ஞானம்ம பாட்டி
ஞானம்ம பாட்டி
"மேலத் தெருவுல
சுடலைமாடன் கோவில் பக்கத்துல
சர்க்காரு அதிகாரிக வந்துருக்காவளாம்.
நீரும் சட்டுன்னு ரெண்டு
மொடக்கு நீத்தண்ணி குடுச்சிபுட்டு
ஓடிப் போய் என்ன யாதுன்னு பாரும் "
தோட்டத்துக்குப் போயிட்டு வந்ததும்
வராததுமா தாத்தாவை துரத்தாத
குறையா துரத்தித் கொண்டிருந்தார்
ஞானம்ம பாட்டி
"எதுக்கு வந்துருக்காவளாம்?"
என்று கேட்டபடியே கட்டிலில்
போய் உட்கார்ந்தார் வேதநாயகம் தாத்தா.
"உக்காந்துட்டீரா?
இனி எழும்ப ஒருமணி நேரம்
ஆக்குவீர...."
"எதுக்கு வந்துருகாவன்னு
கேட்டதுக்குப் பதில் சொல்லு"
"என்கிட்ட சொல்லிகிட்டு தான் வந்துருக்காவ
ஓடிப் போய் ஒரு எட்டு
பாத்துட்டு வாரும்னா...
எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டு கிடக்கீரு"
"என்னத்துக்கு யாதுக்குன்னு
தெரியாம
எதுக்குப் போகணும்?"
"உம்மட்ட எல்லாத்தையும் ஒண்ணு விடாம
எழுதணும்..போய் பாத்துட்டு வாரும்ன்னா
பார்த்தூட்டு வாரும்ம...."
"கூனுகுறுக்கு முறிய ஒரு ஏர்
உழுது கிட்டு வந்துருக்கேன்.
செத்த குறுக்க அனத்த விட மாட்டாள...
நொய்...நொய்ன்னுட்டு"?"
.
"நீரு தூங்கும் ஐயா...தூங்கும்...
தூங்கிக் தூங்கிக் தான
வீடே தூங்கி போயி கிடக்கு"
"இப்போ என்ன வேணுங்க....?"
"ஒண்ணும் வேண்டாம். நீருபாட்டுக்குத்
தூங்கும்"
இவளிடம் பேசி பயனில்லை என்று
நினைத்த தாத்தா
அப்படியே சற்று கண்களை மூடி
தூங்குவதுபோல கிடந்தார்.
அதற்குள் ஞானம்ம பாட்டியின்
தங்கை அன்னாள் வந்து
"எக்கோ அத்தான் வந்துட்டாவளா....?
எங்க ஊட்டுக்காரரு சந்தைக்குப் போனாரு
முதல் பஸ்லேயே வந்துருவேன்னு
சொல்லிபுட்டு போனாரு.
பஸ் வந்துட்டு போயிட்டு.
அவரு இன்னும் வர காணல.!..
லோன் கொடுக்க அதிகாரி
வந்திருக்காவளாமில்ல....நமக்கும்
யாதும் கிடைக்குமான்னு....
ஒரு எட்டு அத்தானைப் போய் பார்த்துட்டு
வாங்கன்னு சொல்லலான்னுதான் வந்தேன் .
அத்தான்
தூங்கிட்டாவள..." என்றாள்.
"தூங்கியிருக்க மாட்டாரு...கண்ணை
மூடிகிட்டு பாவ்லா
பண்ணிகிட்டு கிடப்பாரு கிழவன்."
"தோட்டத்துக்குப் போயிட்டு வந்தது
அசதியா இருக்கும்.
எதுக்கு இந்த வயசான காலத்துல
அத்தானை போட்டு ஏசுற....சரி விடு..
வாயாங்கோ நம்ம இரண்டு பேரும் போயி
ஒரு எட்டு என்னன்னு
பார்த்துட்டு வருவோம்."
"அதிகாரிகளா இல்ல வந்துருப்பாவ..
நம்ம நாலு எழுத்து படிச்சவுகளா?
நமக்கு என்னத்த பேசத் தெரியும்?
"நம்ம என்ன அவங்ககிட்டப்போயி
பேசவா போறோம்?
நம்ம ஊரு பஞ்சாயத்து தலைவரு, கிளார்க்கு
எல்லாரும்தான் நிற்பாவ...
அவுக பேசுவாக"
"பஞ்சாயத்துத் தலைவரும்
இருக்கிறா?
நான் அவருக்கு ஓட்டு போடலிய....
எனக்கு எப்படி லோன் தர விடுவாரு?
"இவ ஒருத்தி....நீ அவருக்கு
ஓட்டுப் போடலன்னு யாருக்குத்
தெரியும். உன் ஓட்டை வாயை வச்சி
எங்கேயும் உளறி வச்சிறாத...
வாயை மூடிட்டு வா....
கேட்டா உங்களுக்குதான் ஓட்டு
போட்டோம்ன்னு சொல்லிகிடலாம் "
"அப்படியா சொல்லுற?"
பசுமாட்டு லோன் கொடுக்க
வந்துருக்காவளாம்.
ஐந்து லிட்டர் பால் கரக்குமாம்.
மழை தண்ணி சரியா இல்லாம
கையில் ஒத்தகாசு புழக்கமில்ல....
பிள்ளைகளுக்கு ஒரு கேட்ட
பண்டத்த வாங்கி கொடுக்க முடியல...
பாலுகீலு கரந்து விற்றா நம்ம
கையிலேயும் துண்டு ஓட்டம் இருக்கும்.
நினைச்ச பொருளை வாங்கலாம்....."
"பால்மாடு வாங்கி....பால் கரந்து...
விற்று ஒரு சீட்டு நாட்டப் போட்டு
இந்த ஓலையைப் பிரிச்சி தூர
போட்டுட்டு
ஓடு போட்டுறலாம்.
மழை வந்தா வூடு முழுவதும்
ஒரே ஒழுக்கு"
என்று பால் கறந்து ....விற்று
ஓட்டு வீடுகட்டி...என்னென்ன கற்பனை
எல்லாமோ வளர்த்து வைத்திருந்திருக்கிறார்
ஞானம்ம பாட்டி.
"நீ சொல்லுவதும் சரித்தான்.
ஒரு சீட்ட நாட்டப்
போட்டாத்தான் கையில் நாலுகாசு
தங்கும்."
"நாம இரண்டு பொட்டச்சி போயி
என்ன பண்ண?
உங்க வூட்டுக்காரன் வரலியான்னு
கேட்பாக....சொத்துபத்து உண்டான்னு
கேட்பாக..."
"அது இல்லையாங்கோ...பொம்பளைக்குத்தான்
மாட்டு லோனாம்.... கறவை மாடு
கொடுக்க இன்னைக்கி
எழுதி கொடுக்கணுமாம்.
ஒரு மாசம் கழிச்சிதான் லோன் தருவாகளாம்"
"நமக்கும் தருவாவளா?"
" தருவான்னுதான் சொல்றாவ...
கேட்டு பார்த்தாலா தெரியும்."
""நான் முன்னமே லோன்
வாங்கி இருக்கிறேனே... இப்போ
மறுபடியும் எனக்குத் தருவாவளா?
போன தடவை எனக்குத்தான் லோன்
தந்தாவ....அதுதான் இந்த தடவை
அந்த மனுஷனை போய் வாங்கிட்டு வரச்
சொல்லுறேன்....மனுஷன் கிரங்கிறாரான்னு
பாரேன்"
"போன தடவை தந்த லோன் பணத்தை
கட்டியிருப்பா இல்லியா?"
"ஒரு நாலஞ்சு தவணை கட்டுனேன். அதுக்குப்
பிறகு ஒரு வருசமா கட்ட முடியல....
அவுக கேட்டு கேட்டு பார்த்தாக....
பிறகு தள்ளுபடி பண்ணியாச்சுன்னு சொன்னாக..."
"தள்ளுபடி பண்ணியாச்சுன்னு சொல்லிட்டாவ
இல்லியா?
அப்போ உனக்கு லோன் பாக்கி இல்ல....
லோன் கிடைக்கும் ...வா..."
"கதவை திறந்து போட்டுட்டு அப்படியே
வாயைப் பிளந்தது தூங்கிறாதியும்.
கதவை சாத்திகிடும். நாங்க ரெண்டு பேரும்
போயிட்டு வாறோம்." வீட்டுக்காரரைப்
பார்த்து சத்தம் கொடுத்துட்டு
கதவைச் சாத்தினாள் ஞானம்ம பாட்டி.
"பாத்து போயிட்டு வாங்க. அங்கப்போயி
யாருகிட்டேயும் சண்டைகிண்ட போட்டுறாத.."
என்றார் தாத்தா.
"தூங்குற மாதிரி பாவ்லா பண்ணிகிட்டு
நாம் சொல்லிகிட்டு இருந்தது எல்லாம்
கேட்டுகிட்டு தான் கெடந்துருக்காரு......
ஆமா.....நான் சண்டை போடுறதுக்குத் தான
போறேன்...உங்க அத்தான் பேசுற
பேச்சைப்பாரு"
"வாக்கா...அத்தான் சும்மா எதையாவது
சொல்லுவாவ....சுணங்காம போயிட்டு வரணும்.
வீட்டுல போட்டது போட்ட இடத்துலே
கிடக்கு. அப்படியே போட்டுட்டு வந்துருக்கேன்.
வந்துதான் சோலி எல்லாம் பாக்கணும்."
பேசிகிட்டே கூட்டம் நடந்த
இடத்துப் பக்கம் இருவரும் வந்து
சேர்ந்தனர்.
"ஊரு சனம் எல்லாம் இங்குதான
நிக்குது....." என்ற அன்னம்
அங்கு நிற்கும் கூட்டத்திற்கிடையே
முண்டியடித்து முன்னே போய்
நின்று கொண்டாள்.
"எம்மா அங்க..யாரு...
இனி கிடையாது....கிடையாது.
விண்ணப்பம் எல்லாம் கொடுத்து
முடிச்சாச்சு . நீ தள்ளு தள்ளு....
முன்னால் வந்தவுங்க எல்லாம்
நிற்கிறாங்க கண்ணு தெரியல....."
என்றார் அதிகாரியோடு
வந்த உதவியாளர்.
"...சோலி எல்லாம்
முடிச்சுட்டு வர செத்த தேரம் ஆயிடுச்சு .
அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு
போயிட்டு என்கிறிய..."
"நீங்க சோலி எல்லாம் பார்த்ததுட்டு
வருகிறதுவரை இங்க காத்திருப்பாவளோ?"
"எல்லோரும் கொஞ்சம் அமைதியா
நில்லுங்க...யாருப்பா தம்பி
எல்லாரையும் கொஞ்சம் அமைதியா
நிற்கச் சொல்லு "என்றார் அதிகாரி.
"கொஞ்சம் எல்லாரும் சத்தம்
போடாம நிற்கிறியளா...?என்று குரல்
கொடுத்தபடியே கூட்டத்துக்குள் வந்த
மதியழகன் "அத்த... நீ எப்போ வந்தா?
உன்னை நான் பார்க்கவே இல்லை..."
என்றான் .
"நீ கண்ணை பொடதியில வச்சிருந்தா
எப்படி பார்க்க முடியும்?"
"ஒவ்வொருத்தரும் காலையிலேயே
வந்து காத்துக் கிடக்காவ.
நீங்க இப்போ வந்துட்டு முன்னால் வந்து
நிற்கிறிய....இதுல நக்கல் வேற"
என்று சொல்லி சிரித்தான்
தம்பி மவன் மதியழகன்.
"சத்தம் போடதல...வீட்டுல மாமா இல்ல...
விளையில போயி நாலு கறுக்கு
மட்டை வெட்டிட்டு வாரேன்னு
போனா.....
வீட்டுச் சாவி என்கிட்ட தான் இருக்கு.
வந்துட்டாவன்னா வெளியிலேயே
காத்துகிட்டு நிப்பாவ... சட்டு புட்டுன்னு எனக்கும்
அன்னாளுக்கும் லோனு எழுதி கொடு"
"நீங்க சொன்ன மாதிரி எல்லாம்
ஒண்ணும் புதுசா சேர்க்க முடியாது."
என்று மதியழகன் பேசிக் கொண்டிருக்கும்போதே,
. "பாட்டி உங்க பேரு என்ன....உங்களை முன்பு
எப்பவோ பார்த்தது
மாதிரி இருக்கு..."என்றார் அதிகாரி.
ஞானம்ம பாட்டி முகம் அப்படியே
கூப்பி போனது...அதைக் கேட்காதது
மாதிரி அங்கேயும் இங்கேயும் முகத்தை
திரும்பி வைத்துக் கொண்டார் பாட்டி.
"ஏம்மா உங்களத்தான்.....நீங்க இதுக்கு
முன்னாடி லோன் வாங்கிருக்கீங்களா?"
பதில் சொல்லாமல் பாட்டி
அதிகாரி முகத்தையே பார்த்துக்கொண்டு
நின்றார்.
".உங்களுக்கு மாட்டு லோன்
கொடுத்த ஞாபகம் இருக்கு....
உங்க பெயரைச் சொல்லுங்க...."
என்றார் அதிகாரி.
"பொன்னம்ம....."
"பொன்னம்ம என்கிற பெயருக்கு
ஆட்டு லோன் வாங்கியிருக்கீங்கள..."
"நான் எங்க ஆட்டு
லோன் வாங்கினேன்?.."
"பொன்னம்ம என்கிற பெயருல
ஆட்டு லோன்தான் வாங்கி இருக்கு."
"இரண்டு வருடங்களுக்கு
முன் உள்ள கறவைமாட்டு
லோன் லிஸ்ட் கொடு "என்று உதவியாளரிடம்
கேட்டார் அதிகாரி.
உதவியாளர் பழைய
விண்ணப்பத்தையே எடுத்து
நீட்ட,
"பாட்டி இந்த போட்டாவில் இருப்பது
யாருன்னு தெரியுதா?"
என்று கேட்டார் அதிகாரி.
"தெரியும்....நான்தான்."
"அப்புறம் ஏன் லோன் வாங்கன்னு
பொய் சொன்னீங்க"
"எனக்கு லோன் தரலன்னா எங்க
அன்னாளுக்குக் கொடுங்க"என்று
தங்கையைப் பிடித்து
முன்னால் விட்டார் பாட்டி.
"உங்களுக்கு லோன் கிடையாது
பின்னால் போங்கம்மா"
"ஏன்...இரண்டு வருசத்துக்கு
முன்ன கொடுத்தவுகளுக்கு
இப்போ கிடையாதா?."
"ஆமா...ஒரு ஆளுக்கு ஒரு முறைதான்
லோன் கிடைக்கும். "
"ஏன்? நேற்று சாப்பிட்டால்
நீங்க இன்றைக்குச் சாப்பிட
மாட்டீங்களா?"
"அப்போ எதுக்கு பொய் சொன்னீங்க..."
".மாட்டு லோன்
இல்லன்னா ஆட்டு லோன் தாங்க"
"நீங்க சொன்னபடி எல்லாம் தருவதற்கு
இது எங்க அப்பன் வீட்டுப் பணம் இல்ல..."
"எதுக்கு கோபப்படுறீய....
மழை தண்ணி இல்லாம தான் உங்ககிட்ட
வந்து கையேந்தி நிற்கோம்...
கடவுள் கண்ணு முழிச்சி பார்த்தா
எங்க தோட்டத்துல விளையுறது வச்சி
நாங்க செல்ல சோறு தின்போம்."
வீர வசனம் பேசினார் பாட்டி.
"ஏம்பா தம்பி....நிலம் இல்லாதவர்களுக்குத்தான்
லோன் கொடுப்போம் என்கிறதைச்
சொல்லியா?"
"சொல்லிதான் வரச் சொன்னோம்.
அத்த....நான் அப்பவே சொன்னேன்ல...
வீட்டுக்குப் போங்க...."
"எனக்கு இல்லன்னா அன்னாளுக்காவது
வாங்கி கொடு..."
"கொடு கொடுங்கிறதுக்கு நானா கையில்
வச்சுருக்கேன்...அன்னாள் அத்தைக்குந்தான்
இரண்டு ஏக்கர் நிலம் இருக்குல்ல...
அவியளுக்கும் லோன் கொடுக்க
மாட்டாவ"..
"இரண்டு ஏக்கர் இருந்து எதுக்கு?
வெறும் பொட்டல் காடு.
ஒரு பயிறும் வராது. வானம் பார்த்த பூமி."
"அதெல்லாம் இங்க பார்க்க மாட்டாவ...
நிலம் இருக்கப்பிடாது அவ்வளவுதான்"
"நீனும் அவங்ககூட சேர்ந்த ஆளு
மாதிரியில்ல பேசுற....
நிலம் கெடந்து எதுக்கு ?
கால்காசுக்குப்
பிரயோசனம் இல்லாத நிலம்....
நீ தள்ளு நான் பேசிகிடுறேன் "
"சண்டை போடுவதற்காக வந்துருக்கிய...
வீட்டுக்குப் போங்கன்னா போங்க...."
"நீ தூர போல்ல...
நான் நாலு கேள்வி கேட்டுபுட்டு
போறேன்..."
ஐயோ...உங்கள என்ன சொல்லன்னு
தெரியல....அதிகாரிகளை
எதுத்துப் பேசப்பிடாது."
"கடக்கப்போ...."தள்ளி விட்டுவிட்டு
முன்னே போய் நின்றார் பாட்டி.
அதிகாரி உங்களை யார்
முன்னால் விட்டது என்பதுபோல
ஏறஇறங்க பார்த்தார்.
"ஐயா...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்."
"சொல்லுங்க...
என்ன உண்மை தெரிஞ்சாவணும்.?"
"கஞ்சிக்கு இல்லாதவர்களுக்கு லோன்
கொடுக்கத்தான வந்துருக்கிய..."
"ஆமா...."
"அப்போ எங்க அன்னாளுக்கு
லோன் கொடுங்க"
"அவங்களுக்கு இரண்டு ஏக்கர்
நிலம் இருக்கு என்று
இப்பதான ஒத்துகிட்டீங்க..."
"கால்காசு வருமானம் இல்லாத
காட்டு நிலத்த வச்சி அவள் என்ன செய்வாள்?
இரண்டு சின்ன புள்ளைகள
வச்சிகிட்டு அவள் ரொம்ப கஷ்டபடுறா?
ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க..."
"சட்டம் அப்படி இல்லியேம்மா...
நிலம் இருக்கிறவுங்களுக்கு
லோன் கொடுக்கக் கூடாது"
"நிலம் இருக்கிறவுங்க பட்டினியா
செத்தாலும் கடன் கொடுக்க மாட்டிய....
அதுதான் உங்க சட்டம்?
நீங்க லோன் கொடுகிறியன்னு
நிலத்த வித்துட்டா உங்க கிட்ட
வந்து நிற்க முடியும்?"
"என்னம்மா ....ஒன்றும் புரியாம
நீங்க பாட்டுக்கு
பேசிகிட்டு இருக்கீங்க."
"உங்களுக்குத்தான் எங்க கஷ்டம்
புரியல....இரண்டு ஏக்கர் நிலம்
வச்சிருந்தா அவன் பணக்காரன்ன்னு
சட்டம் போட்டு வச்சுருக்கிய....
அது குளத்து பத்து ...ஆத்துப் பத்துல
நிலம் இருக்கவுங்களுக்கு பொருந்தும்.
இந்த பொட்டல்காட்டுல... கருவேலம்
முள்ளு முளைச்சி கிடக்கிற காட்டுல போயி
உங்க சட்டம் பொருந்துமா?
அதோ அங்க நிற்கிறார எங்க
பஞ்சாயத்து பிரசண்டு அவருக்கு
இரண்டு மோட்டாரு தோட்டம் இருக்கு...
அவருக்கு உங்க சட்டம் பொருந்தும்.
எங்கள மாதிரி வானம் பார்த்த பூமி
வச்சிருக்குவகளுக்கு உங்க
சட்டம் எப்படி ஐயா பொருந்தும்?
பாத்து சட்டம் போடுங்க...
பாவப்பட்டதுக ஒரு ஆடு ...ஒருமாடு வாங்கி
வயித்த கழுலாமேன்னு வந்து
கண்ணை கண்ணை தள்ளிகிட்டு
நிக்குதுக....அதுக பிழைப்புக்கு
ஒரு வழிய செய்துகொடுங்க....
சட்டம் அது இதுன்னுகிட்டு....
ஐயா...பிரசண்டு ஐயா...
ஓட்டு கேட்கும்போது மட்டும்
நிலம் இருக்கிறவுகளுக்கு ஒண்ணும்
கிடையாதுன்னு சொன்னியளாய்யா?
இப்போ வந்து சட்டம் பேசுற ஆளை
கூட்டிட்டு
வந்து நிற்கிறிய..."
ஒரே மூச்சாக சொல்லி முடிக்குமுன்னே
கைத்தட்டல் காதைப் பிளந்தது.
அடுத்த பிரசண்டு நீதான் ஆத்தா
ஒட்டு மொத்த கூட்டமும்
சேர்ந்து குரல் கொடுத்தது.
"உங்கள் ஞாயமான கோரிக்கையை
மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு
கொண்டு செல்கிறேன்"
என்றபடி அதிகாரி
புறப்பட்டுச் சென்றார்.
ஒட்டு மொத்த கூட்டமும்
ஞானம்ம பாட்டியைச் சுற்றி
அங்கேயே நின்று கொண்டிருந்தது.
....
எளிய நடையில் பதிவிட்ட ஞானம்ம கதை மிக அருமை.
ReplyDelete