கடவுள் வேண்டும்
கடவுள் வேண்டும்
ஓடி வந்து வீட்டிற்குள்
எட்டிப் பார்த்தான் ரவி.
அம்மா கட்டிலில் படுத்திருந்தார்.
அருகில் போய் நின்று கொண்டான்.
அம்மாவையே மூச்சிரைக்கப் பார்த்துக் கொண்டு நின்றான்.
சாதாரணமான நாளாக இருந்தால்
அம்மா எதுக்கு இப்படி தலைதெறிக்க
ஓடி வர்ற....மெதுவா வந்தா என்னவாம் என்று திட்டியிருப்பார்.
ஏனின்று கண்டும் காணாமலும் மௌனமாகக் கிடக்கிறார்?
மெதுவாக அம்மா என்று அழைத்த படி
அம்மா மீது கையை வைத்தான்.
சில்லென்ற இருந்தது.
திடீரென்று என்ன இது?
அம்மா பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாளே
ஒரு பயம் வந்து அப்பிக் கொண்டது.
கைகால் நடுங்குவது போல் இருந்தது.
அம்மா... அம்மா
உருட்டிப் பார்த்தான் ரவி
உணர்வில்லாதது போல
கிடந்தார்....அம்மா..அம்மா..
."அம்மா...எவ்வளவு தேரம் கூப்பிடுவது...பசிக்கும்மா..சோறு போடு"
அழுதுப் பார்த்தான் .
அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை .
"போம்மா..
நான் உன்கூட பேச மாட்டேன் "
கோபமாக பேசியபடி
முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி திண்ணையில் போய் தலை கவிழ்ந்து சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டான்.
எவ்வளவு நேரம் இருந்திருப்பான்
என்று தெரியவில்லை.
அப்படியே தூங்கி கீழே
சரிந்து வீழ்ந்தான்.
திடீரென்று எழுந்து பார்க்கிறான்.
இன்னும் அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார்.
இப்போது மனதிற்குள் ஏதோ ஒரு
சந்தேகம் வந்து ஆட்டம் காட்டியது.
ஒருவேளை...அப்படி இருக்குமோ?
நினைவு வந்து மூச்சை நிறுத்துவது போல
இருந்தது.
என் அம்மா....என் அம்மா
அப்படியானால்...நான் நான்...
ஏதேதோ நினைவுகள் வந்து சரித்துப்
போட்டன.
கை கால்கள் எல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது.
அச்சம் வந்து அவனை அம்மாவை நெருங்க விடவில்லை.
சற்று விலகி நின்றான்.
கண்கள் அம்மாவின் மீது அப்படியே
நிலைகுத்தி நின்றன.
சட்டென்று சுதாரித்துக் கொண்டு,
சே...சே அப்படி ஒன்றும் இருக்காது.
இருக்கவும் கூடாது.
வேலைப்பளுவில்
அசந்து தூங்கி விட்டார்.அவ்வளவுதான்
என்று மனதிற்குள் சமாதானம் சொல்லிவிட்டு,
கதவு நிலையைப் பிடித்தபடி
அம்மாவையே முறைத்துப் பார்த்தபடி
நின்றிருந்தான்.
அம்மா எழும்பவே இல்லை.
நான்
வீட்டிற்கு வரும்போது ஒருநாளும்
அம்மா இப்படித் தூங்கியதில்லையே...
அம்மாவிற்கு இன்று என்னாயிற்று.?
என்மீது கோபமா?
ஒருவேளை நான் நேரம் கழித்து
வந்ததற்காக கோபமாய்
கிடக்கிறாரோ ?
அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
"அம்மா..நான் வேறு
எங்கும் போகலம்மா.
பள்ளியில் ஒரு சிறப்பு வகுப்பு
வைத்திருந்தாங்கம்மா
...அதனால்தான் நேரமாயிற்று.
எழும்பும்மா...."
மறுபடியும் முதலிலிருந்து தொடங்கினான்.
"வகுப்பு எடுக்க ஒரு பெரிய
சார் வந்திருந்தாரம்மா....
அவர் என்ன கேட்டார் தெரியுமா....கேளேன்....அம்மா எழும்பி கேளேன்...."
மறுபடியும் மறுபடியும் கெஞ்சிப் பார்த்தான்.
"எழும்ப மாட்டேல்ல...நீ எழும்ப மாட்டேல்ல....அப்போ...போம்மா....நான் சொல்ல மாட்டேன்"
என்று முகத்தைத் திருப்பி
வைத்துக் கொண்டான்.
ஐந்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
மறுபடியும் அம்மா முன்னர் போய் நின்றான்.
"அம்மா கேட்டியா....அங்கே அந்தப்
பெரிய சார் என்ன கேட்டார் கேட்டியா?
உனக்கு சாப்பாடு துணிமணி எல்லாம்
தருவது யாரு என்று கேட்டாரு.?"
"அதற்கு அக்பர் என்ன சொன்னான்
தெரியுமா?
அல்லான்னு சொன்னான்."
அப்படியாம்மா?
அக்பர் சொன்னது சரியா?
சாம் சொல்றான் ஏசுதான்
எல்லாம் தருவாராம்.
உண்மையாம்மா?
குமார் என்ன சொன்னான்
கேட்டியா?
புள்ளையார்தான் எல்லாம் தருவார்
என்கிறான்.
நான் யாருன்னு சொன்னேன்
தெரியுமா?
அம்மா கேளும்மா...நான்
யாருன்னு சொன்னேன் தெரியுமா?
என் அம்மான்னு சொன்னேன்...
எனக்கு எல்லாம் தருவது
நீதானேம்மா...அப்போ நீ தானே எனக்கு
கடவுள்....
சொல்லும்மா நான் சரியாதானே
சொன்னேன் .
சொல்லும்மா நான் சரியா சொல்லலியா?
எல்லா
மாணவர்களும் என்னைப்பார்த்து
சிரிச்சாங்கம்மா....நான் சொன்னது
தப்பாம்மா... நான் தப்பா சொன்னேனாம்மா .?
என் அம்மாதான் எனக்கு கடவுள்.
என்றபடி பெருமையாக அம்மாவைப் பார்த்தான்.
அம்மாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஓர் அனத்தல் மட்டும்
மெதுவாக வெளி வந்தது.
அட போம்மா..நான் என்ன சொன்னாலும்
இந்த அம்மாவுக்கு புரியவேயில்லை.
எழுந்திரும்மா....
நான் சொன்னது தப்பாம்மா...
சொல்லும்மா நான்
சொன்னது தப்பா....
ஏதோ விபரீதமாகப் பட்டது.
ஏன் இந்த அம்மாவிற்கு என்னாயிற்று?
உசுப்பி பார்த்தான். உடம்பு
அனலாக கொதித்து கொண்டிருந்தது.
கை கால்கள் முடங்கி
போய்க் கிடந்தன.
என் அம்மா...என் அம்மா.
உரக்கச் கத்த வேண்டும் போல் இருந்தது.
ஓடிப்போய் பக்கத்து வீட்டு பாட்டியிடம் சொன்னான்.
பாட்டி "ஒன்றும் இருக்காது. வேலை களைப்புல அசந்து தூங்கிகிட்டு
இருப்பா...விடு..
நேற்றே கொஞ்சம் கை காலெல்லாம்
வலியா இருக்குன்னாள்.
கொஞ்சம் தூங்கட்டும்.
சுக்கு தண்ணி போட்டு
கொண்டாறேன் எழும்பிடுவா "
சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.
மறுபடியும் ஓடிவந்து அம்மா முன்னால் நின்றான்.
மனம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
"எனக்கு வேணும்...
எனக்கு வேணும்.
எனக்கு என் கடவுள்
வேணும்..."
வெளியே ஓடினான்.
ஓடிப்போய் கோவில் முன் போய் நின்றான்.
கோவில் பூட்டிக்கிடந்தது.
வெளியில் நின்றபடியே,
"சாமி எனக்கு
என் கடவுள் வேண்டும்..
நீ கொடுப்பா..
சாமி நீ கொடுப்பா.
என் கடவுள் எனக்கு
வேணும்.."
உரக்க தன் வேண்டுதலை
சாமி முன் வைத்தான்.
போகிற வருகிறவர்கள் எல்லாம்
வேடிக்கையாக பார்த்தபடிச்
சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த
ஒரு பெரியவர் மட்டும்
பக்கத்தில் வந்து நின்று
இந்தச் சிறுவன் என்ன சொல்லி அழுகிறான்
என்பதைக் கேட்டார்.
"என் கடவுள் வேணும் சாமி...."
என்ற வேண்டுதல் கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தது.
முதல்முறையாக கடவுளிடம் போய்
எனக்கு கடவுள் வேணும் என்று
அடம்பிடித்து நிற்கும் சிறுவனைப்
பார்த்திருக்கிறார்.
ஏன் இந்த வேண்டுதல்?
"என்ன தம்பி...கடவுள் முன்னால் நின்று
கடவுள் வேணும் கடவுள் வேணும்
என்று கேட்கிறாய். என்னாயிற்று
உனக்கு?" விசாரித்தார் பெரியவர்.
"எனக்கு என் கடவுள் வேணும்.
என் கடவுள் வேணும்."
மறுபடியும் சொன்னதையே சொன்னான் சிறுவன்.
"கடவுள் வேணுமா? கடவுள் என்ன
விளையாட்டுப் பொருளா?
கடவுளிடம் போய் கடவுள் வேண்டும் என்று
கேட்கிறாய்"
என் அம்மாதான் என் கடவுள்.
அதனால்தான் என் கடவுள் வேணும்னு
சாமிகிட்ட கேட்கிறேன்.
"புத்திசாலி புள்ள...
அழாத தம்பி...
வீட்டுக்குப் போ.
உன் அம்மா உனக்குக் கிடைப்பாங்க "
"நிச்சயமாக என் அம்மா
கிடைப்பாங்களா
அங்கிள்?"
கடவுள் எங்கேயாவது
காணாமல் போவாரா?.
உன் அம்மா கடவுள் என்று
நீ நம்புறா இல்ல...
ஆமாம் ...
அப்போ உன் கடவுளுக்கு
ஒன்றும் ஆகாது..
நீ நம்பிக்கையோடு
வீட்டுக்குப் போ.....
உன் கடவுளை
சாமி சுகமாக உன்னிடம்
காட்டுவார்....
ஏதோ ஒரு நம்பிக்கையில்
வீட்டுக்கு வந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி...
நிஜமாவா...
அம்மா ஓடி வந்து கட்டிப் பிடித்தான்.
அம்மாவுக்கு சுக்கு தண்ணி வைத்து
கொடுத்த பாட்டி,
"பார்த்தியா தங்கம் உன்
பிள்ளைய...
கொஞ்ச நேரத்தில்
என்னா பாடுபட்டுட்டான்."
அப்படியாப்பா...என்பதுபோல
மகனைப் பார்த்தார் தங்கம்.
அம்மாவைப் பார்த்த
எல்லாவற்றையும் மறந்து போன
ரவி,
"எம்மோ கேட்டியா.....
நீ யாரும்மா?"
"நான் யாரா?
நான் உன் அம்மா..."
"அதுக்கு மேல..."
"உன் தங்கம்மா.."
"இல்ல வேறு வேறு ...
வேறு மாதிரி சொல்லுங்க.."
"வேறு என்ன மாதிரி சொல்ல?
நான் மாசிலாமணி
மகள்."
"அட போம்மா... நான் வேறு
கேட்கிறேன்."
"நீ என்ன கேட்கிறா என்று எனக்கு புரியவில்லிய"
"புரியாது.. புரியாது என் கடவுளுக்கு
ஒண்ணும் புரியாது."
"கடவுளுக்கு ஒண்ணும் புரியாதா?
அது எந்தக் கடவுள்
ஒன்றும் புரியாத கடவுள்?"
"இதோ இந்தக் கடவுள்தான்."
என்றபடி அம்மாவைக் கட்டிப் பிடித்தான்.
"நமக்கு எல்லாம் தருவது
கடவுள் என்றால்
நீதானே என் கடவுள்."
"யாரு சொன்னா?"
"யாரு சொல்லணும் ?
நான்தான் சொன்னேன்.
என் அம்மா தான் என் கடவுள் ."
"என் சாமி... "அப்படியே கட்டிப்பிடித்து
முத்தமிட்டார் அம்மா.
என் அம்மா என் கடவுள்
என் அம்மா என் கடவுள்
மறுபடியும் மறுபடியும்
சொல்லி உள்ளுக்குள்
ஒத்திகை பார்த்தது மனது.
கைகள் கடவுள் வேண்டும் என்று கட்டிப்பிடித்துக்
காதல் செய்தது.
Comments
Post a Comment