பினாங்கு மாப்பிள்ளை

பினாங்கு மாப்பிள்ளை 


கண்ணம்மோ ... கண்ணம்மோ...

மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு

வாசலில் வந்து நின்றான் முத்துசாமி.


"ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார...

என்னமும் அவசரமா?"


"அம்மதான் உங்கள் கையோட

கூட்டிவரச் சொன்னாவ"


"இந்தா வாரேன்னு சொல்லு"


"வாங்க... உடனே வரணுமாம்"


"அப்படி என்ன தல போற அவசரம்"


"வாயேன்....நேரதாத போக்கிட்டு

எங்க பசு கூட்டிப் போடப்போவுது...

அதுதான் அம்ம கூப்பிட்டாவ..."

கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி.



கூடவே போனார் கண்ணம்ம.

இப்படி நாளும் கண்ணம்மயை

தேடி யாராவது வந்துவிடுவர்.


மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு

ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய என்பார்கள்.


கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும்

அந்த ஊரில் இருக்க முடியாது. 

அவ்வளவு பிரபலம்.


எல்லாருக்காகவும் ஓடி ஓடி

 உதவும் குணம்.

 ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால் 

முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது 

கண்ணம்ம மட்டும்தான்.

கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா...

கண்ணம்மயத் தவிர யாரும்

அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது.


எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும்

கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும்.


கண்ணம்மா வந்தாலே அந்த இடம்

கலகலப்பாகிவிடும்.

முடுக்கிவிட்டு வேலை வாங்குவார்.

 என்ன பண்ணணும் ஏது 

பண்ணணும் என்று சொல்லிக் கொடுப்பார்.

வீட்டில் கிடக்கும் தட்டு மூட்டு வேலைகளை

கூட இருந்தே செய்து கொடுப்பார்.


ஆனால் யார் வீட்டிலும் அநாவசியமாக

கை நனைக்க மாட்டார்.

கறாரானப் பேர்வழி.

நாளபின்ன சோத்துக்காக அலையுறவ

என்று சொல்லிபிடப்பிடாது என்பார்.


இப்படி ஓடி ஓடி ஊருக்கு உழைத்து வரும்

கண்ணம்ம ஓய்ந்து போய்

விட்டத்தைப் பார்த்தபடி கிடக்கிறாள்.

நினைவலைகள் எங்கெங்கோ சுற்றி

வருகின்றன.

ஏனென்று கேட்க நாதியில்ல.


பினாங்குக்காரர் மட்டும் இருந்திருந்தால்....

எங்கு போனாலும் இந்தப் பினாங்குக்காரர்

நினைவு மட்டும் நெஞ்சைவிட்டு

அகலவே மாட்டேங்குது....

அவரை நினைச்சதும் கண்ணம்ம

கண்கள் பனித்தன.

நெஞ்சக்குளிள்ள ஏதோ உருளுவது போல

இருந்தது


வாய்விட்டு அழவும் முடியாமல்

உள்ளுக்கூள்ளே அடக்கிக் கொண்டார்.


இனி நினைச்சு என்ன 

ஆவப்போவுது . கைபிடச்ச மவராசன்

கடைசிவர கூடவருந்துருந்தா...


இன்னும் எவ்வளவு நாள்தான்

அவர் நெனப்போடு வாழ்வது?


நினைப்பிலிருந்து விடுபட நினைத்து

தோற்றுப்போகிறது பாழும்

மனம்.

அந்த ஒரு இடத்தில் மட்டும் நின்று

கண்ணம்மவைப் பாடாப்படுத்தும்.


 எப்போது எல்லாம் பினாங்குக்காரர் நினைப்பு

 வருகிறதோ அப்போவெல்லாம்

 இப்படித்தான் நோய்வந்தக் கோழிபோல

முடங்கி மூலையில் விழுந்து கிடப்பாள்

கண்ணம்ம.


முப்பது வயசுல மூன்று பிள்ளைகளைக் 

கையில் கொடுத்துவிட்டு பினாங்கு போயிட்டு

வாரேன் என்று போனவருதான்.

இன்றைக்கு வரை மனைவி என்ன ஆனா...

பிள்ளைகள் என்னாச்சு...

என்று வந்து ஒரு எட்டு வந்து எட்டிப்

பார்த்திட்டுப் போக மனம் வரல...

பாவி மனுஷனுக்கு.


ஆரம்பத்தில் ஒரு ஆண்டு ஒழுங்காக

கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் பினாங்குக்காரர்.

பணமும் மாதாமாதம்

டாணென்று வந்து நிற்கும்.

ஊரே கண்ணம்ம  குடுத்து வச்சவ...

பிடிச்சாலும்புடிச்சா 

கண்ணம்ம புளியங்கொம்பால்லா

பிடிச்சிருக்கா என்று பேசுவர்.


அதற்கு ஒரு சின்ன சிரிப்பு மட்டும்தான்

பதிலாக வரும்.உள்ளுக்குள்ள பினாங்கு காரர நினைச்சாலே பெருமையா

இருக்கும்.


கலியாணம் பண்ணுன புதுசுல பினாங்கு மாப்பிள்ளை பினாங்கு மாப்பிள்ளை 

என்று ஊரே ஒச்சியப் பட்டுக் கிடந்தது.


கண்ணம்மவும் சும்மா சொல்லக்கூடாது.

வாலிபத்தில் பார்க்க வசீகரமாகத்தான்

இருப்பாள். முகம் முழுக்க மஞ்சள்பூசி

ஒரு மாசு மரு இல்லா முகம்.

யாரையும் ஒருமுறைக்கு இருமுறை

திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.

அழகைக் கொடுத்த ஆண்டவன் ஆஸ்தியைக்

கொடுக்கல...பணத்தைக் கொடுக்கல


கூடபொறப்புன்னு யாருமில்லை.

கண்ணம்ம அப்பாவும் கண்ணம்ம

பொறந்து ஒரு வருசத்துல வயலுக்கு

தண்ணி பாய்க்கப் போனவரு கிணற்றுல தவறி விழுந்து இறந்து போயிட்டாரு.


கூப்பிட்ட வீட்டுக்கு வேலைக்குப் போகும்

நிலையில்தான் கண்ணம்ம

அம்ம நிலம  இருந்தது.


ஆனால் என்னதான் வறுமை இருந்தாலும்

கண்ணம்மய பொத்தி பொத்தி வைத்துதான்

வளர்த்தார் பாட்டி.

ஒருநாள் தண்ணீர் இறைக்க ஊர்க் கிணற்றுக்குப்

போனவளை பார்த்திருக்கார் பினாங்குக்காரர்.

ஆமா...அவரை ஊருல பினாங்குக்காரர் என்றுதான்

கூப்பிடுவாங்க.


கண்ணம்மவைப் பார்த்ததும் 

பினாங்குக்காரருக்குப் பிடிச்சுப் போச்சு.

பினாங்குக்காரருக்குத் தாய்தகப்பன் இல்ல.

பக்கத்து ஊருல பாட்டி வீட்டுல நின்னு வளந்தாரு.

இங்கே சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தாரு.

சித்தப்பாவிடம் சொல்லி பெண் கேட்டுப்  பார்த்தார்.

கண்ணம்மவின் அம்மாவுக்கு இந்தச் சம்பந்தம்

அவ்வளவா பிடிக்கல... 


காரணம் தொலைதூரத்து ஊருல புள்ளய 

கெட்டிக் குடுத்தா சட்டுன்னு போய்

பார்த்துட்டு வரமுடியாது.

ஒரு நோவு நொம்பலம்ன்னா யாரு

பாப்பா என்று பயப்பட்டாவ..


ஆனா கண்ணம்மவைப் பார்பதற்கு என்றே

ஊரு கிணற்றங்கரையைச் சுற்றிச் சுற்றி

வர ஆரம்பித்தார் பினாங்குக்காரர்.


ஒரு கட்டத்தில் கண்ணம்மவும் தண்ணீர்

இறைப்பதுபோல ஓரக்கண்ணால் பினாங்குக்காரரைப்

 பார்க்க...இப்படியாக ஆரம்பித்தது 

 இருவருக்குமான காதல்.

வீட்டுல தண்ணீர் இருந்தாலும் 

தண்ணி குடத்த தூக்கிட்டுப் போயிருவா

கண்ணம்ம.


பட்டு புட்டுன்னு தண்ணியை எடுத்துட்டு வந்தா என்ன ? வாய் பார்த்துட்டு

நிக்காத நாலுபேரு தப்பா பேசுவாவன்னு

சொல்லிதான் அனுப்புவாவ பாட்டி.


ஆனாலும் காதல் வந்தால் காலு ஒரு இடத்துல நிற்கவா செய்யும்.


கண்ணம்ம காதல் அரசல்புரசலாக கண்ணம்மவின்

அம்மா காதுகளில்

விழ, அவ்வளவுதான் பத்திரகாளியாட்டம்

ஆடித் தீர்த்து விட்டார்.


ஊரு பேரு தெரியாத பய...உன்ன மயக்கிட்டானாக்கும்.


நீ தண்ணீர் எடுத்த லட்சணம் போதும் என்று 

கண்ணம்மவை வீட்டுக்காவலில்

வைத்தார்.


ஆனால் கண்ணம்மவால் பினாங்குக்காரரை

மறக்க முடியல.

பினாங்குக்காரரும் கண்ணம்மவை விட்டுவிடுவதாக

இல்லை.இருவரும் சின்ன பிள்ளைகளைத் தூது

அனுப்பி யாருக்கும் தெரியாமல்  காதலை

வளர்த்து வந்தனர்.


ஒருநாள் காதலர்கள் இருவரும் ஊரைவிட்டே

ஓடிப் போய் விட்டனர்.


பினாங்குக்காரர் சித்தப்பா வீட்டில் போய்

சண்டைப் போட்டார் அந்தப் பாட்டி.


கடைசியில்அவள் என் கண்ணுலேயே முழிக்கப்பிடாது என்று மண்ணாள்ளி

தட்டிட்டு வந்துட்டாவ.


தாயின் வைராக்கியம் எல்லாம்

எத்தனை நாளைக்கு?

ஒத்தப் புள்ள பொறக்கிறதுவர 

ஒதுங்கி இருப்பாவ...

பேரனைக் கண்டதும் மெதுவா கிட்ட

நெருங்கிடுவாவ.

இதை எத்தனை வீடுகளில் பார்த்திருக்கோம்.

இதுதான் கண்ணம்ம வாழ்க்கையிலும்

நிகழ்ந்தது.


மூத்த மவன் பிறந்த பிறகு தாய் வீட்டுக்கு

சகஜமாக வந்துபோய் இருக்க ஆரம்பித்தாள்

கண்ணம்ம.


நாலு வருசத்துல மூணு பிள்ளைகளைக்

கொடுத்துட்டு ஊரைச் சுத்தி சுத்தி

வந்தாரு பினாங்குக்காரரு.


அப்போதுதான் பினாங்கிலிருந்து ஒரு கடிதம்

வந்தது.

உடனே தடபுடலாக விசா எடுத்துப் 

புறப்பட்டுப் போனவருதான்.

போகும் போது விசா எல்லாம்

எடுத்த பிறகு வந்து கூட்டிப்

போறேன் என்று சொல்லிப்

போனவரு...

இன்றுவரை வரவே இல்லை.

ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு கடிதம் டாணென்று

வந்து நிற்கும்.

மாதாமாதம் பணமும் வந்துவிடும்.

வந்து கூட்டிட்டு போறேன்னு

எழுதுவாரு.

பிள்ளைகள நல்லா பார்த்துக்கன்னு

கரிசனமா எழுதுன மனுஷன்.


 கடிதப் போக்குவரத்து

கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 

கொண்டே வந்தது.

இப்படியாக ஒரு வருடம் ஓடியிருக்கும்.

மறுபடி பணம் அனுப்புவதும் நின்னுப்

போச்சு.கடிதமும் கிடையாது.


யாருகிட்ட போயி விசாரிக்க முடியும்?


ஆனாலும் கண்ணம்ம விட்டுவிடல.

கண்ணம்ம படிக்கத் தெரியாதவ...

அதனால பக்கத்து வீட்டு மல்லிகா

அக்கா கிட்ட போய்

லட்டர் எழுதி வாங்கி லட்டருக்கு மேல்

லட்டர் எழுதி அனுப்புவா...

ஆனால் எந்த லட்டருக்கும் பதில் வரல..

ஒரு கட்டத்துல லட்டர் எழுதி எழுதி

ஓய்ந்து போய்விட்டாள் கண்ணம்ம.


கையில காசு இருக்கிற வரை ஒன்றும் தெரியல...

பிள்ளைகள் வளர வளர  என்ன பண்ணுவது

என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

வீடு வீடா போய் பத்து பாத்திரம் தேய்க்கலாம்

என்றால் கிராமத்துல அந்த வேலைக்கு

ஆள் வைக்க மாட்டாங்க...

அப்போது தோன்றியதுதான் கீரை வியாபாரம்.

கையில பணம் வேண்டியது இல்ல. முதல் 

இல்லாமலேயே செய்யும் தொழில் மலங்காடும்

காடுமாக உள்ள ஊருல பிழப்பு

நடத்த இது மட்டுந்தான் இப்போது

வழியாப்பட்டது.அம்மாவுக்கும்

வயசாகிப் போச்சு. மானம் மரியாதைய பார்த்தா பிள்ளைகளுக்கு கஞ்சிக்கு எங்க

போவது.?


துணிஞ்சு ஒரு நாள் காட்டுக்குக் கீரை பறிக்கப் பெட்டிய தூக்கிட்டுப் 

புறப்பட்டாள் கண்ணம்ம. 

ஆரம்பத்தில் புள்ளைகளை விட்டுட்டுப்

போவது கஷ்டமாதான்

இருந்தது. இதைப் பார்த்தால்...வயித்துப்பாட்டைப்

பார்க்கணுமே...

காலையிலையே கஞ்சிக் கலயத்தோடு புறப்பட்டுப்

போய்விடுவாள்.

கடலை காட்டுக்குள்ள இறங்கி கீரை பறித்து வருவா...

ஒவ்வொரு நாள் மலை பக்கமா போய்

சுண்டைக்காய் பறித்து வந்து விற்பாள்.

இப்படியா கண்ணம்ம

 பாடு நடந்தது.


மூணு புள்ளைகளுக்கும் வயித்துப் பாட்டுக்கு

வஞ்சகம் இல்லாம கூழோ கஞ்சியோ வயிறார

ஊற்றினாள்.

இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்? 

மலங்காடு பக்கம் போனா நல்ல கனகாம்பரம்

பூத்துக் கிடக்கும்.

கண்ணம்மவுக்கு 

பெண் பிள்ளை இல்லாததுனால

புள்ளைக்கு பூவச்சி அழகு பார்க்க ஆசைப் படுவா..

அதனால இளையவனுக்கு கொண்டை வளர்த்து 

சீவி பூ வச்சி அழகு பார்ப்பா..


கிராமத்தில ஐந்தாம் வகுப்புக்கு மேல

பள்ளிக்கூடம் இல்ல...அதனால மூத்தவன்

ஐந்தாவது முடிச்சதும் பக்கத்து ஊருக்கு

படிக்க அனுப்புனா...

படிக்கப் போனவன் பள்ளிக்கூடத்துக்குப்

போறேன்னுட்டு முந்திரிக் காட்டுக்குள்ள 

சுத்திகிட்டு அலஞ்சுருக்கான்.

பள்ளிக்கூடத்துல இருந்துதேடி வந்தப்பதான்

கண்ணம்மவுக்கு விசயமே தெரிஞ்சுது.

போட்டு விளாசு விளாசுன்னி விளாசிப்

பார்த்தா கண்ணம்ம.


பய திமிறிட்டான்.

ஒரு கட்டத்துல என்ன செய்வ என்று

எதுத்து அடிக்க கைய ஓங்கிகிட்டு 

நின்னான் மூத்தவன்.


இவன் சரிப்பட மாட்டான் என்று ஊருல

ஒரு வீட்டுல மாடு மேய்க்க கொண்டு

விட்டாள்.

அதிலும் ஆயிரம் திருக்குத்தாளம் பண்ணுவான்.


முன்னேர் போனமாதிரிதானே பின்னேரும்

போகும்.

மூணுபேருமே படிப்ப நிறுத்திட்டு ஊர்ல 

கிடச்ச வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டானுவ.

ஒருத்தன் சாராயத்துக்கு சர்க்கரை சுமக்கும்

வேலையில் போய் சேர்ந்து கொண்டான்.


கடைசி பையன் ஒரு காப்பி கடையில

கையாளா வேலை செய்தான்.


இப்படி பிள்ளைகளால பிரச்சனைகள் வந்து

நின்னப்பதான்  கண்ணம்ம

ரொம்ம பினாங்குக்காரரை  நினைக்க ஆரம்பிச்சா..


ஒரு ஆம்பிள இல்லாததுனால இந்தப்

புள்ளைகள் தன்னை என்னா பாடுபடுத்துது

என்று...சொல்லிச் சொல்லி புலம்புவா....



பினாங்குக்காரர் மட்டும் இப்போ இருந்துருந்தா....

பிள்ளைகள் இப்படி படிப்பை விட்டுவிட்டு

அலைந்திருக்காது என்பது கண்ணம்மவின்

கணிப்பு.


நினைத்தவளுக்கு கண்ணீர் முட்டிக்

கொண்டு வந்தது. 


வயசான அம்மா கூடவே இருந்து

வீட்டைக் காத்துக் கிடப்பதால் ஏதோ ஒரு பாதுகாப்பு

இருப்பதுபோல உணர்ந்தாள் கண்ணம்ம.


ஆனாலும் அப்பப்போ பினாங்குக்காரர்

நினைப்பு வந்து கண்ணம்மவ...

நிலை குலைய வைத்திடும்.

ஒவ்வொரு நாளு காட்டுக்குள்ள கீரை

பறிக்கும்போது நினைப்புவர அப்படியே ஒரு

மரத்துக்குக்கீழ உட்கார்ந்து அழுவா...


ஆனாலும் ஊருக்குள்ள வந்ததும்

எந்த நினைப்பும் இல்லாததுபோல 

பந்தா காட்டித் திரிவா...

கட்டுனவன் சரியில்லன்னா எந்தப்

பொண்ணுக்குத்தான் கவலை இருக்காது.


அதுவும் போனவன் இருக்கானா இல்லையா

என்று ஒரு துப்பும் இல்லாம இருக்கும்போது

கலங்காமல் எப்படி இருக்க முடியும் ?


பினாங்குக்காரர் வருவார் என்ற 

எதிர்பார்ப்போடு கண்ணம்ம நாட்களைக் கடத்திக் 

கொண்டிருப்பதுபோல எத்தனை கண்ணம்மாக்கள்

தங்கள் கணவன்மார்களை வெளிநாடுகளுக்கு

அனுப்பிவிட்டு விட்டத்தைப் பார்த்தபடி 

விழி மூடாது காத்திருக்கிறார்களோ?


பினாங்குக்காரர் வருவாரா?










Comments

Popular Posts