நல்லை அல்லை

நல்லை அல்லை 


நிலவைப் பார்த்துப் பாடாத

புலவர்கள் இல்லை.

நிலவின்மீது காதல் கொள்ளாத

கண்கள் இல்லை.


காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது

நிலவென்னும் அழகு தேவதை தான்.

அதனை மூடி மறைத்து ,

வெட்கப்பட வைத்து,

எட்டிப் பார்க்க வைத்து ,

ஓடி ஒளிய வைத்து 

முந்நூற்று அறுபது 

பாகையிலும் நின்று

பார்த்துப் பார்த்து

கவிதை எழுதியதை

வாசித்து மகிழ்ந்திருக்கிறோம்.


.நிலவு சுடுகிறது என்பார்கள்.

மகிழ்ந்திருக்கிறோம்.


நிலவு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது

என்பார்கள்.

நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம்.


ஆனால் நிலவைப் பார்த்து நீ நல்லவளே 

இல்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறீர்களா?


யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்?

சொல்லியிருக்காளே....

இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்று சொல்லியிருக்கிறாளே

ஒருவேளை பொறாமையாக இருக்குமோ?

பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ?

ஏன் அப்படிச் சொன்னாள்?

எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள்

இல்லாதவள் ஆகிவிட்டாள்.

அப்படி என்ன குற்றம் கண்டுவிட்டாள்

அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள்.

அவள் குற்றஞ்சாட்டிய பாடல் இதோ உங்களுக்காக...

"கருங்கால் வேங்கை வீயுகு துருகல்

இரும்புலிக் குருளையிற் தோன்றுங் காட்டிடை

எல்லி வருநர் குளவிற்கு

நல்லை யல்லை நெடுவெண் ணிலவே "


                       -குறுந்தொகை


கருங்கால் - கருப்புநிற கால்கள் அதாவது 

                         வேர்கள்

வேங்கை- புலி, வேங்கை மரம்

வீயுகு - முதிர்ந்த மலர்கள் வீழ்ந்து கிடக்க

துருகல்- பெரிய கல் ,பாறை

இரும்புலிக்-கொடிய புலி

தோன்றுங்- தோற்றமளிக்கும்

எல்லி- இரவு

களவிற்கு- களவொழுக்கத்திற்கு

வருநர் - வருகின்ற என்னவர்

நல்லை யல்லை -நல்லது அல்ல

            அதாவது நல்லவள் அல்லள்

நெடு - நீண்ட

வெண்நிலவே -வெண்மையான நிலவே

விளக்கம்:

காட்டு  வழியாக ஒரு காதலன்

தன் காதலியைச் சந்திக்க வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றான்.

நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது.

காதலன் வந்தபாடில்லை.

காதலியின் மனதில் கலக்கம்.

ஏனிந்த சுணக்கம்?

வரும் வழியில் ஏதாவது ஆகிவிட்டதோ 

அஞ்சுகிறாள் காதலி.

நிற்க முடியவில்லை இருக்க முடியவில்லை.

தவியாய்த் தவிக்கிறாள்.

ஏதேதோ கற்பனை கட்டுக்கட்டாக வந்து கட்டையைப்

போட்டு நிற்கிறது.

தவறான எண்ணங்கள் சூழ வந்து தடுமாற

வைக்கிறது.தப்புத் தப்பாக

நினைக்க வைக்கிறது.

அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள்.

அங்கே நிலவு.

எல்லாம் நீ செய்த வேலைதானா?


 பால்நிலவு ஒன்று

தன்  ஒளிச் சிந்த 

வானத்தில் பவனி வரும் காட்சி

அப்பட்டமாக அத்தனையும் கண்முன் விரிகிறது.

நிலவொளியில் காட்சிகள் துல்லியமாகத்

தெரிகின்றன.

கூடுதல் அழகூட்டி நிற்கின்றன

என்றல்லவா அவள் நினைத்திருக்க

வேண்டும்.

கும்மிருட்டாய் இருந்தால் அவள்

அச்சப்படலாம்.

நல்ல நிலவொளி.

எந்தவித அச்சமும் இல்லை என்றல்லவா

அவள் நினைத்திருக்க வேண்டும்.

நீ நல்லவள். ஏன் காதலன் இருளில்

இடப்பட்டு விடக் கூடாது என்று ஒளி சிந்தும்

உனக்கு நன்றி என்றல்லவா இவள்

சொல்லியிருக்க வேண்டும்.


மாறாக நீ நல்லை அல்லை என்கிறாள்.

என்ன காரணமாக இருக்கும்?


வேறு ஒன்றுமில்லையாம்.

அவன் வரும் வழியில் கரிய வேர்களை உடைய வேங்கை மரங்கள் நிற்கின்றன.

அவற்றின் அடியில் சிறிய

குன்றுகள் உண்டு. அவற்றின் மீது

 முதிர்ந்த மஞ்சள் நிற பூக்கள்

விழுந்து குவிந்து கிடக்கின்றன.

அது அவள் கண்முன் வந்து அச்சமூட்டுகிறது.

அது பார்ப்பதற்குக் கொடிய புலி போல

தோற்றமளிக்கிறதாம்.

இந்தக் காட்சி அவருக்கு அச்சமூட்டக்கூடும்.

இந்த காட்சி எல்லாம் எதனால்

அரங்கேறிக் கொண்டிருக்கிறது?

நிலவொளியால் அல்லவா

 இக்காட்சி கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் நிலவே  நீ நல்லவள் அல்லள்

என்கிறாள்.


வரும்வழி பாதுகாப்பில்லாதது.

புலிகள் நடமாட்டம் இருக்கும்.

இந்தக் களவொழுக்கம் வேண்டாம்.

அதனால் விரைந்து திருமணம் செய்துகொள் என்று சொல்ல வேண்டும்.

அதற்கு நீ நல்லை அல்லை என்று யார் மீது

குற்றம் சுமத்துகிறாள் பாருங்கள் .


காலம் தாழ்த்தி வருவதால் அப்படி ஆகிவிடுமோ இப்படி ஆகிவிடுமோ என்ற பரிதவிப்பு.கவலை. புலம்பல்.

அதைக் குன்றின் மீது மஞ்சள்  மலர்கள்

தூவி காட்சிப்படுத்தியவிதம்.

மஞ்சள் மலர்பொதி வேங்கை எப்படியிருக்கும் என்ற தேடல்

யாரப்பா இந்தப் புலவர் என்று தேட வைக்கிறது.

பெயர் அறியப்படாத புலவர்.

அதனாலென்ன ?

நாங்களே பெயர் தந்து விடுகிறோம் என்று  நெடுவெண்ணிலவினார்

என்று அழைத்தனராம்.


நெடுவெண்ணிலவே நீ நல்லை அல்லை என்றவருக்கு அந்நெடுவெண்நிலவே பெயராயிற்று.

நல்லை யல்லை அருமையான வரி.

மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டும்

சொற்கள்.

நிலவே நீ நல்லை யல்லை

காதலிக்கு நீ இப்போது நல்லை அல்லை.








Comments

Popular Posts