கவையாகிக் கொம்பாகி....



" கவையாகிக் கொம்பாகி....


"நெட்டை மரங்களென நின்று
புலம்பினர்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் 
துணையாமோ"
என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில்
ஒரு கேள்வையைக் கடுமையாகப்
கேட்டிருப்பார்.

பாஞ்சாலிக்கு நிகழ்ந்த கொடுமையைப்
பார்த்திருந்தும் எதிர்வினையாற்றத்
திராணியில்லாது நின்றிருந்த
மனிதர்கள்மீது வீசப்பட்ட 
விமர்சனம் இது.

நீங்கள் எல்லாம் மரங்கள் .
மரங்கள் நெடுநெடுவன
வளர்ந்திருந்தாலும் ஒரு பார்வையாளனாக
நிற்குமே தவிர எதிர்வினையாற்றத்
தெரியாது.

அதனால்தான் அவர்களைப் பார்த்து மரம்
என்றார் பாரதி.

ஆனால் இன்னொருவர்
சபையில் சும்மா நிற்பவர்களைப் பார்த்து
 நல்மரம் என்று சொல்லிவிட்டார்.
என்ன ....சும்மா நிற்பவர்கள்
நல்மரமா?
இருக்காதே....இருக்கவும் கூடாதே.
வஞ்சகப் புகழ்ச்சியாக
இருக்குமோ?

இருக்கலாம்...இருக்கலாம்.


யாரைச் சொல்கிறார்?
எதற்குச் சொல்கிறார்?

வாருங்கள்.
கேட்டுத்தான் பார்ப்போமே...

"கவையாகிக் கொம்பாகிக்
காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-
சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம். "

          மூதுரை : பாடல் 13


"நெருக்கமான கிளைகள் உள்ளன.
அதன் கொம்புகள் நீண்டு
கிடக்கின்றன.இவ்வாறு
காட்டில் உயரமாக வளர்ந்து
நிற்பவை எல்லாம்
நல்ல மரங்கள் என்று 
எண்ணிவிடாதீர்கள்.
கற்றோர் நிறைந்த சபையில்
ஒருவர் நீட்டிய ஓலை குறிப்பில்
உள்ள சொற்களை வாசிக்கத்
தெரியாமல் நிற்கிறான் ஒருவன்.
பிறர் முகக்குறிப்பை அறிந்துகொள்ள
முடியாது நிற்கிறான் மற்றொருவன்.
இவர்களும் மரங்கள்தான்.
இவர்கள் காட்டிலுள்ள 
மரங்களை விடவும்
நல்ல மரங்கள் "என்கிறார் ஔவை.
அதாவது படிப்பறிவில்லாதவன்
மரத்திற்கு ஒப்பானவன் 
என்று கூறுகிறார் ஔவை.


மரம் நன்கு வளர்வது நன்று. 
பார்ப்பதற்கு
நன்றாக இருக்கும்.
ஆனால் செயலாற்ற முடியாது
நின்றிருந்தால் அது
நல்மரம் என்ற பெயரைத்
தாங்கியிருந்தாலும்
அதனால் யாது பயன்.?

அநீதிக்கு எதிராக தட்டிக்கேட்டத்
துணிவில்லாதவனை
நெட்டை நெடுமரம் என்றார் பாரதி.


படிப்பறிவு இல்லாதவனால்
எப்படி செயலாற்ற முடியும்?
ஒரு பார்வையாளனாகத்தானே
நிற்க முடியும்.
அதனால் படிக்கத்
தெரியவில்லையா?
அப்படியானால் நீங்கள் 
நல்லமரம்தான்.
இவர்களை 
வேறு எப்படி சொல்லிவிட
முடியும்?"
இது ஔவை.

படிப்பின் முக்கியத்துவத்தைத் தலையில்
குட்டி புரிய வைத்திருக்கிறார் இல்லையா?

நல்ல கருத்து .
புரிந்தால் சரி.





























Comments

Popular Posts