பணிநிறைவுப் பாராட்டு மடல்

          பணிநிறைவுப் பாராட்டு மடல் 



ஆசிரியை சாந்தி ஞானராஜன் அவர்களுக்கு ....


தண்டமிழ் வண்டை பூங்காடுடை
தென்தமிழ் எல்லைநகர்  நன்மக்கள் 
ஜெயசிங் முத்தாபரணம் மெத்தை மடியில்
சில்லென்று பூத்ததிந்த செந்தாமரை சாந்தி   !

கொழுநன் ஞானராஜன்   கைத்தலம் பற்றியே
கோநகர் மும்பைக்குச் சீராய்வந்த செந்தமிழே!
இனிதாம்  இல்லறம்  சாட்சியாய்
விழுதாய்ப் பிள்ளை இருவரானது நின்வரமே!

கற்றவர் போற்றிடும்  நற்றிணையே
நிற்பவர் யாவர்க்கும் நற்றுணை நீயே
ஏட்டினில் அடங்கா மதியானவள் நீரோ
வீட்டினில்  நந்தவனம் என்பதுன் பெயரோ!

விண்ணமகள் பெற்றெடுத்த தண்ணிலவோ
மண்மகள் மகிழும்  வான் மழையோ
க(ண்)ணவன் கொண்டாடிடும் வானிலவோ-நீ
மண்டு குணம்நிறை பேரறமோ !

கற்பனைக் கடங்கா கவிதை யானவளே
சொற்றிறம்பா நாவறம்.  கொண்டனை நீயே!
மருவில்லா வான் மதியே - நின்
திருவாய் மலர்வில் மகிழ்வது என் மனமே!

பிரைட் பள்ளியில் அறப்பணி ஆண்டு ஐயாறு
பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு
தொய்யாது நடத்திய சொல்லாறு -என்று
மெய்யாகச் சொல்லி நிற்கும் தமிழ் வரலாறு!

ஓய்விலும் நின்பணி தொடர்ந்திடல் வேண்டும்
ஓயாது அறப்பணி நடந்திடல் வேண்டும்
எண்ணும் செயல்யாவும் கைகூட வேண்டும்- பிறர்
நண்ணும் வண்ணம் வாழ்ந்திடல் வேண்டும்!

களிப்புகள் பெருகி செழிப்பினில் திளைத்து
குன்றென புகழுனை அணிசெய வேண்டும்
நன்றென நாட்கள் இனித்திட வேண்டும் -காசினி
வந்தனை தந்துனை வாழ்த்திட வேண்டும்!

       - செல்வபாய் ஜெயராஜ்

Comments