உன்னை நம்பு
உன்னை நம்பு
போராட வந்த பின்னர்
புறமுதுகிட்டு ஓடடலாமா?
கழனியில் இறங்கிய பின்னர்
சகதியாகிறது என்று
காலைத் தூக்கலாமா?
இருட்டினில் நடக்கும்போது
கால் ஒலி கேட்கத்தான் செய்யும்.
மழையில் நடக்கும்போது
குடை பிடித்தாலும்
கால் நினையத்தான்
செய்யும்.
கால் நனைகிறதே என்றால்
வெளியில் செல்வதெப்போது?
கரை சேருவோம் என்ற
நம்பிக்கையில்தான்
கப்பலில் ஏறுகிறோம்.
கடலில் கப்பல் கவிழ்ந்து விடுமோ
என்ற ஐயம் எழுந்தால் காலத்திற்கும்
கப்பலில் கால் வைக்க முடியுமா?
பறந்தால் கீழே விழுந்துவிடுவோம்
என்று எண்ணியிருந்தால்
பறவைகளால்
பறக்கத்தான் முடியுமா?
சிறகுகளின் மேல் நம்பிக்கை
வைத்திருப்பதால்தான் பறவைகளால்
நீள்கடலையும் நெடுமலையையும்
கடந்து வர முடிகிறது.
நேற்று அடித்த சூறாவளியில்
அலறிய கொப்புகளையும்
விட்டுவிடாமல் அரவணைத்து
இன்றும் நின்று
கொண்டிருக்கும்
வலிமை மரங்களுக்கு
எங்கிருந்து வந்தது ?
யார் கொடுத்தது?
அட போய்யா...
நீ என்னை ஒடிக்கவும் முடியாது.
பெயர்க்கவும் முடியாது.
எனக்கு என் வேர்களின் மீது
நம்பிக்கை இருக்கிறது
என்று புயலுக்கே சவால் விட்டு
இன்றுவரை நின்று
கொண்டிருக்கும் மரத்திற்கு இருக்கும்
தன்னம்பிக்கை நம்மிடம்
இல்லையா?
விடிய விடிய கொட்டித்
தீர்த்த மழையிலும்
முகம் தொய்ந்துவிடாது மறுநாள்
காலையில் சூரியனைக் கண்டதும்
மலர்ச்சி காட்டி வரவேற்று
நிற்கிறதே பூக்கள்...
அந்தப் பூக்களுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை நமக்கு
இல்லையா?
நெடுநாள் மழையறியா
பூமி.
இனி பசுமையைக் காணவே
முடியாதோ என்று ஏங்கியிருந்த
வேளையில் படபடவென்று
மழைத்துளி விழ நான்கு நாட்களுக்குள்
தலை தூக்கி எட்டிப்பார்க்கும்
புல்பூண்டுகளுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை நமக்கு இல்லையா?
இவை எல்லாம் வாழும்போது
நாம் ஏன் வாழ முடியாது?
முதலாவது நம்மீது நம்பிக்கை
வைக்க வேண்டும்.
மழை காற்று புயல் என அத்தனையையும்
தாண்டி இன்றும் உயர்ந்து நின்று
என்னால் முடியும் என்று சொல்லி நிற்கும்
மரத்தைப் போல் உன்னை நம்பு.
காற்று வீசுவதாலோ
மழை பொழிவதாலோ
பூக்களுக்கு வலி
ஏற்படப் போவதில்லை.
புழுதி வீசியதால் புவி
அழுக்கடைந்து போவதில்லை.
புழுதிவாறித் தட்டியதால்
நீ புழுதியாகிப் போவதில்லை.
அழுக்கடைந்த இலைகள்
அரைமணி நேர மழையில்
அழகாய் கழுவப்படும்.
எவ்வளவு புழுதி வீசினாலும்
ஒற்றை மழைத்துளி என்னை
மகிழ்ச்சி கொள்ள வைத்திடும்
என்ற நம்பிக்கையில்தான்
பூக்கள் சிரிக்கின்றன.
யார் வந்து என்ன இடையூறு
செய்தாலும் என்னால் மகிழ்ந்து
மலர்ந்து நிற்க முடியும் என்று
என்று உலகுக்கு உணர்த்துகிறது.
அமைதியான கடல் திறமையான
மாலுமிகளை உருவாக்குவதில்லை
என்று சொல்வார்கள்.
எனக்கான பிரச்சனையிலிருந்து
மேலெழும்பி வர என்னால்
மட்டுமே முடியும் என்று
உன்னை நம்பு.
விழுந்த இலைகளுக்காக
மரங்கள் கவலைப்படுவதில்லை.
நாம் ஏன் விழுந்ததையே எண்ணி
வீழ்ந்துகிடக்க வேண்டும்.?
மீண்டும் தன்னால் துளிர்விட
முடியும் என்ற நம்பிக்கை
மரங்களுக்கு இருப்பதுபோல்
என்றாலும் வெற்றிபெற முடியும்
என்று நம்பு.
எல்லாரிடமும் கற்றுக்கொள்ள
ஏதோ ஒன்று இருந்துகொண்டுதான்
இருக்கிறது.
உனக்கான ஓர் இடம்
எப்போதும் உனக்கானதாகவே
இருக்கும்.
அதை வெறுமையாக வைப்பதும்
நிரப்பி வைப்பதும் உன் கையில் தான்
இருக்கிறது.
அதற்கான மந்திர சக்தி
உன் கையில் இருக்கிறது
என்பதை நம்பு.
உனக்குப் பிடித்ததைச்
செய்து கொண்டே இரு.
உனக்கு மட்டும்
பிடித்ததைச் செய்.
நேரமும் சூழலும்
எப்போது வேண்டுமானாலும்
மாற்றலாம்.
"நெஞ்சிலே வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று
உரைத்து வந்து நம்மிடம்
கொஞ்சுவது உறுதி"
என்றார் அறிஞர் அண்ணா.
இருட்டை கடந்துவிட்டால்
அடுத்து நாம் காணப்போவது
வெளிச்சம் தான்.
சிறகுகளை நம்பி வானில் பறக்கும்
புள்ளிகள் போல் உன்னை நம்பு.
இந்த உலகின் திறமைசாலி
நீதான்.
நீ மட்டும்தான்.
உன்னால் முடியவில்லை என்றால்
யாரால் முடியும்?
மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் பதிவாக இருந்தது.மிக அருமை.
ReplyDelete