காக்கை கரைந்தால் விருந்து வருமா?

காக்கை கரைந்தால் விருந்து வருமா?

"விருந்து வருமாயின் கரைந்து காட்டு;
வாராதாயின் நடந்து காட்டு"
இப்படி காக்கையைப் பார்த்து 
பள்ளிப் பருவத்தில் கூறியிருப்போம்.

காக்கை காலையில் இருந்தே கரைந்து
கொண்டிருந்தால் இன்று நம்ம வீட்டுக்கு
விருந்தினர் யாராவது வரப் போகிறார்களா?
என்று அம்மா சொல்வதையும்
கேட்டிருப்போம்.
காகம் கரைந்தால்
போதும் விருந்தினர் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்த காலம்
ஒன்று உண்டு.

ஒரு காலத்தில் விருந்துக்கு  கட்டியம் கூறும்
கட்டியங்காரர்  நம்
காக்கையாராகத்தான் இருந்திருக்கிறார்.

விடுதியில் தங்கி படிக்கும்போது
"கடிதம் வந்தால் பறந்து போ;
பார்வையாளர் வந்தால் நடந்து போ "என்று
காக்கை பின்னால் இருந்த காலம்
ஒன்று உண்டு.
இப்படி காகத்தின்மீது வைத்திருந்த
நமது நம்பிக்கை 
மூட நம்பிக்கையாகக்கூட இருந்திருக்கலாம்.
எது எப்படியோ அதனால் கிடைப்பது
ஒரு சின்ன மகிழ்ச்சி. 

காக்கை பறந்து போய்விட்டால்
கடிதம் வரும் என்று தபால்காரரையே
எதிர்பார்த்து 
எத்தனை நாட்கள் இருந்திருப்போம்.
பழைய நினைவுகளில் 
எத்தனை எத்தனையோ கதைகள்
எழுதலாம்.!


காக்கை இருந்து பனம்பழம்
விழுந்த கதையாக கடிதம்
வந்து விட்டால் போதும் நான் சொன்னேன்
அல்லவா? .....நான் சொன்னேன் அல்லவா?
காக்கை பறந்து போனது என்று....
இதோ பார்... எனக்குக்
கடிதம் வந்திருக்கிறது என்று
ஆனந்தக் கூத்தாடிய நாட்கள்...
அப்பப்பா ....கடிதத்தின் நாட்கள்
களிப் பேரூவகை தந்த நாட்கள்!


இப்படி காக்கைக்கும் நமக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் 
இன்று நேற்று இருந்ததல்ல.
சங்க இலக்கிய காலத்திலேயே
இருந்திருக்கிறது.

நாம் சும்மா காக்கையோடு
விளையாடிய விளையாட்டை
காதலுக்காக விளையாடிப் பார்த்திருக்கிறார்கள்
சங்க காலத்து இளம் வயதினர்.
அவர்களின் காகம் விளையாட்டு
மகிழ்ச்சியும் தந்திருக்கிறது.
அதனை அருமையான பாடலாக
வடித்துத் தந்துள்ளார்
ஒரு புலவர்.

அவரும் நம்மைப்போல் இளம்பருவத்தில்
காக்கை விளையாட்டு
விளையாடியிருப்பாரோ...?

காக்கை கரைந்தால் விருந்து வரும்
 என்ற  கருத்துதான் 
இந்தப்  பாடலின் மையப் பொருளாக
அமைந்துள்ளது.
பாடியவர்  இயற்பெயர்
நச்செள்ளையார் .
ஆனால் இவர் காக்கையைப் 
பாடியிருப்பதால்
காக்கைப் பாடினியார்  நச்செள்ளையார்
என்றே அறியப்பட்டார். அழைக்கப்பட்டார்.
அவர் பாடிய பாடல் உங்களுக்காக....

"திண்டேர்நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த
வெண்ணெய் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ்
சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த
செல்லற்கு
விருந்து வரக் கரைந்த
காக்கையது பலியே "

                     -   குறுந்தொகை

ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து
பொருள் தேடச் சென்றுவிட்டான்.
கருதிய பொருளை ஈட்டி வரச் சற்று
காலதாமதம் ஆகிவிட்டது.

ஐயோ....என் வருகையை எதிர்பார்த்து
என் தலைவி காத்திருப்பாளே!
அதனால் அவள் ஊண் உறக்கமின்றி
வாடிப்போயிருப்பாளோ?
வழிமேல் விழி வைத்து இமை மூடாது
காத்திருத்தலால்  உடல் மெலிவுற்றிருப்பாளோ?

இப்படி ஏதேதோ நினைவுகள் வந்து
தலைவனை வாட்டி
வதைக்கின்றன.
யாரிடம் போய் சொல்ல முடியும்.?
ஓடும் மேகத்தோடும் 
வீசும் காற்றோடும்
பாடும் பறவையோடும்
பேசுகிறான். புலம்புகிறான்.
தலைவியின் நினைப்போடு
 நாட்கள் கடந்து போயின.
  
பொருளோடு வீட்டுக்கு வருகின்றான்.
தன் தலைவி வாட்டமாக இருப்பாள்.
அவள் வாடிய முகத்தை எப்படி
எதிர்கொள்ளப்போகிறேன் ?
படுக்கையில் கிடப்பாளோ?
படர் வந்து உடல் நலிந்து போயிருப்பிளோ?

கலங்கியபடி வீடுக்குள் நுழைகிறான்.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி பெரிய
வாட்டம் ஒன்றும் அவள் முகத்தில்
தெரியவில்லை.
இது எப்படி சாத்தியமாயிற்று.?
என் தலைவி அப்படிப்பட்ட
உறுதியான மனம் படைத்தவளில்லையே....
ஒருவேளை....ஒருவேளை
அப்படி இருக்குமோ?

சே...சே....என்ன இது ?
ஏறுக்குமாறாக மனம் என்னென்னவோ சொல்கிறது.
எதற்கு இத்தனை குழப்பம்?
பேசாமல் தோழியிடமே
இதற்கான காரணத்தைக்
கேட்டுவிட்டால் என்ன?
மெதுவாக தோழியிடம்
சென்று பேச்சு கொடுக்கிறான்.

பேச்சுக்கிடையில் "என் தலைவி 
என்னைக் காணாது கலங்கியிருப்பாளே
எப்படி அவளை
ஆற்றுவித்தாய் ?"என்ற
ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

அதற்குத் தோழி ஒரு புன்னகையைப்
பதிலாகத் தந்தாள்.

'புரியவில்லையே 'என்பதுபோல
குழப்பத்தோடு தோழியையே பார்த்து
நின்றான்.

அதற்குத் தோழி அளித்தப் பதில்தான் 
இந்தப் பாடல்.

திண்மையான தேரையுடைய
நள்ளியினுடைய காட்டில் உள்ள இடையர்கள்
தாங்கள் வளர்க்கும் பசுக்களிலிருந்து கரந்த பாலில்
வெண்ணெய் எடுத்துத் திரட்டி
வைத்திருப்பர்.
திரட்டிய  வெண்ணெய்யை 
நெய்யாக உருக்கி வைப்பர்.
.பின்னர்  தொட்டி என்ற ஊரில்
விளைந்த வெண்ணெல்லரிசியை 
எடுத்து இந்த நெய்யை அதில் இட்டு
நெய்ச்சோறு ஆக்குவர்.
அப்படி ஆக்கிய நெய்ச்சோற்றை
 ஏழு பாத்திரங்களில் இட்டு
உண்ணக் கொடுத்தாலும் 
அது என் தலைவியின்
தோளை நெகிழச் செய்த துன்பத்தை 
நீக்கும் வலிமையைக் கொடுத்துவிட
முடியாது.அதைவிட வலிமையைத்
தந்தது ஒருவரின் குரல்.

அந்த ஒரே ஒருவரின்
குரல்தான் என் தலைவிக்கு ஊக்கத்தையும்
இத்தனை தெம்பையும்
கொடுத்திருக்கிறது."என்றாள்.

"யாரவர் ?"என்பதுபோல
தோழியை நிமிர்ந்து பார்க்கிறான்
தலைவன்.

"விருந்தினர் வருவார் என்று
காக்கை கரைந்துவிட்டுச் சென்றது.
நானும் காக்கை கரைகிறது. 
நம் வீட்டுக்கு விருந்து வரப் போகிறது
அதாவது நமது தலைவன் வரப்போகிறான்
என்பதைத் தலைவியிடம்
சொல்லி வைத்தேன்.
அவளும் காக்கையின் குரலைக் கேட்டு 
நம்பிக்கையோடு
பொறுமையாக உன் வரவுக்காகக்
காத்திருந்தாள்.
காக்கை தந்த நம்பிக்கைதான் தோல்வியைத்
தெம்பாக இருக்க வைத்தது.
இவ்வாறு காக்கையைச்
சொல்லிச் சொல்லி
தலைவியை ஆறுதல்படுத்தி 
வைத்திருந்தேன்"
என்றாள் தோழி.

 "என்னது....தலைவி வாட்டமில்லாமல்
இருந்தமைக்குக் காரணம்
காகம் தானா?"
உள்ளுக்குள் சிரித்துக்
கொண்டான் .காகத்திற்கு
நன்றியும் சொல்லிக் கொண்டான்.

"காகம் கரைந்தால்
விருந்து வருமா?"உங்களுக்கும்
கேட்க வேண்டும் போல் இருக்கிறதல்லவா?

"விருந்து வருமோ? வராதோ?
ஆனால் காக்கை கரைத்தால் விருந்து வரும்
என்ற நம்பிக்கை சங்க காலத்திலேயே 
இருந்திருக்கிறது என்பது
மட்டும் உண்மை.


"விருந்து வரக் கரைந்த காக்கை...."

ஒற்றை வரியில் காக்கையைச்  சுற்றி 
ஒரு  காதல்ஓவியம் தீட்டி
நம்முன் காட்சிப்படுத்த
காக்கைப்பாடினியாரைத் தவிர
யாரால் கூடும்?Comments

  1. காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற கருத்து இன்றளவு மக்களிடையே நிலவத்தான் செய்கிறது.அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts