கல்லின் மேலிட்ட கலம்

கல்லின் மேலிட்ட கலம்


உதவி  யாருக்கும் செய்கிறோம்.?
எதற்காகச் செய்கிறோம்?
என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம்?
என்பதை அடிப்படையாகக் கொண்டு தான்
அதன் பெருமை இருக்கிறது.
நாலுபேர் மெச்ச வேண்டும் என்பதற்காகச்
செய்யப்படும் உதவியால்
எந்தப் பயனும் இல்லை.

உதவியின் அருமை தெரியாத
ஒருவர்க்கு நாம் செய்யும்
உதவியாலும் எந்தப் பயனில்லை.

எந்த நேரத்தில் ...எதற்காக
உதவி செய்யப்பட்டது
என்பதை அறிந்து காலமெல்லாம்
நன்றியுடையவராக இருக்கும் 
ஒருவர்க்குச் செய்யும் உதவிதான்
பெருமைமிக்கது. உதவிக்கான 
மரியாதையைப் பெற்றுத்தருவது.

அல்லாத அதாவது என்ன பெரிய
உதவி செய்துவிட்டார்?
நானும்தான் அதற்கு
ஈடாக  ஏதோ செய்திருக்கிறேன்
என்று சொல்லும் ஒருவர்க்கு நாம்
உதவி செய்திருப்போமானால்
அது அந்த உதவிக்கான மரியாதையே
இல்லாமல் செய்துவிடும்.
தகுதி இல்லாத ஒருவருக்கு
உதவி செய்யாதிருங்கள்.

அதனால்தான் வள்ளுவர் ,

உதவி வரைத்தன்று உதவி உதவி 
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து"

என்று சொல்லியிருக்கிறார்.

உதவி செய்யப்படும் அளவைப் பொறுத்துச்
சிறப்படைவதில்லை.
நம்மிடமிருந்து உதவிபெறுபவரின்
பண்பைப் பொறுத்தே அதன்
சிறப்பு இருக்கும்.


உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
ஒரு நன்றியுடைய  அதாவது
 இயலாத ஒருவர்க்குச்
செய்வதுதான் உதவி.
அவருக்குத்தான் அந்த உதவியின்
மதிப்பு தெரியும்.தனக்குத்
தக்க நேரத்தில் அந்த உதவி
கிடைக்காதிருந்தால் தன் நிலைமை
என்னவாகியிருக்கும் என்பதை 
அவரால்தான்
உணரமுடியும்.

பசியுள்ளவனுக்கு உணவளிக்க 
வேண்டும் 
தேவை உள்ளவனுக்கு
உதவி செய்ய வேண்டும்.

அதனால் உதவி செய்வதெல்லாம் இருக்கட்டும்.
யாருக்கு உதவி செய்ய வேண்டும்
என்பதில் கவனமாக இருங்கள்.
ஐயோ பாவம் என்று நீங்கள்
உதவி செய்ய போய் ஒரு மருத்துவர்
புலியிடம் மாட்டிக்கொண்டு
உயிர் விட்ட கதையாக
உங்கள் கதை இருந்துவிடக் கூடாது.
எச்சரிக்கையாக இருங்கள்
என்று நமக்கு  ஒரு அருமையான
ஒரு கதையைச்
சொல்லி கடந்து போயிருக்கிறார்
ஔவை.


ஔவை அப்படி என்ன கதை
சொல்லியிருக்கிறார்?
வாருங்கள் பார்ப்போம்.


"வேங்கை வரிப்புலிநோய்
தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல்
பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மே லிட்ட கலம்"

                 மூதுரை : பாடல் :.  15


புலிக்கு மருத்துவம் பார்க்கின்றார்
ஒரு மருத்துவர். புலியானது
தனது நோய் குணமாகியதும் அந்த
மருத்துவரையே கொன்று தனக்கு
உணவாக்கிக் கொள்கிறது.
அதுபோல  தன்மையறியாச் 
சிற்றறிவாளருக்கு உதவி செய்தால்
மருத்துவர்க்கு ஏற்பட்ட அதே நிலைதான்
உதவி செய்தவருக்கும் ஏற்படும்.
கல்லின் மேல் விழுந்த மட்பாண்டம்
எப்படி நொறுக்கித் போகுமோ
அப்படி செய்த உதவியின் பலனும்
இல்லாமலேயே போய்விடும்."
என்கிறார் ஔவை.


காட்டு வழியாக ஒரு மருத்துவர்
வந்து கொண்டிருக்கிறார்.
அங்கே ஒரு புலியானது
 நோய்வாய்ப்பட்டு
வலியால் துடித்துக்கொண்டிருப்பதைப்
பார்க்கிறார்.

மருத்துவராயிற்றே....
பார்த்தும் பார்க்காதவராக
கடந்து போய்விட முடியுமா?
இயல்பாகவே அவருக்குள் இருக்கும்
இரக்க குணம் அவரை
அங்கேயே தடுத்து நிறுத்தி விடுகிறது.

புலி அல்லவா?
இதற்கு நாம் மருத்துவம் பார்த்தால்
அதன் பின்னால் என்ன நிகழும் ?
என்ற எந்த ஒரு
சிந்தனையும் எழவில்லை.
அருகில் செல்கின்றார்.
அதற்கு மருத்துவம்
பார்க்கின்றார்.
அதன் கால்களைத் தடவிக்
கொடுத்து புலி எழுப்பும் அளவிற்கு
தெம்பூட்டுகிறார்.

இப்போது புலிக்கு சற்று வலி
குறைந்துவிட்டது. ஆனால்
வயிற்றில் பசி.
எங்கே போய் இரை தேடுவது?
அந்த நினைப்பு வந்ததும் 
தலையைத் தூக்கிப்
பார்க்கிறது. அருகில் மருத்துவர்
அமர்ந்திருக்கிறார்.

அருகிலேயே உணவிருக்கும்போது
வேறெங்கு செல்ல வேண்டும்?
மருத்துவரைக் கொன்று உணவாக்கிக்
கொள்ளலாமே?
உடனே புலி மருத்துவமனைகள்
கொன்று உணவாக்கிக் கொள்கிறது.

புலியின் மனதில் தனக்கு
உதவி செய்து
தன் நோயை நீக்கியது
இந்த  மருத்துவரல்லவா?
இவருக்குத் தீமை செய்யலாமா?
என்ற எண்ணம் சிறிதும் எழவில்லை.
காரணம் புலியின் இயல்பு அதுதான்.


உதவியின் மதிப்பே இல்லாமல்
போய்விட்டதே!
அருமையான மட்கலத்தை
கல்லில் போட்டு உடைத்ததுபோல
உதவியின் பெருமையும் ஒரு நொடியில்
இல்லாமல் போய்விட்டதே!

இப்படிப்பட்டவருக்கு உதவி செய்யலாமா?
இப்படி ஒரு கேள்வியை நமக்குள் எழுப்பி
சிந்திக்க வைத்திருக்கிறார் ஔவை.
Comments

Popular Posts