தத்தம் விதியின் பயனே பயன்

தத்தம் விதியின் பயனே பயன் 

ஏகன் என்று ஓர் ஏழை விவசாயி
இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று
ஓர் அருமையான 
மனைவி வாய்த்திருந்தாள்.


வாய்க்கு ருசியாக வகைவகையாக
உணவு சமைத்துக் கொடுப்பாள்.

ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர்
சமைத்து வைத்துவிட்டு வீட்டுத்
திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக்
காத்திருப்பாள்.

ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து
வைக்கும்படி
சொல்லி விட்டுச் சென்றான்.
வள்ளியும் ஏகன் சொல்லியது போல
வரகு சோறும் கறியும் சமைத்தாள்.

சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக
சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி
சாப்பிட்டுப் பார்த்தாள்.
அடடா....என்ன பிரமாதம்!

என்றுமில்லாத படி இன்று உணவு
இவ்வளவு சுவையாக இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று
மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள்.

இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை.
உணவின் சுவை இன்னும் கொஞ்சம்
சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு
என்று சுண்டி இழுத்தது.

அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு
பானையில் இருந்த மொத்த சோற்றையும்
சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி.

உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும்
உண்டல்லவா?
வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன?

அப்படியே தூங்கிவிட்டாள் வள்ளி.
ஏகன் வயலில் வேலை செய்துவிட்டு,
பசியோடு வீட்டிற்கு வருகிறான்.
அங்கே...வள்ளி தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

என்ன இது ?
ஒருநாளும் இல்லாத திருநாளாக
வள்ளி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
அசதியாக இருக்கலாம்.
சரி அப்படியே தூங்கட்டும் என்று
சமையலறைக்குள் சென்று பானையைத்
திறந்து பார்க்கிறான்.

பானையில் சோறு ஒன்றும் இல்லை.
அங்கங்கே ஒற்றைப் பருக்கை ஒட்டி
இருந்து பல்லைக்காட்டிக் கொண்டு
இருந்தது.

ஏகனுக்கோ ஏகப்பட்ட பசி.
பசியில் கோபம் அதிகமாகியது.

என்ன பெண் இவள்?
கணவனுக்குச் சோறு வைக்காமல்
மொத்தத்தையும் தின்றுவிட்டு
எப்படி நிம்மதியாகத் தூங்குகிறாள்.

இவளை....என்றபடி அருகில் கிடந்த
ஒரு கம்பை எடுத்து அடித்து விட்டான்.
அலறியடித்து எழும்பிய வள்ளி
"தெரியாமல் சாப்பிடுட்டேங்க"
என்று கணவனிடம் மன்னிப்புக் கேட்டுப்
பார்த்தாள்.
அவன் மன்னித்து விடுவதாக இல்லை.

போ...உன் பெற்றோர் வீட்டுக்கு என்று
வெளியில் தள்ளி கதவைச் சாத்திவிட்டான் ஏகன்.

இப்போது வள்ளிக்கு பெற்றோர்
வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழி
தெரியவில்லை.
அழுதுகொண்டே பெற்றோர் ஊருக்குச்
செல்கிறாள். நல்ல வெயில்.
போகும் வழியில் ஒரு மரத்து நிழலில்
அமர்ந்து போகவா ?வேண்டாமா?
என்று அரைமனதோடு அமர்ந்திருக்கிறாள்.
 
இப்படி  ஒரு நிலையில் போனால் நாலுபேர்
நாலு விதமாகப் பேசுவார்களே.

கணவனுக்கு சோறு வைக்காமல் 
தின்றுவிட்டு அடிவாங்கி வந்து
நிற்கிறாள் என்று ஊரே கூடி பேசும்
என்று ஒரு கலக்கத்தோடு நெடுநேரமாக
மரத்தடியிலேயே அமர்ந்து
அழுதுகொண்டிருக்கிறாள்.

இது இப்படியிருக்க,வீட்டிலிருந்த
கணவனுக்கு மனசே சரியில்லை.

சே.....இப்படி அடித்துவிட்டோமே!

அவள் என்ன அப்படி பெரிய தப்பு
செய்துவிட்டாள்?

நான் அப்படி அடித்துத் 
துரத்தியிக்கக்கூடாது.
போய் சமாதானப்படுத்தி அழைத்து
வருகிறேன் என்று வள்ளியின்
ஊரை நோக்கி வருகிறான்.

அங்கே...வள்ளி மரத்தடியில் அமர்ந்திருக்கிறாள்.
 அவளிடம் சென்று
சமாதானம் பேசிப் பார்க்கிறான்.

வள்ளி பிடிவாதமாக வர மறுக்கிறாள்.
இப்படி இருவருக்குள்ளும் விவாதம்
நடந்துகொண்டிருக்க
அந்த நேரம் ஔவை அந்த வழியாக வருகிறார்.

 ஏது உங்கள் பிரச்சினை என்று
விசாரிக்கிறார்..

இருவரும் மாறிமாறி ஒருவர் மேல் ஒருவர்
குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

ஓ....சோறுதான் உங்கள் பிரச்சினையா?

இன்றைக்கு உனக்கு நேர்ந்த படி
இவ்வளவுதான்.
இதற்குப்போய் சண்டை போடலாமா?

 எனக்கு நேர்ந்தது இவ்வளவுதான்
 என்று  எண்ணி 
மனதைக் தேற்றிக்கொள் 
என்று சொல்லி சமாதானமாக
போகும்படி அறிவுறுத்தினார் ஔவை.

அதற்காக அவர் பாடிய பாடல் 
இதோ உங்களுக்காக..


"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்"

         மூதுரை பாடல் : 19

கடலில் மிகுதியாக
நீர் இருக்கிறது என்று
எவ்வளவுதான் அமுக்கி அமுக்கி 
அளந்தாலும் நாழி அளவு பாத்திரம்
நான்கு நாழி நீர் கொள்ளளவு
உடையதாக மாறிவிடுமா?

முடியாதல்லவா?
அதுபோல எவ்வளவுதான் செல்வமும்
நல்ல கணவனும் பெற்றிருந்தாலும்
மகிழ்ச்சி என்பது முன்செய் 
வினைகளைப் பொறுத்தே அமையும்.

அவரவர்க்கு விதித்த அளவின் படியே
அவற்றை அனுபவிக்க முடியும்.
இன்று எனக்கு விதித்த விதி இதுதான்
என்று மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்"
என்றார் ஔவை.


ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும்
கடவுள் அவருக்கான பெயர் எழுதி வைத்திருப்பார்
என்று பெரியவர்கள் சொல்ல 
கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவேளை உண்மையாகக் தான்
இருக்குமோ?
இன்று ஏகனுக்கு பட்டினி என்று
எழுதியிருந்தால் யாரால் தடுக்க முடியும்?

அதைத்தான் ஔவை 
இப்படிச் சொல்லியிருப்பாரோ?

இன்று உண்மையும்  இதுதான்.

"நமக்கானது மட்டுமே 
நமக்குக் கிடைக்கும்."
என்று திருப்தி பட்டுக்கொள்ள
வேண்டியது தான்.

"...தத்தம் விதியின் பயனே பயன்"

காலத்திற்கும் மறக்க முடியாத
அருமையான
பாடல் இல்லையா?




Comments

  1. மிக மிக அருமையான பதிவு.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts