சிற்றூறல் உண்ணீராகி விடும்
சிற்றூறல் உண்ணீராகி விடும்
ஒரு பொருளின் தரம் என்பது
அதன் உருவத்தைப் பொருத்ததல்ல.
அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடு
இவற்றை வைத்துதான்
அவற்றின் தராதரம் நிர்ணயிக்கப்படும்.
யாரையும் உருவத்தைப் பார்த்து
மதிப்பீடு செய்ய வேண்டாம்.
அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து
மதிப்பீடு செய்யுங்கள்
இதைத்தான் வள்ளுவரும்,
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து"
என்று சொல்லியிருப்பார்.
உருவம் சிறிதாக இருக்கும் அச்சாணி கூட
பெரிய தேர் சரிந்துவிடாமல்
தாங்கிப் பிடிக்கும் திறன் கொண்டது.
அதுபோல உருவம் சிறிதாக
இருக்கும் மனிதர்களும் பெரிய காரியங்களைச்
செய்யும் திறன் பெற்றவர்களாக
இருப்பர்.
எங்கே? யார் ?எப்படி இருக்கிறார்
என்பது முக்கியமல்ல. அவருடைய
செயல்பாடு எத்தனைபேர்
பயன்படும்படி அமைந்துள்ளது
என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட
வேண்டும்.
இதைத்தான் ஔவையும்,
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா -
கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்"
மூதுரை : பாடல் : 12
என்கிறார்.
"தாழையின் மடல் பெரிதாக
இருக்கிறது. ஆனால் மகிழம்பூ
வடிவில் சிறிதாக இருக்கிறது.
ஆனால் இவை இரண்டின்
மணத்தையும் ஒப்பீடு செய்து
பார்த்தால் மகிழம்பூவின் மணம்
மிகுதியாக இருக்கும்.
இனிமையானது. மனதிற்கு மகிழ்ச்சி
தருவது.
கடல் பரப்பளவில் பெரிது.
நிறைய தண்ணீர் கொள்ளளவு
கொண்டது. பரந்து விரிந்து
கிடக்கும்.
ஆனால் தாகம் ஏற்பட்டால்
அதன் தண்ணீரைக்
குடிக்க முடியுமா?
தாகம் தணிக்க கடல் நீர்
உதவுமா என்று கேட்டால் உதவாது
என்போம்.
ஆனால் அதனருகில் தோண்டப்பட்ட
சிறிய நீரூற்றின் நீர் குடிப்பதற்கு
உகந்ததாக இருக்கிறது.
நம் தாகத்தைத் தீர்க்க உதவுகிறது.
சிறிய ஊற்று நீர் மிகுந்த
பலனளிக்கிறது.
அதனால் அளவைப் பார்த்து
அதாவது உருவத்தைப் பார்த்து
எந்த ஒரு பொருளையும் மதிப்பீடு
செய்ய வேண்டாம் .
அதன் பயன் ,தன்மை,பண்பு இவற்றைப்
பார்த்து மதிப்பீடு செய்யுங்கள்"
என்கிறார் ஔவை.
நல்ல கருத்து இல்லையா?
இதைத்தான் கணியன் பூங்குன்றனாரும்
"பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே"
என்று சொல்லியிருப்பாரோ?
Comments
Post a Comment