காலைக் கதிரே ...
காலைக் கதிரவனே......
என் உறக்கம் கலைத்த
காலைக் கதிரவனே
கண்திறந்ததும் காட்சியில்
நின்றது நின் திருமுகமே !
உன் முகம் விழித்ததால்
மலர்ந்தன மலர்முகமே
செவ்வானம் பார்த்து
சிரித்தன முல்லைவனமே!
தூங்கி இருந்த பனித்துளியை
வாங்க வந்த திரள்கதிரே
வான் பறவை கான் பறந்து
கானம்பாடி மகிழ்வது நின்கொடையே!
கீழ்வானில் செவ்வண்ணம் பூசி
சிவக்க வைத்து சிலிக்க வைத்தது
நின்கைத் தூரிகை காட்டும்
ஒளி வண்ண மாயஜாலமே!
இருட்டை விரட்டும் துறட்டை எடுத்து
வெளிச்சம் போட்டு பகலெனும்
நாமம் ஏற்று நிற்கும்
உலகின் உயிர்க்கவசம் நீயே!
கீழ்வானில் பிறந்து உச்சம் தொட்டு
என்நிழல் உன்நிழல் மறைத்து
தாழ வந்து தொடுவானில் மறைந்து
சொல்லும் தத்துவம் உரைத்தனையே!
ஒருநாளும் விடுப்பெடுக்கா ஊழியனே!
தொய்வில்லாப் பயணம் நினதே
ஓய்வின்றி உலகைக் காக்க
வலம்வரும் கதிரவனே வாழி!
Comments
Post a Comment