கையில் ஊமன் கண்ணிற் உணங்கல்

கையில் ஊமன் கண்ணிற் உணங்கல் 


சங்க இலக்கியம் என்றதுமே 
அது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது
என்பதுபோல முகத்தைத் திருப்பி
வைத்துக் கொண்டு ஒதுங்கி
 நின்று விடுவோம்.
காரணம் பல சொற்கள்
பொருள் புரியாததுபோல இருப்பதுதான்.

படித்தவர்களும் இதைப்போய்
யார் படிப்பார்கள் என்று சாதாரணமாகக்
கடந்து போய்விடுகின்றனர்

தமிழ் ஆர்வலர்கள் மட்டும்
மாங்குமாங்கென்று படித்து
தமிழ் இலக்கிய இன்பத்தை
நுகர்ந்து மகிழ்ச்சியில் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றனர்.


உண்மையிலேயே சங்க இலக்கியம்
படித்தவர்களுக்காக எழுதி வைக்கப் 
பட்டதா?

நமது வாழ்வியலைச் சொல்வதுதான்
இலக்கியம்.

நாம் பார்த்த... நம்மோடு பழகிய ..!
இன்றும் நாம் கண்டு சுவைக்கத் கூடிய
நடைமுறை செயல்பாடுகளைக் கண்முன்
 கொண்டு நிறுத்துவதாகவே இலக்கியங்கள்
 இருக்கின்றன.
 
படிக்கப் படிக்கத் தான் இந்த 
உண்மை புரியும்.
 
அந்த அழகியலை 
அருமையான சொல்லோவியத்தை
சங்க இலக்கியப் பாடல்களில் 
நான் கண்டு வியந்ததுண்டு.

நான் வியந்து பார்த்த அந்தக்
காட்சியை உங்கள் கண்முன்
கொண்டு வந்து நிறுத்த விழைகிறேன்.

அந்தக் காட்சி உங்களுக்குள்ளும் இலக்கியம்
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத்
தூண்டும் என்று நம்புகிறேன்.

நேற்றைய காதல்
இன்றைய காதல்
நாளைய காதல்
என்று காதல் காலம்தோறும்
மாறுபடுவதில்லை.
 எல்லாக் காலத்திலும் 
காதல் இருந்திருக்கிறது.
இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
நாளையும் இருக்கும்.
உயிர்கள் இருக்கும்வரை காதல்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது.

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்
ஓர் இனிமையான உணர்வு.

அதன் நினைவு சிலருக்கு இனிமையானதாக
இருக்கலாம். இன்னும் சிலருக்கோ வலியைக்
கொடுப்பதாக இருந்திருக்கலாம்.
எது எப்படியோ.....
இந்தக் காதல் படுத்தும்
பாடு இருக்கிறதே...வெளியில் சொல்லவும்
முடியாமல்....மெல்லவும் முடியாமல்....
அடேங்கப்பா...என்ன ஒரு தவிப்பு!
பரிதவிப்பு!

அந்தத் தவிப்பு தான் இந்தப்
பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
ஐயோ...பாவம் என்று நம்மைப்
பரிதாபப்பட வைக்கிறது..

வெள்ளிவீதியார் அறிமுகப்படுத்தியுள்ள
தலைவன் ஒருவன் காதல் வயப்பட்டு நிற்கிறான்.

அவனுக்கு என்ன செய்வதேன்றே 
தெரியவில்லை.
நண்பர்களோ என்னாச்சு உனக்கு?
என்னாச்சு....
நாளும் உடம்பு மெலிந்து கொண்டே
போகிறதே....
என்று கேட்டு நிற்கின்றனர்.

நண்பன் காதலில் விழுந்து தவிப்பது
புரிகிறது.

"எப்படி இந்தச் சிக்கலில் இருந்து
மீளப் போகிறாய் "என்கின்றனர்.


அதற்கு அவனால் என்ன
சொல்ல முடியும்?

ஓர் உவமையைச் சொல்லி
இதுதாம்பா என்நிலைமை என்கிறான்.

தலைவன் சொன்னதைக் கேட்டதும்
நண்பர்கள் அப்படியே 
கண்கலங்கி நிற்கின்றனர்.

நண்பர்கள் கண்கலங்கும் அளவிற்கு
அப்படி என்ன சொல்லியிருப்பான்?

அறிய வேண்டும் என்று ஆவலாக
இருக்கிறதல்லவா?

வாருங்கள்...அது என்ன
என்பதை நாமும் கேட்டு வருவோம்.
அந்தக் காட்சியைக் கண்முன் கொண்டு
வந்து நிறுத்தும் பாடல் 
இதோ உங்களுக்காக...


"இடிக்கும் கேளிர்!நும்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல;

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய்;

நோன்று கொளற் கரிதே!"
                        - குறுந்தொகை"
                        
பாடியவர் வெள்ளிவீதியார் என்ற
புலவர்.

என்னைக் கடிந்துப் பேசும்
 நண்பர்களே!
 உங்கள் கடிந்துரையானது
 என் உடம்பு சீர் குலைந்து போவதினின்று
 நிறுத்திவிடுமானால் அது 
 எனக்கு நல்லதுதான்.
 ஆனால் என் நிலைமை இப்போது
 எப்படி இருக்கிறது தெரியுமா?
 
" ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
 கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
 வெண்ணெய் உணங்கல் போல"
இருக்கிறது.

அது என்ன கையில் ஊமன்
கண்ணிற் காக்கும் வெண்ணெய்
உணங்கல் போல என்கிறீர்களா?

நல்ல வெயில்.
ஒரு பாறையில் வெண்ணெய் வைக்கப்பட்டுள்ளது.
வெயில் ஏற ஏற வெண்ணெய் உருகுகிறது.
இப்போது கை இல்லாத ஒருவன்
அருகில் அமர்ந்திருக்கிறான்.
அவனால் வாயும் பேச முடியாது.

இப்போது அவனால் என்ன செய்யமுடியும்?
கையிருந்தாலாவது வெண்ணெய்யை அள்ளிப்
பாதுகாப்பான இடத்தில் வைத்துக்
கொள்ளலாம். அதுவும் இல்லை.
வாய் பேச முடிந்தாலாவது யாரையாவது
உதவிக்கு அழைத்து வெண்ணெய்யைப்
பாதுகாப்பாக எடுத்து வைக்கப் சொல்லலாம்.
அதுவும் முடியாது?

அவனால் என்ன செய்ய முடியும்?
வெண்ணெய் உருகிக் போவதைக்
கண்களால் பார்த்திருந்து
வருந்தத்தான் முடியும்.
அதே நிலைதாலையில்தான் நானும்
இருக்கிறேன்.


உடம்பு முழுவதும் காதல் நோய்
படர்ந்திருக்கிறது.
நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?
அதனை என்னால் வெளிப்படுத்தவும்
இயலவில்லை.
உருகிப்போவதைத் தவிர அதைத்
தடுத்து நிறுத்த இயலாத 
கையறுநிலையில்தான்
இருக்கிறேன்" என்று சொல்லிக் 
கலங்குகிறான்.

கலக்குது இல்ல...
கண்கள் கலக்குது இல்ல..

நான் செயலற்றுப் போனேன் என்று
சொல்லியிருந்தால்....
உன்னை யார் காதலிக்கச் சொன்னது?
குதர்க்கமாகப் பேசி மனதை
நோகடித்திருப்போம்.

 அவளை நினைத்து
உருகுகிறேன் என்று சொல்லியிருந்தால்
நாம் கலங்கியிருக்க மாட்டோம்.

அட போய்யா....நீயும் உன்
காதலும் என்று சொல்லிவிட்டுக்
திரும்பிப் பார்க்காமல் போயிருப்போம்.

அதற்கு அவன் ஓர் உவமை சொன்னான்
பாருங்கள்....அந்த இடத்தில்தான்
அத்தனை பேர் கண்களையும் கலங்க
வைத்துவிட்டான்.

"கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல"

என்ன அருமையான உவமைங்க...

யாருங்க இந்த வெள்ளிவீதியார்?

இந்த உவமைக்காகவே
வெள்ளிவீதியார் நம் இதய
வீதியில் அடிக்கடி உலா
வரப்போகிறார். 

பெண்கள் மட்டும் தான் காதலால் 
கைவளை கழர பசலை நோய்ப் படர
மெலிந்து உருகிப் போவார்களா?

ஆண்கள் அதைவிட அதிகமாக
பாதிக்கப்படுவர்.
ஆனால் அதிகமாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை.
உள்ளுக்குள்ளேயே வைத்து
வெண்ணெய்யாய் உருகிக்
கொண்டிருப்பார்கள்.
இதுதான் வெள்ளி வீதியார்
சொல்லிச் செல்லும் செய்தி.



"கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் "


Comments

Popular Posts