உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா...

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா...."கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் நம்மோடு
கூடுதல் கோடி பெறும்"

என்று நான்கு கோடிப் பாடலைப் 
பாடிய பெருமிதத்தோடு
நடந்து வந்து கொண்டிருந்தார்
ஔவை.

அப்போது இரண்டு பேர்  வயதில்
நீர்ப் பாய்ச்சுவதற்காகச்
சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் வேறு யாருமல்லர்.
உடன்பிறந்த அண்ணன் தம்பிகள்தான்.

அதைப் பார்த்த ஔவையின் நினைவுகளில்
ஏதேதோ எண்ணங்கள் வந்து
போயின.

ஒரே தட்டில் சாப்பிட்டு
ஒரே துணியை மாற்றிமாற்றி
உடுத்து என்று  எனக்கானது
உனக்கானது 
என்று எதையும் பிரித்துப்
பார்க்காது வாழ்ந்த உடன்பிறப்புகள்
இன்று சண்டையிட்டுக் கொள்கின்றன.

எங்கோ பிறந்தவர்கள் 
நட்பு என்ற பெயரில்
துன்ப காலத்தில் தோள்கொடுத்து
நிற்கின்றனர்.
இவை எல்லாம் எதனால்?

சுயநலம் பெருகும்போது
உறவுகள் காணாமல் போய்விடுகின்றன.
அன்பு வறண்டு போகிறது.

மனித நேயமும் அன்பும்
நிறைந்திருக்கும் இடத்தில்
கருணை துளிர்த்தது.
கண்டவர் யாவரும் 
நம்மவர்களாகக் கண்ணுக்குத் தெரிகிறார்.


காலம் செய்யும் கோலங்கள்.
காட்சியாய் கண் கண்முன் விரிகின்றன.
பாடல் நமக்கு வந்து கிடைக்கிறது.
இதோ ஔவையின் 
பாடல் உங்களுக்காக...

"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க
வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி-
உடன் பிறவா
மாமலையி லுள்ள  மருந்தே
பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு"

     மூதுரை பாடல் 20


"உடன்பிறந்தவர் மட்டுமே உறவினர்கள்
என்று நினைக்க வேண்டாம்.
நோயானது நம்மோடு உடன்பிறந்தே
 நம்மைக் கொல்லும்.
ஆனால் நம்மோடு பிறவாது
எங்கோ ஒரு மலையில் பிறந்த
மூலிகைதான் அந்தப் பிணி
தீர்க்கும் அருமருந்தாகப்
பயன்படுகிறது.
அதுபோல எங்கோ பிறந்த ஒருவர்கூட
நமக்கு நன்மை செய்பவராக
உதவுபவராக இருக்கலாம் ."
என்கிறார் ஔவை.

உடன்பிறந்தவர் நன்மை செய்வார் என்று
நம்பிவிட வேண்டாம்.
உடன்பிறந்தவராக இருந்தாலும்
நட்டாற்றில் நம்மைத் தவிக்கவிட்டு
ஓடிவிடுபவர்கள் உண்டு.
நோயாகக் கூடவே இருந்து
கொல்பவர்களும் உண்டு.

ஆனால்
அந்நியராக இருந்தாலும்
தக்க நேரத்தில் ஓடி வந்து
கை கொடுத்துத் தூக்கி
உதவுபவர்கள் உண்டு.
உற்ற நல்மருந்தாக உடன் வந்து
உயிர் காப்பவரும் உண்டு

எவ்வளவு அருமையாகச்
சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

உறவு என்று அதிகமாக நெருங்காதே.
அயலார் என்று விலகி ஓடாதே.

இதுதான் ஔவை சொல்ல வந்த
செய்தி.

அருமையான
உவமையின் மூலம் 
எளிமையாகப் புரிய வைத்துள்ளார் இல்லையா?


Comments

Popular Posts