எட்டாவது பிள்ளை




எட்டாவது பிள்ளை 


எட்டாவதும் பொட்டப் பிள்ளை
பிறந்திருக்கு....பிள்ளை மூக்கும்
முழியும் சரியா அப்பாவைப் போலவே
இருக்கு...." வீட்டுக் கதவை மெல்லத்
திறந்து கதவிடுக்கு வழியாக
தகவல் சொல்லிவிட்டு
போனார் மருத்துவச்சி.

அதைக் கேட்டதும் வெளியில்
நின்றிருந்த அனைவர் முகத்திலும்
ஒரு சோகம் அப்பிக் கொண்டது.
அப்பா பதிலுக்கு ஒரு வரிகூட
பேசாமல் அப்படியே நின்றார்.
"சரி ...சரி...
ஐந்து  பொட்ட பிள்ளைகள் பிறந்தால்
அரசனும் ஆண்டி என்று
ஒரு சொலவடை உண்டு.
இதுவேற எட்டாவது பொட்ட....
கவலை படாதேயும்.
கடவுள் கொடுத்தது அவ்வளவுதான்.
இனி என்ன செய்யமுடியும்.?
வளர்த்து ...ஆளாக்கி ஒருத்தன்
கையில பிடுச்சி கொடுக்கும் வரைக்கும்
உமக்கு இருக்கிற நாலு  குடுமி
மயிறும்  போயிரும் "என்று முதலாவது
தூபம் போட்டார் அங்கு
 நின்றிருந்த ஒரு தாத்தா.

"எட்டாவது ஒரு ஆம்பிளப்புள்ள
பிறந்துருக்கப்பிடாதா....எட்டாவது
பொட்டப்பிள்ள...எட்டிப்பார்த்த இடமெல்லாம்
வெட்டன்னுல்லா சொல்லுவாவ...
அதுக்கு என்ன செய்ய முடியும்?
கொன்னா போட முடியும்?"
என்று கொஞ்சம் எண்ணெயை
ஊத்தி பத்தவச்சி போட்டுகிட்டு
அங்கிருந்து சென்றார் மேலத்தெரு பாட்டி.

அப்பாவுக்கு அதைக் கேட்டதும்
அந்த இடத்தில் நிற்கவே பிடிக்கல....
அப்படியே அங்கிருந்து வெளியே போய்விட்டார்.

இரவு வீட்டிற்கு வந்ததிலிருந்து அப்பாவிடம்
ஏதோ ஒரு மாற்றம் காணப்பட்டது.
ஒருவரிடமும் சரியாக முகங்கொடுத்துப்
பேசவே இல்லை.
எங்களுக்கு அப்பாவைப் பார்க்கவே பயமாக
இருந்தது.
ஒருவித இருக்கமான
மனநிலையிலேயே அப்பா
இருந்து கொண்டிருந்தார்.

எப்படியோ ஒரு மாதம் 
ஓடிப் போயிற்று.

அடுத்தமாதம்தான் அப்பாவின் 
கொடூரமுகம் கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே தெரிய ஆரம்பித்தது.
சிடுசிடு என்று நின்றார்.
எதற்கெடுத்தாலும் கோபம்.

அப்பாவுக்கு என்னாயிற்று?
எங்களால் புரிந்துகொள்ளவே
 முடியவில்லை.

அம்மா இது எதையும் கண்டு 
கொள்வதே இல்லை.

ஒரு மாதத்திற்குள்  பச்சப்பிள்ளையை
வீட்டில் போட்டுவிட்டு தோட்ட வேலைக்குச்
சென்று விட்டார் அம்மா.

போகும்போது தங்கச்சியைப் பத்திரமாகப்
பார்த்துக்கொள் என்று என் கையில்
தூக்கித் தந்து விட்டுச் போய்விட்டார்.

"ஒரு டம்ளர் போல பசும்பால்
சட்டியில் இருக்கு .கூட கொஞ்சம்
தண்ணீர் ஊற்றி காச்சி
சூடு ஆறியதும் சங்குல ஊற்றி
கொஞ்சம் கொஞ்சமாக கொடு.
பத்திரம்....விக்கிறாம 
மெதுவா கொடுக்கணும்" என்று
பக்குவம் சொல்லி தந்துவிட்டுப்
போய் விட்டார்.

இப்போ நான்தான் இந்த குழந்தைக்குப்
பொறுப்பு.இதற்காகவே
எட்டாவது படித்துக் கொண்டிருந்த என்னை
பிள்ளையைப் பார்க்கணும் என்று சொல்லி
பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள்.

ஆரம்பத்தில் பள்ளிக்குப் போகவேண்டாம்
என்றதும் எனக்கும் மகிழ்ச்சிதான்.

படிப்பு வேறு சரியா வரல...
எப்பவும் கணக்கு வாத்தியார் 
மண்டையில மண்டையில
கொட்டி ரணமாகக்கிவிடுவார்.

இந்த கணக்கு வாத்தியாரிடமிருந்து
எப்படி தப்பிப்பது என்று தடுமாறிக்
கொண்டிருந்தபோதுதான் 
எங்கள் வீட்டில் 
இந்த தங்கை பிறந்தாள்.
அதோடு நான் பள்ளிக்குப் போவதற்கும்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சொல்லப்போனால் எனக்கு
தங்கை பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி.
காரணம்  இனி நான்
பள்ளிக்குப் போக வேண்டாமல்லவா?

 முதலாவது இது எனக்குப் 
பெரிய வேலையாக தெரியவில்லை.

நாளாக ஆக என் தங்கை போடும் சத்தம்
தாங்க முடியாது.
மழை நேரத்து தவளை விடாமல் கத்துமே
அதுபோல க்குவா...க்குவா....என்று
மூச்சு விடாமல் கத்துவாள்.

பசி வந்தால் போதும்
மூச்சு விடாமல் கத்துவாள்.
சத்தம் அக்கம்பக்கத்து
வீடு வரை கேட்கும். எல்லாரும்
வந்து பிள்ளைக்கு வயித்துக்கு 
சரியில்லையா? என்று விசாரிக்க
வந்துவிடுவார்கள்.

கொஞ்சம்போல காயத்தை உரசி ஊற்று
என்று மருந்தும் சொல்லிவிட்டுக்
போவார்கள்.
நான் அப்படியும் செய்து பார்ப்பேன்.

 அப்போதும் தங்கையின்
அழுகை நிற்காதபோதுதான்
அது வயிற்றுப் பசியில் கிடந்து கத்துகிறது
என்பது புரிந்தது.

அம்மாவிடம் சொன்னால் அதைப்
பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.

அவர் வீட்டில் இருப்பதில்லை. அதனால்
அவருக்கு இந்த அழுகை
அவ்வளவு தொந்தரவாக
தெரியவில்லை.
அம்மா வந்ததும் அம்மாவிடம் 
பால்குடித்துவிட்டு
 கப்சிப்பென்று 
கண்ணை உருட்டிக் கொண்டு இருப்பாள்.
சரியான உருளி கண்ணி.

பகலில் தான் ஒரே காட்டுக்கத்தல்.
தங்கையின் அழுகையைக்
கேட்டாலே போதும். அப்பாவுக்கு 
எரிச்சல் எரிச்சலாக
வரும்.

ஏற்கனவே எட்டாவது வெட்டையாக்கி
என்று வெறுப்பில் இருந்தவருக்கு
இந்த அழுகை மேலும் எரிச்சலைக்
கூட்டியது என்றுதான்  சொல்ல வேண்டும்.
இல்லை...இல்லை...கொலை செய்ய
வேண்டும் என்ற வெறியை தூண்டியது.

ஒரு கட்டத்தில் இந்த பிள்ளை எதற்கு?
கொன்று விடலாமே என்று முடிவுக்கு
வந்துவிட்டார்.

நேரடியாகவே அதைப்பற்றி என்னிடம்
பேச ஆரம்பித்தார்.

கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
அப்படியே அசந்து போனேன்.
அப்பாவின் வாயிலிருந்து
இப்படி ஒரு வார்த்தை வரும்
என்று நினைக்கவில்லை.

"என்னப்பா இப்படி சொல்றீங்க?"
கோபமாகவே கேட்டேன்.

"ஆமா....இந்த ஆக்கங்கெட்ட பொட்ட
புள்ளை இருந்து என்ன செய்ய போவுது?
வெட்டையாக்கியை வீட்டுல
வச்சி என்ன செய்ய முடியும்?"

"அதற்கு?"

"அதுதான் கொன்னுடுன்னு சொல்றேன்."

"உங்களுக்கென்ன நீங்க லேசா
சொல்லிடுவீங்க..."

"அப்போ கத்தியெடுத்து கையில்
கொடுக்கணுமா? "

"என் கையில் கத்தி
 எதுக்குத் தரணும்?
 உங்களுக்குத்தானே இந்த பிள்ளை
 பிடிக்கல...நீங்க கொல்லுங்க"

"ஒரு கை நெல்லை அள்ளி வாயில்
போட்டுட்டா போதும்.
நெல்லை அள்ளி வாயில் போட்டா
விக்கி செத்துடும்"

"போங்கப்பா....எனக்கு
உங்களைப் பார்க்கவே பயமா இருக்கு.
நீங்க என்ன என்னவெல்லாமோ பேசுறீங்க "

"நெல்லை அள்ளி போட
பயமா இருக்குன்னா வாயைப்
பொத்து .மூச்சுவிட முடியாமல்
சாகடிச்சுடு"

"எதுக்கு இப்படி சொல்றிய....
பாவம். அதுபாட்டுக்கு வளர்ந்துட்டுப்
போகட்டுமே...."

"ஏன் நீ வளர்க்கப் போறியா....?

"வளர்த்துடுவேன்...பால் வேணுமே...
ஒரு ஆட்டைப் பிடிச்சுப் போட்டா
போச்சு. ஆட்டுப்பாலைக் கறந்து
கொடுத்து பிள்ளையை வளர்த்துடலாம்."

"நான் இந்த எட்டாவது பிறந்த
வெட்டையாக்கி வேண்டாம் என்கிறேன்.
நீங்க ஆளுக்கு ஆளு அதை ஊத்தி வளர்த்துடலாம் 
இதை ஊத்தி வளர்த்துடலாம்ன்னு
சொல்லிகிட்டு...." அப்பாவுக்கு இப்போது
இந்த குழந்தையின் அழுகையை விட
அது எட்டாவது பிறந்ததுதான்
மனசைப் போட்டு ஆட்டிப் படைத்துக்
கொண்டிருந்தது.
.

"இப்போது நீங்கள் கொஞ்சம் வாயை
மூடுங்க...எப்பப் பார்த்தாலும் அந்தப்
பிள்ளையை கொல்லப் சொல்லிக்கிட்டு
அந்தப் பிள்ளை உலகத்தில் பிறப்பேன்னு
உங்க கிட்ட
கேட்டுச்சா.....
நீங்கள் பாட்டுக்கு வெட்டையாக்கி ....
வெட்டையாக்கி
என்று சொல்லிகிட்டு இருக்கிய....
அந்த பச்ச புள்ள என்ன செய்யும் ?" 
கோபத்தில் அன்று சற்று உரக்கவே
கத்தி விட்டேன்.

"என்னவும் பண்ணுங்க...என்
கண்ணுல மட்டும் காட்டாதுங்க....
அப்படியே கழுத்தை நெருச்சி
கொன்னுபுடலாம்ன்னு ஆத்திர ஆத்திரமா
வருது." என்று பல்லை நறநறவென்று
கடித்தார் அப்பா.

"இந்தாங்க...இப்பவே கழுத்து நெருஞ்சி
கொன்றுகிட்டு ஜெயிலுக்குப் போங்க...
நாங்களும் தெருவும் திண்ணையுமா போறோம்"
அப்பா கையில் தங்கையை
 திணித்தேன்


"சீ....கடக்க போடு..."என்று 
கையை உதறிவிட்டு 
அப்படியே விருட்டென்று எழும்பி
வெளியே போய்விட்டார் அப்பா.

எனக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை.

இந்த அம்மாவும் பிள்ளையைப் பெத்து 
பத்தினைந்துநாள்கூட
ஆகல....தோட்டம் தோட்டம் என்று 
தோட்டத்துலேயே போயி
மாடா உழைக்கிறா....
இவளுக்கெல்லாம் பிள்ளை எதற்கு?

வயித்துக்குப் பாலு இருந்தாலும் புள்ள
வாயை மூடிகிட்டு கிடக்கும். 
அது வயித்துப் பசியில
வாளு வாளுன்னு கத்திகிட்டுக்கிட்டு
கிடக்கு...அப்பாவுக்கு கோபம் வருது...
நான் சின்ன புள்ள
என்ன செய்வேன்?

ஒவ்வொரு நேரம் எனக்கும்
அப்பா சொன்ன மாதிரி
பண்ணிடலாமா? அல்லது
எங்காவது ஒரு ஆசிரமத்துல
போட்டுட்டு வந்துடலாமா?என்று தோணும்.

இருந்தாலும் இந்தப் பச்ச பிள்ளை முகத்தைப்
பார்த்ததும் எல்லா
நினைப்பும் மறந்து போய்விடும்.

அப்போதான் அப்பாகிட்ட "அப்பா ,
ஒரு குட்டி போட்ட ஆட்டை வாங்கிப்
போடுங்கப்பா...
ஆட்டுப்பால் கொடுத்து நான் இவளை
வளர்த்துகிடுவேன்" என்றேன்.

"நான் சாகட்டும் என்கிறேன்...நீ ஆட்டை வாங்கு
மாட்டை வாங்குன்னு "என்று 
உச்ச தொனியில் கத்தினார் அப்பா.

அப்பாகிட்ட சொல்லி ஒரு
பிரயோசனமில்லை.

என்ன ஆனாலும் ஆகட்டும் என்று சற்று
சோறு வடித்த தண்ணியை வாய்க்குள்
கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினேன்.

நன்றாக சப்பு கொட்டி 
நாக்கை உள்ளே 
இழுத்து தங்கச்சி குடித்தாள்.
அப்போதுதான் எனக்கு 
ஒரு நம்பிக்கை வந்தது.

கஞ்சி தண்ணி கொடுத்தாவது வளர்த்து 
விடலாம் என்று நினைத்தேன்.

வயிறு நிறைந்ததும் அப்படியே
 என் தங்கை தூங்கிப் போனாள்.
நானும் பக்கத்திலேயே தட்டிக்
கொடுத்தபடி படுத்திருந்தேன்.

சாயங்கால நேரம்.
திடீரென்று ஆடு மே..மே...
என்று கத்துவது போல 
சத்தம் கேட்டது.

கனவா....மெதுவாக கண்விழித்துப் பார்த்தேன்.
ஒன்றும் தெரியவில்லை.

மறுபடியும் அதே குரல்.
யாரது ஆட்டோடு நம் வீட்டுப் பக்கத்தில்
நிற்பது?
எழும்பி போய் பார்த்தேன்.

அங்கே....
அப்பா கையில் ஒரு ஆட்டையும்
இரண்டு குட்டிகளையும் கட்டி இருந்த கயிற்றைப்
பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

என்னப்பா..?.எதற்கு....?என்ன இது? என்று 
என்னென்னவெல்லாமோ கேட்கவேண்டும்
போல இருந்தது.
ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள்
வரவில்லை. 
ஆட்டையும் குட்டிகளையும் மாறிமாறி
பார்த்துக் கொண்டு நின்றேன்.
ஆடு ,.... குட்டியின் காதுகளை நக்கிக்
கொண்டு நின்றிருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக்
கொண்டிருந்தேன் என்பது தெரியவில்லை.

"என்ன அப்படி பார்க்குற..
நீதான ஆடும் குட்டியும் வேணும்ன்னு
சொன்ன...இனி வயிறார 
பால் கறந்து ஊத்தி இந்த
வெட்டையாக்கியை வள "என்றார் அப்பா.

"குட்டி போட்டு எத்தனை நாள் ஆவுது?"
என்றேன். 

"இருபது நாள்தான்
ஆயிருக்கு என்று தரகர் சொன்னார்
ஆறுமாதம் நன்றாக பால் கறந்து
குடிக்கலாமாம் "என்றார் அப்பா.

அப்பா..."என்றேன்.
என்ன என்பதுபோல நிமிர்ந்து
பார்த்தார் அப்பா.

 "நீங்க பொல்லாத ஆளு....."

" எதுக்கு?...." முறைத்துப் பார்த்தார் அப்பா.

"நீங்க இப்போ எதுக்கு ஆடு
பிடிச்சுட்டு வந்தீங்க?"

"பிள்ளைக்கு ஆட்டுப்பால் கொடுத்தால்
நல்லதுன்னு பரமசிவம் சொன்னாரு"

"யாரு பிள்ளைக்கு?"

"என்ன நீ ஒரு மாதிரி மடக்கி மடக்கி
கேள்வி கேட்கிற....."

"இல்ல..சொல்லுங்களாம்...."

"நம்மவீட்டுப் பிள்ளைக்கு வாங்கி வரலாம...
ஊரு பிள்ளைக்கா வாங்கி வருவாவ.
சவத்துப் பயபிள்ள வயித்துக்குப்
பால் இல்லாமதான காளுகாளுன்னு
கத்துது"

"நெல்லு அள்ளி போட்டு கொல்ல
சொன்னீங்க....
பாலுல்லாம செத்து போகட்டும்
என்று விட்டுவிட வேண்டியதுதான"

"என்னைவிட மோசமா யோசிக்கிற"

"மோசமா யோசிக்கல ....யோசிக்க
வைக்கிறேன்."

"யோசிக்க வச்சது போதும்.
போயி பால் கறந்து 
 வை. நான் கடையில் போயி
பால் பாட்டிலும் சீனியும் வாங்கிட்டு
வாறேன்."

"சங்குல வச்சி பாலு ஊத்திடுவேன்.
பால் பாட்டில் எல்லாம் வேண்டாம்."

"நீ சரியா ஊத்தமுடியாம
விக்கிகிக்கி செத்துட போவுது....
நான் பால் பாட்டில் வாங்கி வாறேன்."

"அப்படியே சின்ன பிள்ளைகள்
குளிப்பதற்கான சோப்பும் வாங்கி வாங்க..."

"ஏன் சோப்பு போட்டு தேய்ச்சி வெளுக்க
வைக்க போறியா? கருவண்டு கருவண்டாதான்
இருக்கும்"

"நீங்க பெரிய சூரிய ஒளி
போங்கப்பா...உங்களுக்கு பொம்பளப்
பிள்ளைகளை கண்டாலே பிடிக்காது."

சிரித்துக்கொண்டே அப்பா வெளியேறினார்.

அப்பாவின் அந்தச் சிரிப்பில் 
பெண்பிள்ளைகளைப் பெத்தவரின்
வலி இருப்பதை
என்னால் உணர முடிந்தது.



 தந்தையர் தின நல்வாழ்த்துகள்!


Comments

Popular Posts