என் பொண்ணு படிச்சவ
என் பொண்ணு படிச்சவ
என் பொண்ணு படிச்சவ.....
நினைப்பு வந்ததும் கண்கள் ஓரமாக
கண்ணீர் கட்டிக்கொண்டு நின்றது.
என்ன இது...
இதற்காகத்தானே இத்தனை நாள் பாடுபட்டேன்.
இப்போது....ஏன் இப்படி
கண்ட கண்ட நினைப்பெல்லாம் வந்து...
வாயை மூடிக்கொண்டு..
நெஞ்சுக்குள்ள ஏதோ
உருள்வதுபோல முட்டிக்கொண்டு
வந்தது.
எப்படிச் சொல்லிபுட்டார்.
நினைச்சுக்கூட பார்க்கல.
நான்தான் நாலு எழுத்து படிக்காமல்
போயிட்டேன்..பிள்ளைகளாவது படிக்கணும்
என்று ஓடி ஓடி உழைத்தேன்.
பையன்கள் இரண்டு பேரையும்
நன்றாகப் படிக்க வைத்தேன்.
இளையது மூன்றும் பொட்டப்பிள்ளைகள்.
இதுகளை என்ன செய்வது.?
ஆண் பிள்ளைகளைப் போல
பெருசா படிக்க வைக்காண்டாம்.
உள்ளூருல பன்னிரண்டாவது வரை
படிச்சா போதும் என்றேன்.
நம்மளால தாங்காது தங்கம்மா
என்றேன்.
அவள் கேட்டாளா?
பொட்டப்பிள்ளைகளும் நல்லா படிக்க
ஆசைப்படுவதுங்க...கடனோவுடனோ
வாங்கி படிக்க வச்சா அவர்கள்
பாட்ட அவங்க பார்த்துகிடுவாங்க...
படிக்க வையுங்கள் என்று மேல பள்ளிக்கூடத்து
சார்வாள் சொல்றாவ என்று
ஒரே நச்சரிப்பு.
சார்வாள் சொன்னாவளா?
அவுக சொன்னா சரியாத்தான்
இருக்கும்.
சரி போனால் போகட்டும் .
தலையை அடகு வச்சாவது
படிக்க வைக்கிறேன் என்று ஒரு வீராப்புல
சொல்லிபுட்டேன்.
படிக்க வச்சது இப்போ எங்க கொண்டு வந்து
நிறுத்தியிருக்கு.....
பொட்டப்படும் புள்ளைகளையும்
படிக்க வச்சுட்டியா?
கடைசியில அதுகள கன்னியாகுமரி
கடவுள் கொண்டுதான் தள்ள போற..
ஏன் அப்படி சொன்னான்?
கிளிப்பிள்ளைக்குச் சொன்னமாதிரி
தங்கம்ம கிட்ட சொல்லத்தான்
செய்தேன். மறுபடியும் மறுபடியும்
அவன் சொல்லிய அந்த வார்த்தைகள்
வந்து....
தப்பு பண்ணிட்டாய்...தப்புண்ணிட்டாய்
என்று செவுளிலேயே
அடிப்பது போல் இருந்தது.
"என்னங்க....வந்த நேரத்திலிருந்து
படுத்தே கிடக்கிறீங்களே ....
உங்க தம்பி என்ன சொன்னாவ?"
ம்....ஒண்ணும் சொல்லலியா?
மூத்தவ படிச்சிருக்கா .....
வேலை பட்டணத்தில் கிடைக்குமா என்று
கேட்டுப் பார்த்துட்டு வாறேன் என்று
போனீய...வந்ததுல இருந்து
வாயே திறக்க மாட்டீங்க...
ஏதும் பிரச்சினையா?" என்றாள் தங்கம்ம.
"அதெல்லாம்
ஒன்றுமில்லை ...செத்த அசதியா
இருக்கு"என்று சொல்லிவிட்டு
திரும்பி படுத்துக்கொண்டேன்.
வேலைக்கு என்ன சொன்னாவன்னு
கேட்டா இப்படி திரும்பி படுத்துகிட்டாரு....
என்று தங்கம்ம புலம்பிக் கொண்டே
சென்றாள்.
"தங்கம்ம போயிட்டா.....
ஆனாலும் மனசு வலிப்பது போல
இருந்தது.
யாருகிட்டேயாவது சொல்லணும்?
யாருகிட்ட சொல்வது?
எல்லாருமே அவன் சொன்னது
சரிதானே நீதான் தப்பு பண்ணிட்டா
என்று சொல்லிட்டா...?
காட்டோடு காலாற நடந்து
காற்றோடு பேசிவிட்டு வந்தால்
மனசில் இருக்கிற பாரத்தை
காற்றில் இறக்கி
வச்சமாதிரி இருக்கும்.
பாரத்தை இறக்கி வைத்துவிட முடியுமா?
பாறாங்கல்லை போட்டு
சுக்கு நூறாக உடைச்சிட்டானே?"
நினைப்பு வர வர அதிகமாகிக் கொண்டே
இருந்தது
அப்படியே வெப்பகுளத்தோரம் சற்று
காலார நடந்து வருவோம்.
என்று எழுந்தேன்.
எழுப்பியதும் லம்பியது.
"பார்த்து..பார்த்து...அப்பா உட்காருங்க...
எங்க போறீங்க...?
கறுக்கலாகப் போவுது .கீழ விழுந்து
கிடைக்கப் போறீய..."
கையைப்பிடித்து இருக்க வைத்தாள்
கனி என் மூத்தப் பொண்ணு.
"ஒன்றுமில்லம்மா...படுத்தே கிடந்ததுல
சோர்வாக தெரியுது.
கொஞ்சம் காலாற நடந்துக்கிட்டு வாறேன்."
"மணி ஆறு ஆகப்போகுது.
இப்போ எங்க போயி நடக்கப் போறிய...?
கால் வலிக்குதா?
கொஞ்சம் எண்ணெய்யைப் போட்டு தடவி
விடட்டுமா?"
வந்து காலைப் பிடித்தாள்
இளையவள் மாலதி.
"வேண்டாம் அதெல்லாம் ஒன்றுமில்லை.
காலை இழுத்துக் கொண்டேன்.
"அப்பா நேற்று அந்த செல்லையா
சித்தப்பா வீட்டுக்குப்
போனியளே அவிய என்ன சொன்னாவ?
"சொல்லணுமா?
சொன்னா நீ தாங்க மாட்டாம்மா"
என்று உள்ளம் சொல்லியது. உதடு மறுத்தது.
"என்னப்பா....அவுக வீட்டுக்குப் போய்விட்டு
வந்ததுல இருந்து ஒரு மாதிரியா
இருக்கிய....என்னப்பா ஆச்சு.
சொல்லுங்க....
அந்த சித்தப்பா ஏதும் தவறா பேசிட்டாவளா?"
"அதெல்லாம் இல்ல....
அவன் எதுக்கு தவறா பேசப் போறான்?"
"அப்புறம் ஏன் உங்க முகம்
ஒரு மாதிரியா இருக்கு?"
என்று விடாமல் கேள்வி
கேட்டாள் கனி.
"பஸ்சுல போயிட்டு வந்த அலுப்பு.
வேறு ஒண்ணுமில்ல..."
"நம்பணும்....இத நாங்க நம்பணும்....
இப்போதானே முதன் முறை
பஸ்சுல போறீய...
வாரத்துல மூணு நாளு சந்தைக்குப்
போறேன்னு பஸ்சுலேயே அலையும்
ஆளு நீங்க.... பஸ்சுல போனதுல
அலுப்புன்னா நம்பிருவோமா?
பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம்
பொருந்தும்படியா சொல்லணும்ப்பா"
என்றாள் மாலதி.
"கனகுவ எங்க காணல.."
கண்கள் கனகாவைத் தேடின.
கனகா அவ பிரண்ட் வீட்டுல
போயி படிக்க போயிருக்கா.
"ஏன் அவ்வளவு தூரம்
அனுப்புனீங்க.... ?வீட்டுல
இருந்து படிச்சா போதாதா?"
'எதுக்கு இப்படி
கோபப்படுறியரு?
எல்லா நாளும் அங்கதான் போயி
படிச்சிட்டு வருவா....உங்க அப்பாவுக்கு
இன்னைக்கு கிறுக்கு பிடிச்சிட்டு
போல இருக்கு ...முழியே சரியில்ல....
இந்தாரும்...ஒரு வாய்
காப்பி தண்ணிய குடியும்.
எல்லாம் சரியாயிடும்."
என்று சீரியபடியே காப்பி தம்ளரை
நீட்டினாள் தங்கம்ம...
"இப்போ என்ன
நான் படுத்துகிடக்கக் கூடாது....
அவ்வளவுதான...
எழும்பிட்டேன்...போதுமா?"
என்று படக்கென்று எழும்பி
உட்கார்ந்தேன்.
"அப்பா...நாங்க கேட்ட கேள்விக்கு
இன்னும் பதில் வரல...."
பக்கத்தில் வந்து அமர்ந்து மோவாயை
என் தோளில் வைத்து கட்டிப்பிடித்தபடி
கேட்டாள் மாலதி.
"கொஞ்சம் தலை
வலிக்கிற மாதிரி இருக்கு.."
என்று கனியைப்
பார்த்து கூறினேன்.
தங்கம்மை விருட்டென்று
வீட்டுக்குள் போனாள்.
இருவரும் அம்மாவின்
பின்னாலேயே சமையலறைக்குள்
சென்று மறைந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடலுல
போட்டு கொல்லு....
கன்னியாகுமரி கடலுல போட்டு
கொல்லு....
மறுபடியும் மறுபடியும் என்னை
அவன் சொல்லிய வார்த்தைகள்
துரத்தி துரத்தி
அடித்தது.
என்ன கேட்டேன். அவன் இப்படி பதில்
சொன்னான்?
பொட்ட பிள்ளைகளை படிக்க
வச்சவுக எல்லாம்
கடைசியில் கன்னியாகுமரி கடலுல
போட்டுதான் கொல்லணுமா?
யார் சொன்னது?
இந்த பச்ச பிள்ளைகளைப் பார்த்தா
அவன் அப்படிச் சொன்னார்?
என் பிள்ளைகளைப் பார்த்தா அப்படிச்
சொன்னான்?
நாளபின்ன பிள்ளைகளைப்
பெத்து வளர்த்திருந்தாலா தெரியும்
பொட்ட பிள்ளைகள்
அருமை என்ன என்பது?"
எனக்குள்ளேயே புலம்பல்
மறுபடியும் தொடர்ந்தது.
என் பொண்ணு படிச்சவ...
ஊரு ஜனமெல்லாம்
பொட்ட பிள்ளைகளை எல்லாம்
நல்லா படிக்க வச்சுபுட்டீரு...
என்று கேட்டப்ப...எவ்வளவு கம்பீரமா
பதில் சொன்னேன்.
ஒரு ஆசையில் படிக்க வச்சுட்டேன்.
வேலைக்கு போணும்பா என்று
வந்து நின்றாள்.
வேலை எல்லாம் நமக்கு ஒத்து வராது.
பொம்பிளை பிள்ளைகளைத் தனியா
ஊரு ஊரா அனுப்ப முடியாது என்று
சொல்லிப் பார்த்தேன்.
"அப்பா இப்போ எல்லாம்
முன்ன மாதிரி இல்ல...
வெளிநாட்டுக்கே தனியா
போய் வேலை பார்க்கிறாங்க
நீங்க இந்த பக்கத்துல இருக்க
பட்டணத்துக்கு அனுப்ப பயப்படுகிய..." என்றாள் கனி.
"தனியா இருக்கணும் என்றுதான்
பார்க்கிறேன்.ஒரு ஆத்திர அவசரத்துக்கு
ஒரு சொந்த பந்தம் இல்லாத இடம்..."
"அப்பா நம்ம செல்லையா சித்தப்பா
பட்டணத்துலதான பெரிய வேலை
பார்க்கிறாவன்னு சொல்லுவிய...
அவியகிட்ட போய் ஒரு வார்த்தை
சொல்லி வையுங்க....
ஒரு வேலை வாய்ப்பாக
கிடைச்சா சொல்ல சொல்லுங்க."
"ஆமாங்க....
நாளைபின்ன ஒரு மாப்பிள்ளை
பார்க்கணுமின்னாலும்
நாலுபேரு காதுல போட்டு
வைக்கணுமில்லையா...போய்
செல்லையா கொளுந்தன் காதுல
பிள்ள பிடிச்சிருக்கா என்பதை
போட்டு வையுங்க..."
என்றாள் தங்கம்ம...
ஆமா...அதுதான் சரியான
தெரியுது.
எனக்கும் மனசுக்குள்ள
இருந்தது. செல்லையா
.....
அவன் அந்த காலத்திலேயே
பட்டம் வாங்கியவன்.
நீதான் படிப்பை தவற விட்டுட்டா .
பிள்ளைகளையாவது நல்லா படிக்க வை என்று பார்க்கும்போதெல்லாம்
சொல்லுவான்.
என் சித்தி மவனா இருந்தாலும்
கூடப் பிறந்தவன் மாதிரி
பாசமா இருப்பான்....அவன் காதுல
என் மவ படிச்சிருக்கான்னு
சொன்னா உதவி பண்ணுவான்
என்று பெருமையாக சொல்லிட்டுப்
போனேன்.
அதற்கு அவன் சொன்ன பதில்தான்
என்னை சுக்குநூறாக்கி
கிடத்தியிருக்கிறது.
காலம்தான் மனுஷனை
எப்படி எல்லாம்
பேச வைக்கிறது...
அவன் சொன்ன அந்த வார்த்தைகள்
என்னை எனக்குள் இருந்த
என் மக படிச்சவ...
என்ற கர்வத்தை
உடைத்துவிட்டதோ?
தெரியாமல் படிக்க வைத்து விட்டேனோ?
ச்சே....இது என்ன நினைப்பு?
அவன் கிடக்கிறான் ...
ச்சே....அப்படி இல்ல...
என் மக படிச்சவ....
என் மக படிச்சவ...
அந்த வார்த்தை எனக்கு
தெம்பு கொடுக்க....கனி என்று
குரல் கொடுத்தபடி எழும்பி
உட்கார்ந்தான்.
என்னப்பா....ஓடி வந்து
அருகில் உட்கார்ந்தாள் கனி.
என் பொண்ணு படிச்சவ..
மெதுவாக
தலையைத் தடவிக் கொடுத்தேன்.
Comments
Post a Comment