செந்தமிழ் நாடெனும் போதினிலே....

செந்தமிழ் நாடெனும் போதினிலே....செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே..."


இந்தப் பாடலை உச்சரிக்கும் போதே
உதடுகள் இனிக்கும்.
செவிகள் தேனினிய
தமிழ்ப் பாடலைக் கேட்ட
மகிழ்வில் சிலிர்க்கும்.
எத்தனை முறை கேட்டாலும் 
இன்னொருமுறை
இன்னொருமுறை என
இதயம் கேட்கும்.

என் தமிழ்நாடு ....என் தமிழ்நாடு
என்று உரக்கக் கத்த வேண்டும்
என்று உள்ளம் துடிக்கும்.

தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்ததொரு
நிறைவு இருக்கும்.
பாடியவர் பாரதியார் என்பது நான்
சொல்லாமலே
உங்களுக்குப் புரிந்திருக்கும்

பாடல் எளிமையானது தான்.
பள்ளிப்பருவத்தில் அனைவரும்
பாடி ஆடி மகிழ்ந்த பாடல்.
பாடல் உங்களுக்காக...


                 
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

            (   செந்தமிழ்.....)

காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி-என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு


            (    செந்தமிழ்.....)

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு

                (       செந்தமிழ்.....)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-
நின்று
மொய்ம்புறக்  காக்குந் தமிழ்நாடு-
செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

                  (    செந்தமிழ்.......)

நீலத் திரைக்கட லோரத்திலே - 
நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை- 
வட
மாலவன் குன்றம் இவற்றிடையே- 
புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

                     ( செந்தமிழ்....)

கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு- நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின்- 
மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

                    (  செந்தமிழ்....)

வள்ளுவர் தன்னை உலகினுக்கே-
தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- 
நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்- 
மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

                   (  செந்தமிழ்......)

சிங்களம் புட்பகம் சாவக- 
மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-
 அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-
 நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

               (    செந்தமிழ்.......)


விண்ணை யிடிக்கும் தலையிமயம் -
எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-
 சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்-
 தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

                       (    செந்தமிழ்....)

சீன மிசிரம் யவனரகம்-
இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- 
கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும்-
மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

                          (.  செந்தமிழ்.....)


                            - பாரதியார்


ஒட்டுமொத்தப் பாடலிலும் தமிழ்நாட்டின்
பெருமையையும் வரலாற்றையும் பதிவு
செய்துவிட்டார் பாரதி.

செந்தமிழ் நாடு என்ற சொல்லே
இனிமை தருவது.
அந்தத் தமிழ்நாட்டுக்காரன் நான் என்று
சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமிதம்
யாருக்குத்தான் இருக்காது?


காவிரி,தென்பெண்ணை,பாலாறு,
வைகை என்று
ஆறுகள் பல ஓடி செழிப்பான 
நிலப்பகுதிகளைக்
கொண்டதுதான் எங்கள் தமிழ்நாடு.

வேதியர் வாழ்ந்து வேதத்தை 
வளர்த்த பூமி இது.
காதலும் வீரமும்தான் தமிழரின்
அடையாளமெனப் பறைசாற்றி நிற்கும்
பெருமைமிகு பூமி இது.

பொதிகை மலையிலிருந்து
குறுமுனியாம் திருமுனி 
முத்தமிழ் வளர்த்தார் என்னும்
பெருமைமிகு தமிழ்நாடு.

 
கல்வியில் சிறந்தது எங்கள் தமிழ்நாடு.
காலத்தால் அழியாக் காவியம் படைத்த
கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்தது
எங்கள் தமிழ்நாடு.

கணிதம்,வானசாஸ்திரம் போன்று
கலைகளை உலகெங்கும் கொண்டு
சேர்த்த பெருமை
 எங்கள் தமிழ்நாட்டுக்கு உண்டு.

வள்ளுவர் படைத்த உலகப் பொதுமறையாம் 
திருக்குறளை உலகிற்குத் தந்து
உலகளாவியப் புகழைப் பெற்று நிற்பது
எங்கள் தமிழ்நாடு.


 அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்ற கருத்தை
பாடமாகச் சொல்லித் தந்த 
சிலப்பதிகாரம் என்னும் நெஞ்சை அள்ளும்
 காப்பியம் படைத்த தமிழ்நாடு
.

இலங்கை , இந்தோனேசியாவின் ஒரு தீவான
புட்பகம்,சாவகம் ஆகிய பகுதிகளுக்குப் சென்று
 வெற்றிவாகை சூடி தங்கள் புலிக்கொடியையும்  
 மீன்கொடியையும் நாட்டி வந்த
பாண்டிய சோழ மன்னர்கள்
வாழ்ந்த பூமி இது.


சீனா,எகிப்து, கிரேக்கம் போன்ற பல 
தேசங்களுக்குச் சென்று 
வாணிபம் செய்ததோடு
 கலை,அறிவு,போர்த்தொழில்
ஆகியவற்றை வளர்த்த பெருமை
எம் தமிழ்நாட்டுக்கு உண்டு.

தமிழ்நாட்டின் பெருமையை
ஒரே பாடலில் தந்து தமிழக
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்
பார்க்க வைத்த  அருமையான
பாடல்.


Comments

Popular Posts