செல்வம் நிலையில்லாதது

செல்வம் நிலையில்லாதது

இருந்து சம்பாதித்தேன்.
பறந்து போய்விட்டது"
என்பது போலத்தான்
பணம் இருந்த இடம்
தெரியாமல் போய்விடும்.
கைக்குக் கைமாறிக் கொண்டே
இருக்கும்.

அதனால்தான் அதற்கு நாணயம்
என்ற பெயரும் வந்ததோ ?என்ற
ஐயமும் உண்டு.

ஒரு செல்வந்தர் இருந்தார்.
இருக்க நேரமில்லாது ஓடி ஓடி உழைத்தார்.
பணம் பணம் என்று பணத்தின் பின்னாலேயே சுற்றிக்
கொண்டிருந்ததால் வேறு எந்தப்
பக்கமும் அவரது கவனம் திரும்பவில்லை.
நல்ல காரியங்கள் எதுவும் செய்ய
நேரமில்லை.பிறகுப் பார்த்துக் கொள்ளலாம்.
பிறகு பார்த்துக் கொள்ளலாம்
என்று எந்த தான் தர்மமும்
செய்யவில்லை.
பணம் என்ன நிரந்தரமாகவா
ஒருவரிடம் நிற்கப் போகிறது?

ஒருநாள் வியாபாரத்தில்
பெரும் நஷ்டம் ஏற்பட்டு
கையிலிருந்த பணமெல்லாவற்றையும்
இழக்க நேரிட்டது.
கையில்  ஒன்றுமில்லை 
அக்கம் பக்கத்தில் யாரிடமாவது 
கடனாகக் கேட்கலாம்  என்றால் 
யாரும் முகத்தை எட்டிக்கூட 
பார்க்க மாட்டேன்
என்கிறார்கள்.இப்போதுதான் 
அவருக்கு உலகம் புரிய ஆரம்பித்தது.
பணமில்லாதவன் பிணம்
என்று தெரிந்து கொண்டார்.

உன் வாயையும் பணப்பையையும்
கவனமாகக் திற.
அப்போதுதான் இரண்டிற்கும் மதிப்பு
உண்டு என்று படித்ததையும் நினைவு
படுத்திப் பார்த்தார்.
இதுதான் உலக எதார்த்த நிலை.

பணம் கையில் இருந்தால் மட்டுமே 
உலகம் நம்மை மதிக்கும்.
பணம் கையை விட்டுப் போனால்
உலகம் நம்மை மிதிக்கும்.
அதாவது கீழ்த்தரமாக நடத்தும்.


நாணயம் இருக்கும் வரைதான் நாணயஸ்தன்
என்பார்கள்.
நாணயம் நம் கையைவிட்டு நழுவி
ஓடிவிட்டால் நாம் நாணயமில்லாதவன்
ஆகிவிடுவோம்.அதாவது நேர்மை
இல்லாதவர் என்னும் முத்திரை குத்தி
ஒதுக்கி வைக்கப் படுவோம்.

பணம் உள்ளவன் பின்னாலும்
பத்து பேர்.
பதவி இருக்கிறவன் பின்னாலும்
பத்து பேர்.

இந்த பத்து பேரும் எப்போதும்
நம்மோடு நிரந்தரமாக இருப்பார்களா?
என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவரே சொல்லிவிட்டாரா?
அப்படியானால் சரியாகத்தான்
இருக்கும்.
பணம் இல்லை என்றால் 
நம் நிலைமை எப்படி இருக்குமாம்
தெரியுமா?
இதோ வள்ளுவர் சொல்கிறார்
கேளுங்கள்.

கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்து அற்று "


கூத்தாடும் இடத்தில் கூத்தினைக் காண
மக்கள் ஏராளமாய் வந்து
குவிதலுண்டு.
கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து
போய்விடும். 
கூத்தாட்டுக்களம் கூத்து நடந்ததற்கான
எந்த அடையாளமும்
இல்லாமல் வெறுமையாகக்
கிடக்கும்.
அது போன்றதுதான்
செல்வம் இருக்கும் இடமும் இருக்கும்.
செல்வம்  இருப்பதுவரை கூட்டம்
 அலைமோதும். சுற்றிச்சுற்றி வரும்.
 
செல்வம் கைவிட்டுப் போய்விட்டால்....
அந்த இடம்
வெறுமனே  யாருமில்லா இடமாக 
மாறிவிடும்.
என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் கூத்து நடந்த
இடம் என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டார்.

 ஔவை செல்வம் இருந்தால்
 என்னவெல்லாம் இருக்கும்.
 செல்வம் இல்லை என்றால்
 என்னவெல்லாம் போகும் என்று
 பட்டியலிட்டுக் கூறிவிட்டார்.
மூதுரையில் ஔவை சொல்லியிருப்பதைக்
கேளுங்கள்.

"மருவி இனிய சுற்றமும்
வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம்
திருமடந்தை
ஆம்போது அவளோடு ஆகும்
அவள் பிரிந்து
போம்போது அவளோடு போம்"

என்கிறார்.

ஒருவனிடம் செல்வம் வந்து
சேர்ந்தால் உறவு என்று
சொல்ல ஓராயிரம்பேர் வந்து
தழுவிக் கொள்வர்.
நல்ல குலத்தைச் சேர்ந்தவன்
இவன் என உலகமே அவனைத்
தூக்கி வைத்துக் கொண்டாடும்.
மேனி மினுமினுப்பும் அழகும்
கூடவே வந்து ஒட்டிக் கொள்ளும்.
இது எல்லாமே செல்வம்
இருக்கும்வரைதான்.
அதாவது திருமடந்தை இருக்கும் வரைதான்.

திருமடந்தை போய்விட்டாளானால்....
உறவுகள் காணாமல் போய்விடும்.
நற்குலத்தான் என்னும் நற்பெயர்
காணாமல் போகும்.
அழகு சீரிழந்து  அலங்கோலமாகிப்
போகும் என்கிறார் ஔவை.

பணம் இருக்கும் வரை பவிசு.
பணம் போன பின்னர் உனக்கு
இல்லை மவுசு.

செல்வம் இருக்கும் போது
ஒரு நிலையும் செல்வம் போனால்
அதற்கு எதிர்மாறான நிலையை அடைவதுதான்
உலக இயல்பு என்று இருவரும்
சொல்லிவிட்டார்கள்.

அதனால் என்ன?
உலகம் இப்படித்தான் என்று தெரிந்து
கொண்டால் மட்டும் போதுமா?
அந்தப் பணம் இருக்கும்போதே
என்னென்ன செய்ய
வேண்டும் கூறுகிறேன் கேளுங்கள்
என்கிறார் நாலடியார்.
நாலடியார் கூறுவதையும்
கேளுங்கள்.

"செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல்
தோன்றி
 மருங்கறக் கெட்டு விடும்.
      பாடல் எண்  -8


செல்வம் இரவில் தோன்றும்
மின்னல் போன்றது.
பார்க்க பகட்டாகத் தெரியும்.
கணப்பொழுதில் காணாமல்
போய்விடும் . ஆதலால் செல்வம்
உடையோம் என்ற செருக்கு
வேண்டாம். செல்வம் இருக்கும்போது
மறுமையைப் பற்றி எண்ணாத
சிற்றறிவாளர்களே!
செல்வம் இருக்கும்போதே 
இறைவனைத் தேடி நற்பலனைப்
பெற்றுக்கொள்ளுங்கள் " என்கிறது
நாலடியார் 


செல்வம் நிலை இல்லாதது.
அதனால் இருக்கும்போதே நல்லவற்றைச்
செய்து நல்வழி தேடிக் கொள்ள வேண்டும்.
கையில் இருந்த பொருள் போன பின்னர்
நான் எப்படி எல்லாம் தரும காரியங்கள்
செய்ய நினைத்தேன்.
முடியவில்லையே என்று புலம்புவதில்
அர்த்தம் இல்லை என்கிறார் நாலடியார்.

செல்வம் நிலையில்லாதது என்று
 வள்ளுவரும் ஔவையும்  நாலடியாரும்
 அருமையாகச் சொல்லிவிட்டனர்.

ஆதலால் பணம் இருக்கும்போதே தானதர்மம்
செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்
என்பதுதான் இவர்கள் சொல்லும் செய்தி.

Comments

Popular Posts