கொன்றது வேந்தைக் குரங்கு

கொன்றது வேந்தைக் குரங்கு


"அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்"

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி மட்டுமன்றி பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணாக இருக்கும் என்பார் வள்ளுவர்.


இதைத்தான் நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இங்கு ஒருவர் அறிவு இருந்தால் பகைவனும் நல்லதுதான் செய்வார் என்கிறார் .மாறாக

அறிவில்லாதவனாக இருந்தால்

நண்பனும் பகைவனாகிப்போவன் என்றும் சொல்கிறார்.


அதெப்படி இருக்க முடியும் 

பகைவன் நல்லது செய்வானா?

அறிவில்லாத நண்பன்  பகைவனாகிவிடுவானா?

நம்பும்படியாக இல்லையே!

குழப்பமாக இருக்கிறதல்லவா?

எடுத்துக்காட்டு தாருங்கள் அல்லது நம்ப மாட்டோம் என்று நெஞ்சு உள்ளுக்குள்ளே கிடந்து முட்டி மோதுகிறதோ?


வாருங்கள்  புலவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பாடல் இதோ உங்களுக்காக 


"அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் 

சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய

வென்றி வனசரன் தன் வேதியனைக் காத்தான் முன்

கொன்றது ஒரு வேந்தைக் குரங்கு "

        -நீதி வெண்பா 


அறிவுள்ளவன் பகைவனாக இருந்தாலும் நண்பனாவான். அறிவாற்றல் இல்லாதவன் பகையாகிப்போவான் அது எப்படி யெனில்....

கீழே வரும் கதைகளை வாசியுங்கள் புரியும்.


அறிவுள்ள பகைவன்  நல்லவனாக மாறிப்போன கதையாவது....

அந்தணர் ஒருவர்க்கு  அந்நாட்டு மன்னன் விலை மதிப்பு மிக்க மாணிக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினான். மாணிக்கத்தை வாங்கிய அந்தணர் அதனை ஒரு துணியில் முடிந்து வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள தன் ஊருக்கு காட்டு வழியாக சென்றுகொண்டிருக்கிறார்.

போகும்போது திடீரென்று ஒரு ஐயம்.

தன் கையில் வைத்திருந்த முடிச்சை அவிழ்த்து அதில் தான் கொண்டு வந்த  மாணிக்கம் இருக்கிறதா என்று 

பார்க்கிறார். மாணிக்கம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி செய்த பின்னர் மேலும் நடக்கிறார்.பொழுது சாயப் போகிறது கையில்  விலை உயர்ந்த மாணிக்கம் வேறு இருக்கிறது. யாராவது வழிப்பறிக் கொள்ளையர்கள் வந்துவிட்டால் ....!

அச்சம் வந்துவிட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் அந்த அந்தணர்.


இப்படிச் செய்யலாமே என்று நினைத்தவர்

படக்கென்று மாணிக்கக் கற்களை எடுத்து வாயில் போட்டு மென்று விடுகிறார்.

வீட்டுக்குப் போய்  கக்கிக்கொள்ளலாம் என்பது அவரது திட்டம்.

இதனை  வேடன் ஒருவன்  பார்த்துவிடுகிறான்.

அந்தணர்  வாய்க்குள் மாணிக்கம்.மாணிக்கத்தை எப்படியாவது கக்க வைத்து அபகரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்தணரை அணுகுகிறான்.. காட்டில் வழிமறித்து வைத்து மாணிக்கத்தைக் கக்கித் தருமாறு அச்சுறுத்தினான்.. இவர்களின் சண்டையைக் கள்வர் சிலர் கண்டனர்.


அவர்கள் கத்தியோடு  அருகில் வந்து மாணிக்கத்தைக் கக்கித் தருமாறு அச்சுறுத்துகின்றனர். நிலைமை விபரீதமாகப் போகிறது என்பதை உணர்ந்த வேடன் அந்தணரைக் காப்பாற்ற எண்ணினான்.


 "மனிதன் வயிற்றில் மாணிக்கம் இருக்குமா? எங்களுக்குள் விளையாட்டாகச் சண்டையிட்டுக்கொண்டோம்; வேண்டுமானால் என் வயிற்றைக் கிழித்துப் பாருங்கள்" என்று கள்வர்களிடம் கூறினான். 

கள்வர்கள் வேடன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். அவன் வயிற்றில் மாணிக்கம் இல்லாதது கண்டு, அந்தணர் வயிற்றிலும் இருக்காது என்று அந்தணரை விட்டுவிட்டனர். இவ்வாறு வேடன் பார்ப்பானைக் காப்பாற்றி விட்டான்.

இதுதான் அறிவுள்ள பகைவன் செய்த செயல்.


அடுத்து அறிவில்லாத நண்பன் என்ன செய்தான் என்று கேளுங்கள்.


அரசன் ஒருவன் குரங்கு ஒன்றின் கையில் வாளைக் கொடுத்து, தன்னைப் பாதுகாக்குமாறு சொல்லிவிட்டு உறங்கிவிட்டான். குரங்கு அரசனுக்குப் பாதுகாப்பாக பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்போது ஈ ஒன்று அரசன் முகத்தில்  வந்து உட்கார்ந்தது.

அவ்வளவுதான்.

நான் ஒருவன்  என் அரசனுக்குப் பாதுகாப்பாக நின்றிருக்கும்போது

ஈயே நீ வந்து என் மன்னன் முகத்தில் உட்காருவாயா?

இதோ உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கையில் வைத்திருந்த வாளால்

குரங்கு அந்த ஈயை வெட்டிற்று.

அதற்குள் ஈ பறந்து விட முகத்தில் வெட்டுப்பட்ட  மன்னன் மாண்டு போனான்.

அறிவில்லாத நண்பன்  உதவி செய்கிறேன் என்று ஏடாகூடாவாக ஏதாவது செய்து நண்பனைக் துன்பத்தில் கொண்டு விட்டுவிடுவான் என்பதற்கு எடுத்துக்காட்டு.

"அறிவுள்ளவன் பகைவனாக இருந்தாலும் நண்பனாவான். அறிவாற்றல் இல்லாதவன் நண்பனாக இருந்தாலும் பகையாகிப்போவான்"

  மீண்ட கதையையும்

மாண்ட கதையையும் 

ஒற்றைப் பாடலுக்குள் 

கற்றையாய்  அள்ளிவந்து 

மொத்தமாய் நம் உள்ளங்களை அள்ளிய அருமையான பாடல் இல்லையா?



கருத்துகள்

Popular Posts