இணங்கி இருப்பது தீது

இணங்கி இருப்பது தீது

"உன் நண்பன் யார் என்று சொல்
நீ  யார் என்று 
சொல்கிறேன்" என்பார்கள்

ஒத்த குணம் உடையார்மாட்டே
நட்பு ஏற்படும்.

நீ நல்லவனாய் இருந்தால் உன்னைச்
சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக
இருப்பார்கள்.
நீ தீயவனாக  இருந்தால்...?
உன் நட்பு வட்டமும் தீமையின்
மறு உருவமாகத்தான் அமர்ந்திருக்கும்.

ஒரு கெட்டவன் பக்கத்தில் போய்
ஒரு நல்லவனால் அமர முடியாது.
அதேபோல் ஒரு கெட்டவன் நல்லவன் அருகில்
அமர விருப்ப மாட்டான்.

"இடுக்கண் களைவதாம் நட்பு"
என்று வள்ளுவர் சொல்வதால்
நல்ல நண்பர்கள் நம் துன்பத்திலிருந்து
நம்மை கைதூக்கிவிடுபவர்களாக இருப்பர்.

நல்லவரோடு நட்பு கொள்க என்பதுதான்
அனைவரும் நமக்குச் சொல்லித்தந்த
பாடம்.

"கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு "

என்பார் வள்ளுவர்.

தம் பேச்சும் செயலும் வெவ்வேறாக உள்ளவரின்
நட்பு கனவில் கூட துன்பம் தருவதாக
அமையும்.
ஆதலால் அப்படிப்பட்ட தீயவனோடு
நட்பு கொள்ளாது விலகி இருங்கள் 
என்கிறார் வள்ளுவர்.

நல்லவர்களோடு நட்பு கொள்க.
தீயவர்களிடமிருந்து விலகியிருப்பீராக
என்பது தான் நாம் கற்றுக்கொள்ள
வேண்டிய பாடம்.

ஔவையும்  தீயவர் பக்கம் நம்மைத்
திரும்ப வைத்திருக்கிறார்.
தீயவர் பக்கமே திரும்பக் கூடாது 
என்று இருக்கிறேன்.
இப்போது போய் தீயவர் பக்கம் ஔவை 
திரும்ப வைத்துவிட்டார்
என்று என்னையும்திருப்பிவிடாதீர்கள்
என்கிறீர்களா?

இரண்டு பக்கமும் திரும்பிப்
பார்த்தால் தானே சரியான திசையில்
பயணிக்க முடியும்.
அதனால்தான் தீயவர்களைப் பற்றியும்
சிறிது சொல்கிறேன் .
கேள் என்கிறார் ஔவை.
கேட்டுத்தான் பார்ப்போமே...

பாடல் இதோ உங்களுக்காக

"தீயாரைக் காண்பதுவும் தீதே;
திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-
தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே;
அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது"

              மூதுரை :பாடல் : 9


"தீயவரைப் பார்ப்பது தீமை பயக்கும்.
பயனில்லா அவரின் சொல் கேட்டல்
தீமையாகவே இருக்கும்.
தீயவரைப் பற்றி பேசினால்கூட
அது தீமையில்தான் முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தீயவரோடு
நெருங்கிப் பழகினால்
அது நமக்குத் தீமையைத் தருவது உறுதி"
என்கிறார் ஔவை.


தீயவர்  பக்கம் மறந்தும்
எட்டிப் பார்த்துவிடாதீர்கள்
என்பதை நாலு வரியில் நச்சென்று
சொல்லியிருக்கிறார் ஔவை.
அருமையான கருத்து இல்லையா?
கேட்டுதான் பார்ப்போமே!

Comments

Popular Posts