வெற்றிப் படிகள் மூன்று
வெற்றிப் படிகள் மூன்று
அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும்
என்று ஆசை.
ஆனால் எல்லாராலும் அது சாத்தியமாகிறதா
என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
அது ஏன்? ஏன்?
அதற்கான காரணம் ஆளாளுக்கு
வெவ்வேறாக இருக்கும்.
கடின உழைப்பு இருந்தால் வெற்றி
நிச்சயம் என்பதுதான் பலரது
பதிலாக இருக்கும்.
கடின உழைப்பு மட்டும் இருந்தால்
எல்லா இடங்களிலும்
வெற்றி சாத்தியமாகுமா?
கூலித் தொழிலாளியும்தான்
அல்லும் பகலும் அயராது
உழைக்கிறார். ஆனால் அவருடைய வாழ்வில்
எந்தவித முன்னேற்றத்தையும்
காணோமே என்பீர்கள்.
அப்படியானால் வாழ்வில் வெற்றிபெற
கடின உழைப்பு தேவை இல்லையா
என்ற கேள்வி நம்மை முன்னே நகரவிடாமல்
தடுத்து நிறுத்துகிறது.
இமயமலையில்
ஏறுவது மட்டும் வெற்றியல்ல.
ஒரு பாறையின் மீது ஏறி
நிற்பது கூட ஒரு சிலருக்கு வெற்றியாகத்தான்
இருக்கும்.
நம் இயல்புக்கு ஏற்ற வெற்றியைப்
பெறுதல் கூட அசாத்திய வெற்றியாகவே
கருதப்படும்.
அந்த வெற்றிக்கான
அடித்தளமிடுதல் எப்படி என்பதைப்
பார்ப்போம்.
வெற்றிக்கான மறைபொருள்
எவையெவை என்பதைத் திருவள்ளுவர்
பல குறள்களில் சொல்லித் தந்து
கொண்டே செல்கிறார்.
எல்லாக் குறள்களும் வேண்டாம்.
வெறுமனே இந்த மூன்று குறள்களும்
சொல்லித் தரும் பாடத்தை
அப்படியே கடைபிடித்தால்
போதும்.வெற்றி நிச்சயம்.
1.எண்ணம் போல் வாழ்க்கை:
நமது எண்ணம்போல்தான்
வாழ்க்கை என்று சொல்வார்கள்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ஆவாய்.
நம் நினைவுகள் எப்போதும் நம்மைச்
சுற்றி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தும்
என்பார்கள்.
அந்த அதிர்வலை நாம் நினைத்தது
நடக்கும் வரை நம்மை தூங்கவிடாமல்
துரத்தும். அது எனக்கு வேணும்....அது எனக்கு
வேணும் என்று ஓயாமல் துரத்தும்.
நம்மைத் துரத்தும் அந்த எண்ணம் எப்படி இருக்க வேண்டும்?
இதோ வள்ளுவர் சொல்லித் தருகிறார்
கேளுங்கள்.
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து"
உங்கள் எண்ணம் உயர்வானதாக
இருக்கட்டும். அது கைகூடாவிட்டாலும்
அதற்காக உங்கள் உயர்ந்த எண்ணத்தைக்
கைவிட்டுவிடாதீர்கள்.
இது நமக்கு சாத்தியமா?
என்னால் இது கூடுமா? என்ற ஐயம் வேண்டாம்.
நேர்மறையான உயர்வான
எண்ணத்தோடு முதற்படியைக்
கட்டியெழுப்புங்கள்
உயர்ந்த ஆழமான சிந்தையோடு
முதற்படிக்கான அஸ்திவாரம் உறுதியாக
போட்டால் தடுமாற்றம் இருக்காது.
எண்ணத்தை வடிவமைத்து
முதற்படியில் ஏறிவிட்டோம்.
அடுத்தப்படியாக இரண்டாவது படியில்
ஏன் வேண்டும்.
அது என்னால் கூடுமா?
என்று மலைத்து நிற்க வேண்டாம்.
2. நம்மால் இயலக்கூடிய செயல்.:
நம்மால் இயலக்கூடிய செயலில்
இறங்குங்கள்.
உயர்வான எண்ணம் என்று சொல்லிவிட்டு இப்போது இயலக்கூடியது
என்கிறீர்களே என்பீர்கள்.
நமது அறிவிற்கு பொருளாதாரத்திற்கு
சூழ்நிலைக்கு இயலக்கூடிய செயலைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
"ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்."
தம்மால் செய்ய இயலக்கூடிய
செயலையும் அதைப்பற்றிய முழு
ஆற்றலையும் வளர்த்துக்கொண்டு
முயற்சி மேற்கொண்டால் முடியாதது
என்று எதுவும் இல்லை.
தனக்கு ஏற்ற செயல் எது என்பதைத்
தீர்மானித்து அதனை விடாது துரத்தி
அதன் பின்னே ஓயா உழைப்பைக்
கொடுத்துக் கொண்டிருப்பவர் அகராதியில்
முடியாதது என்று ஒன்றும் இருக்க முடியாது.
அதாவது விடாமுயற்சி இருக்க வேண்டும்
இலக்கை நிர்ணயித்து விட்டோம். நமது
இலக்கு எங்கேயோ எட்டாத உயரத்தில்
இருக்கிறது. அதனை எட்டி எட்டிப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதால்
வெற்றி கிட்டிவிடுமா?
அதன்கண் தங்கி வேலையை நடத்திக்
கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து நமது உழைப்பைக் கொடுத்துக்
கொண்டிருக்க வேண்டும்.
நிலவைத் கட்டி இழுக்க ஆசைப்படலாம்.
அது கற்பனை .இயலாதது.
இயலாத ஒன்று வேண்டும் என்று
அதன் பின்னால் ஓடுவது
முட்டாள்தனம்.
நம்மால் இயலக்கூடிய வகையில்
நமது செயல் இருக்க வேண்டும்.
3. எண்ணியதில் உறுதி:
"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் "
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாக
இருந்தால் அவர்கள் எண்ணியது
நிச்சயம் கிடைக்கும்.
எண்ணிய காரியம் கைகூடும் என்று
உறுதியாக இருக்க வேண்டும்.
எண்ணி விட்டோம் இனி என்ன அதுபாட்டுக்கு அது நடக்கும் என்றால்
நடக்காது. எண்ணியதைப் பெற்றே தீருவேன் என்ற உறுதி இருக்க வேண்டும். ஈடேறும்வரை நாளும் உழைப்பைக்
கொடுத்துக் கொண்டே இருந்தால்
இன்றல்லது நாளை.
நாளை அல்லது நாளை மறுநாள்.
கண்டிப்பாக வெற்றி வந்து சேரும்.
எண்ணம் உயர்வானதாக இருக்கட்டும்.
இயலக்கூடியதாக இருக்கட்டும்.
கிடைக்கும்வரை உறுதியாய் செயல்
நடைபெறட்டும்.
இந்த மூன்றையும் மனதில் எழுதி
வைத்து செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment