அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல....

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல


"கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்
 தம்மோடு
கூடுதல் கோடி பெறும் "

என்று கோடியை அள்ளி விட்டு
அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை.

ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே
என்று நமக்கும் உறவுகளோடு 
ஒட்டி வாழ ஆசைதான்.
ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும்
தாமரை இலை மேல் நீர் போல 
ஒட்ட மறுப்பவர்களை
என்ன செய்வது?
அப்படி ஒட்ட மறுப்பதற்குக்
காரணம்?
உங்கள் குணமா?
அல்லது உங்களிடம் இல்லாத பணமா?
என்று சிந்தித்துப் பார்த்தால்
இந்த விலகலுக்குக் காரணம்
பணமாகத்தான் இருக்கும்.


"பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர்
பதவி இருப்பவன் பின்னாலும்
பத்துப்பேர் "என்ற பழமொழியைக்
கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த பத்துப்பேர் யார் யார்?
என்று பட்டியலிட்டுப் பாருங்கள்.
அதில்  உறவுகளும் இருக்கும்.


உங்களிடம் பொருள்  இல்லாதபோது
உறவுகள் உறவினர்  என்று சொல்லிக்கொள்ள
விருப்பப்பட மாட்டார்கள்.
இதுதான் எதார்த்தம்.
ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும்
விதிவிலக்கு இருக்கலாம் .
மற்றபடி பெரும்பான்மை
பணத்தின் பக்கம்தான்
நிற்கும்.

ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு
நிறுத்திக் கொள்வர்.

அதனால்தான் ,
"பணம் செய்ய விரும்பு "
என்று பணத்தின் பின்னால்
ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் "

என்பார் திருவள்ளுவர்.

மதிக்கத் தகாதவரையும் மதிப்பு
மிக்கவராக உயர்த்துவது பணத்தைத் தவிர
வேறு எதுவும் இல்லை.

அதனால் "செய்க பொருளை ..."என்று
ஆணையிட்டவர் வள்ளுவர்

இப்போது ஓடி ஓடி
உழைத்துப் பணம் பண்ணியாயிற்று. 
அதை தக்கமுறையில்
காத்துக்கொள்ள வேண்டாமா?

நேற்று பணம் இருந்தது.
இன்று பணம் இல்லை.
இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டால்...?
என்ன நிகழும்?

பணம் இல்லாமல் போய்விட்டால் 
நிலைமை என்னவாகும்?

இதோ இப்படித்தான் ஆகும் என்கிறார்
ஔவை.

எப்படித்தான் ஆகும்?
கேட்டுத்தான் பார்ப்போமே!


"அற்ற குளத்தின் அறுநீர்ப் 
பறவைபோல்
உற்றுழி தீர்வார்  உறவல்லர்-
அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் 
போலவே
ஒட்டி உறுவார் உறவு"

                  மூதுரை : பாடல் - 17

உற்றுழி- வறுமை


"குளத்தில் நீர் இருக்கும்வரை
அதில் வாழும் மீன்களை 
உண்டு வாழ பறவைகள் 
சுற்றி சுற்றி வரும்.
அதே குளத்தில் நீர் வற்றிவிட்டால்...
பறவைகள் வேறு நீர்நிலைகளை 
நாடிச் சென்றுவிடும்.
அதுபோல நம்மிடம் பொருள் இருக்கும்வரை
கூடி உறவாடும் உறவுகள் உண்டு.
அவர்களை உறவுகள் என்று
எண்ணிவிட வேண்டாம்.
உறவு என்றால் எப்படி இருக்க
வேண்டும் தெரியுமா?

குளத்தில் நீர் இல்லாத போதும்
அக்குளத்திலேயே கிடக்கும்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல
எப்போதும் நீங்காதிருக்க
வேண்டும்.
இருக்கிறதோ இல்லையோ
நம்மைவிட்டு என்றும் நீங்காதிப்பதுதான்
உண்மையான உறவு."
என்கிறார் ஔவை.

நமது இன்பத்தில் பங்கெடுப்பதற்கல்ல
உறவு.
துன்பத்திலும் தோள் கொடுக்க
கூடவே இருப்பதுதான் உறவு.

இந்த உண்மையைப் 
புரிந்து கொள்ளுங்கள்.

யார் உறவு என்பதை
அடையாளம் கண்டுகொள்ள
சொல்லித் தந்த அருமையான பாடல்.

இதைப் புரிய வைப்பதற்காக
"அற்ற குளத்தில் அறுநீர்ப்
பறவை போல உற்றுழி தீர்வார்
உறவல்லர்"
என்று உச்சந்தலையில் ஓங்கிஅடித்து
அருமையான குளத்தங்கரைக்
காட்சியை நம்முன் கொண்டுவந்து
காட்சிப்படுத்தி பாடலுக்கு
அழகு சேர்த்திருக்கிறார் ஔவை.

இனி குளத்தைச் பார்க்கும்போதெல்லாம்
உறவுகள் தான் நினைவுக்கு வருவர்
இல்லையா?

அருமையான காட்சி.
ஆழ்ந்த சிந்தனைக்குரிய வரிகள்.


"அற்ற குளத்தில் அறுநீர்ப்
பறவை போல உற்றுழி தீர்வார்
உறவல்லர்"
Comments

Popular Posts