உமி போனால் முளையாதாம்

உமி போனால் முளையாதாம்


இரட்டைப்புலவர்கள் பற்றி நாம்
கேள்விப்பட்டுருப்போம்.
கண்தெரியாதவர் ஒருவர்.
கால் நடக்க முடியாதவன் மற்றொருவர்.
கண் தெரியாதவர் நடக்க முடியாதப்
புலவரை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக
உள்ள திருக்கோவில்களுக்குச் சென்று 
பாடல்கள் பாடுவது வழக்கம்.
இவர்கள் ஒருவர் இன்றேல்
மற்றொருவர் இல்லை.

ஒருவர் கேள்வி கேட்க
மற்றவர் பதில் சொல்வது போலவே
இவர்களுடைய பாடல்கள்
அமைந்திருக்கும்.
அதுதான் இவர்கள் பாடல்களின்
சிறப்பு.

இலக்கணத்தில் 
இரட்டைக் கிளவி என்று ஒன்று
உண்டு. பிரித்தால்
பொருள் தராது இரட்டைக் கிளவி.
சேர்ந்திருந்தால் தான்
இரட்டடைக் கிளவியாகவே கருதப்
படும்.
இரட்டைக் கிளவியைப் பிரித்தால்
பொருள் இல்லாமலே போய்விடும்.
இரண்டு சொற்களும் சேர்ந்திருக்கும் போதுதான்
அந்த சொற்கள் இரட்டைக் கிளவி என்ற
இலக்கணப் பெருமையைக்
கொண்டதாக இருக்கும்.
இப்படி சேர்ந்திருப்பதில் 
சில சொற்களுக்குப் பெருமை
 இருப்பதுபோல
சில பொருட்களும் சேர்ந்திருந்தால்
மட்டுமே 
பெருமைக்குரியதாகக் கருதப்படும்.

குறிப்பாக ஓடு இல்லா
விதைகள் முளைப்பதில்லை.
எந்த நிலையிலும் மேல்
ஓட்டை நீக்கிவிட்டு முளைக்க
வையுங்கள் .அது முளைக்காது.

ஔவையும் தனது மூதுரையில் 
சேர்ந்திருப்பதால்
 நன்மை உண்டா ?இல்லையா?
 என்பதை உவமையோடு
 சொல்ல வந்திருக்கிறார் .
 என்ன சொல்கிறார் என்பதைக் 
 கேளுங்கள்.


"பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம்
கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது
அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்"


        மூதுரை :பாடல்  :11

அரிசிதான் பயன் தரும்.
இந்த உண்மை அனைவர்க்கும் தெரியும்.
அதற்காக நெல்லின் மீது உள்ள
உமியை நீக்கி அரிசியை 
முளைக்க வைத்தால்
அது முளைக்குமா?
முளைக்காதல்லவா?
அரிசியில்தான் முளைப்பதற்கான
ஆற்றல் இருக்கிறது.
அரிசியால் மட்டுமே பயன்
உண்டு.
 இவ்வளவு பெருமைமிகு
 ஆற்றல் இருந்தாலும் உமியை
 நீக்கிவிட்டு அரிசியை முளைக்க
 வைக்க முடியாது.
 
 அரிசியோடு உமியும் சேர்ந்து
 இருக்கும்போது 
 முளை விடும்.
 நெல்லாக வளரும்.
 அதன் பலன் அனைவர்க்கும் 
 கிடைக்கும்.

அதனால் உமிதானே என்று அற்பமாக
எண்ணிவிட வேண்டாம்.

அதுபோலத்தான் எவ்வளவு பெரிய 
ஆற்றல் உடையவருக்கும் உந்து
சக்தியாக ஊக்கம் கொடுப்பவராக
ஒரு சிறு துணை வேண்டும்.
அந்தத் துணை கிடைத்தால்
மட்டுமே அவருடைய செயலில்
ஏற்றம்  இருக்கும்.

அதாவது ஒரு சிறிய செடி
வளர்வதற்கு பற்றுக் கோடு 
தேவையாக இருப்பதுபோல் வாழ்வில்
உயர்வதற்கு  யாராவது ஒருவர்
சிறிய உதவியாவது செய்தால்
மட்டுமே அது சாத்தியமாகும்.

யாரையும் அற்பமாக எண்ண வேண்டாம்.
ஏற்ற காலத்தில் 
நம் வளர்ச்சிக்கு உதவ 
ஒரு சிறிய மனிதர்கூட
காரணமாக இருக்கலாம் .
துணை வலிமை  என்பது
ஒருவருடைய
வளர்ச்சிக்கு இன்றியமையாத
தேவை என்பது இதன்மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருமையான சிந்தனைக்குரிய
கருத்து இல்லையா?


Comments

Popular Posts