அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டிஉணவே மருந்து"
நாம் உண்ணும் உணவு மருத்துவ குணம்
கொண்டதாக இருந்தால் எளிதில் எந்த
நோயும் நம்மை அண்டாது.
அதற்காகத்தான் நம் முன்னோர்கள் 
உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது 
சில மருத்துவ குணம்
உள்ள மசாலாக்களையும் சேர்த்து
உணவு தயாரிப்பர்.
அந்த பாரம்பரிய முறைப்படி தான்
பெரும்பாலான உணவுப்பண்டங்கள்
இன்றுவரை நம் வீடுகளில் 
தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சில குறிப்பிட்ட மசாலாப் பொருட்கள்
எப்போதும் சமையலறையில்
 உள்ள அஞ்சறைப்
பெட்டியில் வைத்திருக்கும்.

அஞ்சறைப் பெட்டியா?
 அது என்ன 
அஞ்சறைப் பெட்டி என்கிறீர்களா?

 
டிரங்கு பெட்டி,
கொட்டாப் பெட்டி
மரப் பெட்டி,
கடாப் பெட்டி 
கிண்ணிப் பெட்டி
வண்ணப்பெட்டி
நார்ப் பெட்டி 
ஓலைப் பெட்டி
பிளாப் பெட்டி

இப்படி பெட்டிப் பெட்டியாப் பயன்படுத்தி
இன்று எல்லாவற்றையும் மறந்து ,
இல்லை...இல்லை
தொலைத்து ,அஞ்சறைப் பெட்டி என்றால்
என்ன என்று கூகுளில்
பொருள் தேடும் நிலைமையில்
 இருக்கிறோம்.

அஞ்சறைப் பெட்டி என்றதும் 
பழைய நினைவுகள் எல்லாம்
கண்முன் வந்து நின்று
மலரும் நினைவுகளாகி மகிழ்ச்சி
தருகின்றன.

அஞ்சறைப் பெட்டி என்றால்
மசாலாப் பெட்டி .

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும்
மசாலாவுக்குள் கையைப் போட்டு
துழாவி ஐந்து பைசா, பத்து பைசா
திருடி சவ்வு மிட்டாய் வாங்கி தின்ற
 காலம் அஞ்சறைப் பெட்டி
காலம்.


ஐந்து பைசா
பத்து பைசா போய் ஒரு ரூபாய் 
இரண்டு ரூபாய்
நாணயங்களைப் பருப்பு டப்பா
 சீரக டப்பா என்று கையை விட்டு துழாவி
 எடுத்த, எடுக்கும் அனுபவம்
  பலருக்கு இருந்திருக்கும். 
  இப்போதும் இருக்கும்.
 
அது இருக்கட்டும்.
அஞ்சறைப் பெட்டிக்கு வருவோம்.


 அஞ்சறைப் பெட்டி பற்றி இதுவரை
உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ 
இன்று நீங்கள்
தெரிந்தே ஆக வேண்டும்.

 
ஒரு மசாலாப்பெட்டிக்கு
 அஞ்சறைப் பெட்டி
என்று பெயர் வரக் காரணம் என்ன?
என்ற கேள்வி எழாமலில்லை.

முதலாவதாக இது ஐந்துஅறைகள்
கொண்ட ஒரு பெட்டியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்.

ஐந்து என்பதை அஞ்சு ரூபா
அஞ்சு பைசா
என்றுதானே பேச்சு வழக்கில் 
கூறுகிறோம்.
 அதனால்தான் இதற்கு
அஞ்சறைப் பெட்டி என்பது காரணப்
பெயராக வந்திருக்கக் கூடும்
என்பது என் கணிப்பு..


சிறுபஞ்சமூலம் பாடல்கள் நீங்கள்
கண்டிப்பாக படித்திருப்பீர்கள்.

அதற்கு சிறுபஞ்சமூலம்  என்ற
பெயர் வரக்காரணம்
என்ன?

கண்டங்கத்திரி வேர்
சிறு வழுதுளை வேர்
சிறு மல்லி வேர்
நெருஞ்சி வேர்
பெருமல்லி வேர்

இந்த ஐந்து வேர்களும் உடல் பிணியை
போக்க வல்லனவாம்.
அதுபோல ஒவ்வொரு பாடலிலும்
ஐந்து கருத்துகள் கூறப்பட்டுள்ளதால்
இந்நூல் சிறுபஞ்சமூலம்
என்று அழைக்கப்படுகிறது என்று கூறுவர்.

அது போன்றுதான் எங்கள் அஞ்சறைப்
பெட்டியிலும் நோய் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கக்கூடிய ஐந்து பொருட்கள்
எப்போதும் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் தரக்கூடிய இந்த
ஐந்து பொருட்களும் வைத்திருக்கும்
பெட்டி அஞ்சறைப் பெட்டி என்று
அழைக்கப்பட்டதில் வியப்பொன்றும்
இல்லை.


நாளடைவில் பெட்டியிலுள்ள அறைகளின்
எண்ணிக்கை கூடியிருக்கலாம்.

பின்னர் அது 
சீரகம்,கடுகு,மஞ்சள்,வெந்தயம்,
நல்ல மிளகு 
கொத்தமல்லி,லவங்கம்,கிராம்பு,
பெருஞ்சீரகம்,சுக்கு இவை எல்லாம்
இருக்கும் பல அறைகளைக்
கொண்ட பெட்டியாக
மாறிப்போயிருக்கலாம்

எனக்குத் தெரிந்தவரை 
ஆறு ,எட்டு என்ற எண்ணிக்கையில்
இருந்த அஞ்சறைப் பெட்டிகளைப்
பார்த்திருக்கிறேன்.
ஒரு அறையில் லவங்கம்
பட்டை பெருஞ்சீரகம் அதாவது சோம்பு
கசகசா அனைத்தும் சேர்த்தே
போட்டு வைத்திருப்பார்கள்.
அதுதான் கறி மசாலா.


முதலாவது மரப் பெட்டியாக இருந்தது.
பின்னர் அலுமினியத்துக்கு மாறியது.
அலுமினிய குவளைகள் அறையாக
அலங்கரித்தன.
அதன் பின்னர் எவர்சில்வர், பிளாஸ்டிக்
என்று பல பரிணாம வளர்ச்சி
 பெற்று இன்று அஞ்சறைப் பெட்டி
நகரங்களில் காணாமலேயே போய்விட்டது.

அஞ்சறைப் பெட்டி தான் காணாமல்
போய்விட்டதே தவிர
மசாலா பொருட்கள் 
டப்பா,பாட்டில் என்று 
தனித்தனியாக  சமையலறையில்
அணி வகுத்து உட்கார்ந்திருக்கின்றன.

உணவில் எப்போதும் சேர்த்துக்கொள்ளக்
கூடிய மருத்துவ குணம் கொண்ட
பொருட்கள் எப்போதும் நம் சமையலறையில்
இருக்கட்டும்.

உணவு பாதுகாப்பு நாளில் உடலுக்குப்
பாதுகாப்பு தரும் உணவுகளை மட்டும்
எடுத்துக்கொள்வோம் என்று உறுதி
எடுத்துக் கொள்வோம்.

சுக்கு,மல்லி, ஆகியவற்றிற்கு
முன்னுரிமை கொடுப்போம்.
நல்லமிளகு நாளும் நாலாவது
உணவில் சேர்த்துக் கொள்வோம்.
சீரகம் பயன்படுத்தி உடலைச் 
சீராக வைப்போம்.
பெருங்காயம் பயன்படுத்தி நம்
காயத்தைப் பாதுகாப்போம்.
Comments

Popular Posts