அம்மாவுக்கு ஏது ஞாயிறு?
அம்மாவுக்கு ஏது ஞாயிறு?
அதிகாலை நேரம்
அசந்து தூங்கிக் கிடந்தேன்
மெல்ல ஓர்அழைப்பு
யாரென்றேன்
பாரென்று சொல்லி
மறைந்து போனது
உருவம்
விழிகளைத் திறந்து
விட்டத்திலிருந்து
அழைத்தவரைக்
கண்கள் தேடின
கண்ணுக்குள் அகப்படுவார்
எவருமிலர்
காட்சியில் பிடிபட
நிழலும் இல்லாத அருவத்தைத்
தேடலில் யாது பயன்
உறுதிசெய்தபின்னர்
மறுபடியும் இமைகள்
மெல்லத் தழுவின.
மறுபடியும் அதே அழைப்பு
இம்முறை கண்கள்
திறக்க மனமில்லாத நான்
இமைமூடிக் கிடந்தபடி
இல்லாத உருவத்தைத்
தேடினேன்
பொல்லாத அந்த உருவமும்
சொல்லாது மௌனம் காத்து
பொழுதைச் சுமையாக்கிப்
போதையில் தேடலை
உருவாக்கி மெப்புக் காட்டி
மெல்ல விளையாட்டுக்காட்டி
உள்ளுக்குள் வெதும்ப
வைத்தது
வேடிக்கைகள் காட்டி
வெறுப்பேற்றி நின்றது.
இம்முறை பொறுமை
கை மீற பொசுக்கென்று
எழும்பி வெடுக்கென்று
நாலுவார்த்தைக் கேட்டுவிட
நினைத்து எழும்ப
என்ன ஐயாவுக்குக்
கோபமோ என்று கேட்டது
உருவம்.
பரிச்சயமான குரல்.
என் உணர்வோடு கலந்த
குரல்
அதுவரை இருந்த
கோபமெல்லாம் தணிய
ஒன்றுமில்லை சும்மாதான்
என்று எழுப்பினேன்.
சரிசரி மழுப்பியது
வழுக்கியது
எல்லாம் போதும்
எழும்பு
பொழுது விடிந்து
மணி நேரம் ஆயிற்று
அட போம்மா...
நீயும் உன் தொணதொணப்பும்
இன்று என்ன கிழமை
தெரியுமா?
ஞாயிறு .
ஞாயிற்றுக்கிழமையிலுமா
தூங்க கூடாது?
உன்னை யார் தூங்கக்கூடாது
என்று சொன்னது?
பிறகு எதற்கு எழுப்புறீங்க?
இந்த காபியை குடித்துவிட்டு
கடையில் போய் இந்த சாமான் எல்லாம்
வாங்கி தந்துவிட்டு தூங்கு
அம்மா கையிலிந்த தாள்
என்னைக் கிண்டலடித்துப்
பார்த்தது
அதுதானே பார்த்தேன்
சோழியன் குடுமி
சும்மா ஆடாதேன்னு
அது சும்மா ஆடாது இல்லடா
சும்மாடு ஆகாது
அம்மா போதும் போதும்
காலையிலேயே தொடங்கிட்டியா
கொடு கொடு என்னென்ன
வாங்கணும் அம்மா கையில்
இருந்த பையையும் பணத்தையும்
பிடுங்கிவிட்டு ஓடினேன்.
ஓடிய ஓட்டத்தில்
வரிசையில் போய்
மூச்சிரைக்க
நின்றேன்...
ஞாயிற்றுக்கிழமை ஏன்
வந்தது ....
யார் இந்த ஞாயிற்றுக்கிழமை
லீவு என்று கூறியது
என்ற வெறுப்போடு
நின்றேன்.
நினைவில் அம்மாவின் முகம்
ஏன் எனக்குள் இந்தச்
சிடுசிடுப்பு ?
முணுமுணுப்பு?
அம்மாவுக்குத்தான்
எத்துணை பொறுமை
நாள் பூரா வேலை செய்யும்
அம்மா ஞாயிற்றுக் கிழமையிலும்
விடுமுறை எடுப்பதில்லை
ஏன்? அது ஏன்?
இந்த அம்மாவால் மட்டும்
இது எப்படி சாத்தியமாகிறது?
எனக்குள் எழுந்த கேள்வி
என்னை வரிசையில்
கவனம் செலுத்த விடாமல்
திசை திருப்பியது
தம்பி முன்னால் போங்க
என்ற குரல் திரும்ப வைத்தது
அங்கேயும் அம்மா
ஆம் அம்மா வயதில்
இன்னொரு அம்மா
அம்மாக்களுக்கு விடுமுறையே
இல்லையா?
அடுத்த வாரம் முதல்
அம்மாவுக்கு விடுமுறை
நான் வேலை செய்வேன்
இதை அம்மாவிடம் சொன்னால்
எப்படி பூரித்துப் போவார்கள்
மகிழ்ச்சியோடு வீடு
வந்து சேர்ந்ததும்
அம்மா என்று
சமையலறையில் நுழைந்தேன்
வெடுக்கென்று கையிலிருந்த
பையைப் பிடுங்கிய அம்மா
போய் தூங்கு
நான் சமையல் முடிந்ததும்
எழுப்புகிறேன் என்றார்
அம்மா...ஏதோ சொல்ல
வாய் எடுத்தேன்
அம்மா திரும்பி போய்விட்டார்
அம்மாவுக்கு ஏது ஞாயிறு?
எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.
Comments
Post a Comment