முடவனை மூர்க்கன் கொன்றால்....

முடவனை மூர்க்கன் கொன்றால்...

வல்லவனுக்கு வல்லவன் 
வையகத்தில் உண்டு.

யாரும் எனக்கு மிஞ்சியவன்
யார் இருக்கிறார் 
என்ற மமதை கொள்ள முடியாது.


 உங்கள் ஆட்டம் 
 எல்லாம் சிறிது காலம்தான்.
 உங்களையும் அடக்க ஒருவன் வருவான்.
 இது திரைப்படங்களில் மட்டும் தான்
 சாத்தியம். 
 இயற்கையில் அது நிகழுமா?
நமது இயலாமையின் காரணமாக
அவனை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று
கடவுள் கையில் கொடுத்துவிட்டு
கடந்து போய்விடுவோம்.

ஆனால் இது நடக்குமோ?
 நடக்காதோ .?
 யார் அறிவார்?..அந்த நேரத்திற்கு
 நமக்கான ஆறுதல் அந்த வார்த்தைதான்.


திக்கற்றவர்களுக்குத்
தெய்வமே துணை என்ற
நம்பிக்கையில்தான் எளியவர்களின்
வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
நம்புவோம்.
நம்புவது ஒன்றும் தப்பில்லை.
நம்பிக்கைதானே வாழ்க்கை.

நம் நம்பிக்கைக்கு உரமூட்டும்படியான
ஒரு பாடல் விவேக சிந்தாமணியில்
உள்ளது.
பாடலைப் படித்ததும் எளியவர்க்கெல்லாம்
மனதில் ஒரு தெம்பு வந்துவிடும்.
ஆறுதலாகவும் இருக்கும்.
வாருங்கள் பாடல் சொல்கிறது என்ன என்று
பார்ப்போம்.

"முடவனை  மூர்க்கன் கொன்றால்
மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால்
மறலி தானவனைக் கொல்லும்
தடவரை கலைமாதேயித்
தரணியிலுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்த கோலும்
வலியனை யடிக்கும் கண்டாய்!"

          -விவேக சிந்தாமணி 

மறலி- எமன்
தரணி - பூமி

"அழகிய தடவரை கலை மாதே
கேள்!

வலிமையில்லாத திறனற்ற
ஒருவனை மூர்க்கத்தனமான 
குணமுடைய ஒருவன்
கொன்று விட்டால் அவனை
முனி எனப்படும் பேய் கொன்று
போட்டுவிடுவான்.

அப்பாவி ஒருவனை 
வலிமையுடையவன்
கொன்று போட்டுவிட்டால்
அவனை கொல்வதற்கு எமன்
தயாராக இருப்பான்.

இந்த பூமியில் வாழும்
மனிதர்களுக்கு எல்லாம் ஒரே
நீதிதான்.

அது யாதெனில்
அப்பாவி மனிதனை அடித்த
அதே கோல் 
வலிமை உடையவனையும்
அடிக்கும் "
என்கிறது விவேக சிந்தாமணி.

இதனால் நாம் அறிந்துகொள்ள 
வேண்டியது
யாதெனில்,
 நான்தான் வலிமையுடையவன்
என்று யாரும்
மேட்டிமை கொண்டு
திரிதல்  வேண்டாம்.
நீங்கள் அடித்த அதே கம்பு
உங்களையும் அடிப்பதற்காக
காத்துக்கொண்டே இருக்கிறது.
என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


அது  சரியான வேளையில்
உங்களை நோக்கித் திருப்பித்
தாக்கும்.
இதுதான் நீதி.
இந்த உண்மையை அறிந்து
எச்சரிக்கையாக இருங்கள்
என்று சொல்வதாக இருக்கிறது
இந்தப் பாடல்.

ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால்
மடிவான் என்று இதற்காகத்தான்
சொல்லி வைத்தார்களோ?





Comments

Popular Posts