என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்?

என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்?


"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"
என்று சொல்லித் தந்த ஔவைக்கு
அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை.

சங்கு எத்தனை பேருக்குத்
 தெரியுமோ என்ற ஐயம் ஔவையின்
 மனதில் எழுந்தது.
 தெரிந்தவர்கள் நான் சொன்ன
 உவமை மூலம் சொல்ல வந்த
 கருத்தைப் புரிந்திருப்பார்கள்.

தெரியாதவர்களுக்கு 
 புரிய வைக்க வேண்டுமே!
 அதற்கு என்ன செய்வது?
 எல்லாருக்கும் புரியும்படியான
 இன்னொரு பொருளைக் கையிலெடுத்து
 விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம்.
 அப்படியாவது புரிகிறதா என்று
 பார்ப்போம் என்று நினைத்தார்
  ஔவை.
 
 நாமும் பல நேரங்களில் 
 புரிந்து போல தலையை ஆட்டுவோம்.
 ஆனால் புரிந்திருக்காது.
 சரி போகட்டும் என்று அப்படியே கடந்து
 போய்விடுவோம்.
 
 திரும்பத்திரும்ப
சொல்லித்தரும் போதுதான்
புரிந்து கொள்வோம்.
அல்லது சில நேரங்களில்
வாசித்த மறுநிமிடமே மறந்துவிட்டு
கண்டும் காணாமல் போய்விடுவோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக தெரிந்த
உவமைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கும்
கருத்து ஒருபோதும் மறக்காது.
பசுமரத்தாணி போல அப்படியே 
மனதில் பதிந்து போகும்.

ஔவை சிறந்த உளவியலாளர் 
ஆயிற்றே. நம்மை அப்படியே விட்டு
விடுவாரா?

கையைப் பிடித்து இழுத்து
எங்கே போறீங்க...?
இன்னும் இருக்கிறது. கேட்டவிட்டுப் போங்க
என்று நிற்க வைக்கிறார்.

ஔவையே கையைப்பிடித்து
இழுக்கும்போது நிற்காமல் 
போய்விட முடியுமா
என்ன?

வாருங்கள்...
என்னதான் ஔவை மறுபடியும் 
சொல்ல ஆசைப்படுகிறார்
என்று கேட்டுத்தான் பார்ப்போமே!


"சீரியர் கெட்டாலும் சீரியரே
சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும்?
சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்
என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக்கால் "

            மூதுரை பாடல் : 18

என்கிறார் ஔவை.

பொற்குடம் உடைந்தாலும் அதன்
சிதறல்கள் பொன்னாகத்தான் இருக்கும்.
பொன் உடைந்து போனாலும்
அதன் மதிப்பை இழந்து விடாது.

அதுபோல சிறந்த பண்புடையவர்கள்
தன் நிலையில் தாழ்ந்து போகும் 
சூழல் ஏற்பட்டாலும்  தங்கள்
பண்பை ஒருபோதும் இழக்கமாட்டார்கள்.

ஆனால் மண்குடம்
கீழே விழுந்து உடைந்து
போனால் அதன் சிதறல்கள் 
என்னாகும்?

தன் தன்மையை முற்றிலுமாக
இழந்து போகும்.
அதனைத் தூர வீசிவிடுவதைத் தவிர
அதனால் வேறு எந்தப் பயனும்
இருக்காது.

அதுபோல சிற்றறிவாளர்கள்
தாழ்ந்து போனால்  என்னாவார்கள்?

உடைந்த மண்குடம் போன்று
தன் மதிப்பினை முற்றிலும் 
இழந்தவர்களாக 
தூர வீசி ஒதுக்கப்பட்டுப் போவார்கள்"
என்கிறார் ஔவை.


பொற்குடத்தையும் மண்குடத்தையும்
கையில் கொடுத்து,
 உடைந்தால்
என்னாகும்கொல்
 என்ற  ஒரு கேள்வியைக் கேட்டு
 விடையை எழுதி
மதிப்பீடு நீங்களே வழங்கிக்
கொள்ளுங்கள் என்பதுபோல 
அமைந்திருக்கிறது பாடல்.

அருமையான  சிந்தனைக்குரிய
பாடல் இல்லையா?


சீரியர் - சிறப்புடையவர்

Comments

Popular Posts