கடைமடை

கடைமடை


வானிலா ஒளி

வரப்பின்மீது விழ

கையில் லாந்தர் ஒளி

காலுக்கு வழிகாட்ட

கால்கடுக்கக்

கடைமடைப் பயணம்


ஓடையில் ஓடும் 

சிறுமீன் கண்கள் 

சிதறும் நிலவொளியில்

மின்னிடும் தாரகையாய்

மிரட்டி அழகூட்ட

வரப்பைத் தாண்டி 

குதிக்கும் தவளை 

கால்கள்மேல் 

துள்ளிக் குதிக்க

அச்சத்தில் நான்


கால்கள் இடறி 

கால்வாயில்  விழுந்த

அந்தநாள் நினைவுகள்

மெல்ல வந்து 

சிரிக்க வைக்க

நாணத்தால் முகம் கவிழ்ந்தேன்


அவைதான் எத்துணை

இனிய நாட்கள்

அந்தநாள் நினைவுகளில்

என்னைத் தொலைத்தேன்

சிள்வண்டு சுற்றி 

சுற்றி வந்து

கண் காணாக்

காட்சியாகி நின்றன.


உள்ளேன் ஐயா என்ற

சில்லென்று

மெல்லொலி 

மறுபடியும் மறுபடியும்

காதோரம் கவிபாட

அச்சமும் உவகை கலந்த

மெய்ம்மயக்கத்தில் நான்


ஒற்றைப் பறவையின்

சிறகடிப்பு  தன் இருப்பை

அறிவித்து மெல்ல

அச்சமூட்டி கடக்க

இந்த நேரத்தில் யாரவர்

பறவைகளின் அமைதியைக்

கலங்கடித்தது என்ற

ஆராய்ச்சியில் மனம்



யாருல அங்கே என்

மடையை அடைத்தது

என்ற பக்கத்துத் தோட்டத்து

மாமாவின் குரல்

வான்வழி வந்து

வரப்போரம்

ஆள் அனக்கம் இருக்கிறது

அச்சம் தவிர் 

என்று  தைரியம்

கொடுத்துக் காதுக்குச் 

செய்தி சொல்லிச் சென்றது.


அந்த நாள் நினைவுகள்

கடைமடைக்கு 

அழைத்துச் சென்று

கண் சிமிட்டிக் 

கவி பாட வைத்தது

இன்று

முதல்மடை திறந்து

மொத்த தண்ணீரையும்

வரப்பு மவுழ பெருக்கி

மகிழும் முன்னர்

மொத்தமாய் முழுநீரும்

நின்று போக


எவன்ல என் மடையை

அடைத்தது என்று

எகிறும் குரலோடு

லாந்தர் விளக்கு

துணையோடு

கடைமடை நோக்கி

 பங்காளி ஓட

உடன் நடந்த நாட்கள்

உள்ளுக்குள் குறுகுறுத்தது.


அந்தநாள் யான் கண்ட

காட்சி தந்த அதிர்ச்சி

மடைமீது 

யாரவர் கையில்

அரிவாளோடு

அய்யனாரோ இவர் 

அர்த்த ராத்திரியில்

கடைமடையைக் 

காக்க வந்த 

காவல் தெய்வமோ

என ஐயுறும் வண்ணம்

ஆரடியில் ஓருருவம்

அங்கே நின்றிருந்த நாட்கள்


மிச்சம் உயிரிருந்தால்

நாளை பார்க்கலாம் என

பதுங்கி மறைந்து

பம்மி அனக்கம் காட்டாமல்

அங்கிருந்து நகர்ந்து

வீடு வந்த நாட்கள்

நினைவின் உச்சம்

நிகழ்ந்தவை அனைத்தும்

கடைமடை

காட்டிய கவினுரு 

நினைவுகளின் மிச்சம் 









Comments