கொன்றை மலர் சொன்ன பொய்
கொன்றை மலர் சொன்ன பொய்
சங்க இலக்கியப் பாடல்களில் கொன்றை
மலருக்கு என்று தனி இடம் உண்டு.
காட்டில் கொன்றை மலர்கள் பூத்துக்
குலுங்கும் அழகிய காட்சியைத் தம்
கவிதைகளில் கொண்டு வந்து காட்டி
நம்மையும் கொன்றை மலர்களைத்
திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை பல
புலவர்களுக்கு உண்டு.
தத்தமது கற்பனைக்கு ஏற்ப தாம்
சொல்ல வந்த கருத்தை தமது
கதாப்பாத்திரங்கள் மூலமாக
அழகுபடக் கூறி தமது புலமையை
மெய்ப்பித்து நிற்பது புலவர்களின் தனிச்சிறப்பு.
அந்த வகையில் ஓதலாந்தையார் என்ற
புலவர் கொன்றை மலரைப் பற்றிப்
பாடிய பாடல் இப்படி ஒரு பாடலா?
என்று நம்மை வியக்க வைக்கிறது.
எந்தப் பூ மலர்ந்திருப்பதைப் பார்த்தாலும்
நிற்க வைத்து கேள்வி கேட்க
வைக்கிறது.
கார்காலத்தை வரவேற்பதற்காக
கொன்றை மரங்கள் பூக்களைத் தலையில்
சூடி நிற்பது கண்கொள்ளாக் காட்சிதான்.
மறுப்பதற்கில்லை.
அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும்
மனதை நெகிழ்ச்சி கொள்ள
வைக்கிறது.
அந்த மலர்ச்சிக்குள் மற்றுமொரு
வன்மம் பொதிந்தல்லவா
கிடக்கிறது.
அந்தப் பூக்களின் புன்சிரிப்புக்குள்
கள்ளப்பொய்யொன்று
மறைந்து கிடந்திருக்கிறது.
கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள்.
கொன்றை மலர் பற்றிய கவிதையும்
பொய்யைச் சுமந்து வந்திருப்பதில்
தப்பில்லையே!
கொன்றை மலருக்குள்
பொய்யைப் பொதிந்து
மெய்யாய்
நம் அனைவரையும் தம் பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை
ஓதலாந்தையாருக்கு உண்டு.
தோழி ஒருத்தி தன் தலைவியோடு
காட்டிற்குச் செல்கிறாள்.
காடெங்கும் கொன்றை
மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்துத்
கிடக்கின்றன.
வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து
தேனுண்ட மயக்கத்தில்
ரீங்காரமிட்டு களிப்பேருவகை
கொண்டு சுற்றித் திரிகின்றன.
இந்தக் காட்சி எப்படி இருக்கிறது
தெரியுமா?
பெண்கள் மலர்களைச் சூடியிருப்பது
மட்டுமல்லாமல்
பொன்னிற அணிகலன்களையும்
அணிந்து நிற்கும் அழகு காட்சியாக
தெரிகிறது.
ஆனால் என் தலைவி
கார்காலத்திற்காக காத்திருக்கிறாளே!
இது கார்காலக் காட்சி ஆயிற்றே!
கார்காலத்தில் வந்துவிடுவேன்
என்று சொல்லிப்போன தலைவன்
இன்னும் வரவில்லையே!
தலைவி் கார்காலம்
வந்துவிட்டது என்பதை அறிந்தால்
ஆற்றாமையால் துவண்டு போவாளே !
பிரிவுத் துயரால் வெம்பிப்
போவாளே!
என் தலைவியும் என்னைப்போலவே
இந்தக் கொன்றை மலர்கள்
பூத்திருப்பதைப் பார்த்ததும்
கார்காலம் வந்துவிட்டது என்பதை
உணர்ந்திருப்பாளோ ?"
இப்படி வருந்துகிறாள் தோழி.
தோழியின் உள்ளக் கிடக்கையை அறிந்து
கொண்டாள் தலைவி.
வருந்திய தோழிக்கு என்ன பதில் சொல்லி
இருப்பாள் தலைவி என்று
நினைக்கிறீர்கள்.?
நீங்களே கேளுங்கள்.
வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் ;அவர் பொய் வழங்கலரே !
குறுந்தொகை: பாடல் :21
கொன்றை மலர்கள் பூத்துக் கிடக்கின்றன.
அதனால் கார்காலம் வந்துவிட்டது
என்று நீ நினைக்கிறாய்.
அப்படி நீ நினைப்பதில் தவறேதும் இல்லை.
கார்காலம் வந்ததென்று கொன்றை
பொய் சொல்கிறது .
அப்படி என்ன பொய் சொல்லி
விட்டது கொன்றை என்கிறாயா?
கார்காலத்தில் வருவேன் என்று
சொல்லிச் சென்ற என் தலைவன்
இன்றுவரை வரவில்லை.
என் தலைவன் வரவில்லை என்றால்
கார்காலம் வரவில்லை
என்றுதானே அர்த்தம்.
கார்காலத்தில் பூக்கும்
கொன்றை மலர்கள் பூத்துக்
குலுங்கிக் கிடப்பதால் மட்டும்
கார்காலம் வந்தது என்று எப்படி
சொல்லிவிட முடியும்?
எனக்குக் கொன்றை மலர்
கார்காலத்தில் பூக்கும்
என்பதிலேயே இப்போது ஒரு ஐயம்
வந்துவிட்டது.
நம்பமாட்டேன்....நான் நம்பமாட்டேன்.
கொன்றை மரம் தன் பூக்களைப்
பரப்பி கார்காலம் வந்துவிட்டது
என்று சொல்லி நிற்பதை நான்
ஒருபோதும் நம்ப மாட்டேன்.
என் தலைவன் பொய்
சொல்ல மாட்டான்...அவன் வரவில்லை
என்றால் இது கார்காலமாக
இருக்க முடியாது.
இந்தக் கொன்றை மரங்கள்தான்
தவறான காலத்தில்
பூத்துக் கிடக்கின்றன.
இந்தக் கொன்றை மரங்கள்
கார்காலம் வருவதற்கு முன்னதாகவே
பூத்துவிட்டது என்று நினைக்கிறேன்.
கானம் கார் எனக் கூறினும் யான்
தேறேன் தோழி!
என்னவொரு நம்பிக்கை!
தலைவன்மீது பழிசுமத்த
மனமில்லாது
கொன்றை மீது
பழி சுமத்தும் இந்தத்
தலைவியின் அசைக்கமுடியாத காதலை
என்னவென்பது?
எப்படிக் கொண்டாடுவது?
இப்படியொரு நம்பிக்கையா?குற்றம் இயற்கை மீதே தவிர
என் தலைவன் மீது அல்ல.
கவிதைக்கு மட்டுமா பொய்யழகு?
கற்றையாய் மலர்களைச்
சுமந்து நிற்கும் கொன்றை மலரும்
ஓதலாந்தையார் சொல்லிய
ஒற்றைப் பொய்யால்
நம் கண்முன்னே வந்து
கண்சிமிட்டி
அழகுகாட்டி
நிற்கிறது பாருங்கள்!
"கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன்..."
.
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பாடல் மற்றும் விளக்கம். நன்றி. தலைவி தலைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வாசித்த அந்த ஒரு கணம், கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரே வந்து விட்டது. நல்ல வேளை, கொன்றை மலர்கள் பொய் சொன்னதாகச் சொல்லி நிறுத்திவிட்டாள் தலைவி. நான் மட்டும் தலைவியாக இருந்தித்திருந்தால், பொய் சொன்ன கொன்றை மலர்களின் தலையை கொய்த்திருப்பேன்.
ReplyDeleteதங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாசித்து நிறைகுறைகளை எழுதுங்கள்.
Deleteசோர்வாக இருந்தபோது
உங்கள் கருத்து மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது..
நன்றி தம்பி.