
காதலே ...
நான் பொருள் தேடும் வரை ஒளிந்திரு...
அடங்கியிரு ....அடக்கமாயிரு என்று ஒளித்தும் மறைத்தும் வைக்க முடியாமல் காதலித்தாயிற்று.
இனி குடும்பம் நடத்தப் பொருள் வேண்டுமே!
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நாள்
இருப்பது?
இப்போது பொருள் தேட தலைவன் சென்று விட்டான்.
நாட்கள் கடந்தன.
வருவாரோ மாட்டாரோ
என்னை நினையாதிருப்பாரோ
என்று புலம்புகிறாள்
தலைவி.
இப்போது தலைவியை ஆறுதல்படுத்தும்
இடத்தில் தோழி இருக்கிறாள்.
ஏன் இப்படிப் புலம்புகிறாய்? அவர் எப்படி உன்னை மறப்பார்?
மறக்கத்தான் முடியுமா
அவரைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்
அவரை மறக்கத்தான் விடுமா?
என்கிறாள் தோழி. அப்படி என்ன நிகழ்வு தலைவனுக்கு தலைவியை நினைவு படுத்திவிடும்.?
தோழியின் கூற்றாக வரும் பாடல்
இதோ உங்களுக்காக....
உள்ளார் கொல்லோ- தோழி! கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார் ,
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.
- பாடியவர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
" பாலை நிலத்தில் ஆறலை கள்வர்கள் வழிப்பறி செய்ய வருவார்கள் .அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அந்நில மக்கள் இரும்பாலான அம்புகளைச் செய்து வைத்திருப்பார்கள்.
அவற்றை துருப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது உரசிப் பார்த்து சரி செய்வது வழக்கம்.
அப்போது அவர்கள் தங்கள் விரல்களால் நெருடிப் பார்ப்பதுண்டு. அந்த நெருடலின்போது எழும் ஓசையானது செங்கால்களை உடைய பல்லியானது தன் துணையை அழைக்க எழுப்பும் ஓசையைப் போலவே இருக்கும். கள்ளிக்காட்டைக் கடந்து வரும்போது அந்த ஓசையானது நம் தலைவன் காதுகளில் விழும்.
உடனே தலைவனுக்கு உன் நினைப்பு எழும்.. உன் நினைப்பு வந்த பின்னரும் அவனால் அங்கு தங்கி இருக்க முடியாது .ஆகையால் விரைவாக வந்துவிடுவான்" என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறாள் தோழி.
செங்காற் பல்லி தன் துணையைத் தேடுகிறது. நம் தலைவியும் நம்மைத் தேடிக் கொண்டிருப்பாள்.. உடனே நான் அவளைப் சென்று பார்க்க வேண்டும்கவின்மிகு காட்சியாக கண்முன்னர் வந்து நிற்க வைத்தப் புலமையால்தான்
இந்தப் புலவர் பாலைப்பாடிய பெருங்கடுங்கோ
என்று அழைக்கப்பட்டிருப்பாரோ?
இருக்கலாம்...
ஒற்றை வரியில் மொத்த உள்ளங்களையும் கற்றையாக அள்ளிக்கொண்ட வரி
பிரிவின் வலியைப் சுமந்து நிற்கும் வரி
பேசாத உணர்வுகளைப் பேச வைத்தவரி
உள்ளார் கொல்லோ தோழி....!
கருத்துகள்
கருத்துரையிடுக