நினைவில் நிற்கும் ஆண்டு

நினைவில் நிற்கும் ஆண்டாகட்டும்

 காலம்

நல்லதொரு ஆசிரியர்.

கற்க மறுத்தாலும் வலிந்து

இந்தாப் பிடி என்று வலிந்து வந்து ஏதேதோ செய்திகளைச் சொல்லிச் செல்லும்.

ஏன் திணித்துச் செல்லும் என்றுதான்

சொல்ல வேண்டும்.


படி படி என்று ஊட்ட முன் வந்து

கையை நீட்டி நிற்கும்.

படிப்பதும் புறங்கையால் புறந் தள்ளிவிட்டு

நான் பாட்டுக்குப் போவேன் என்பதும்

அவரவர் விருப்பு வெறுப்பைச்

சார்ந்தது.

ஆனாலும் நாள்தோறும் ஏதோ ஒரு

பாடத்தைப் புகட்டிச் செல்வது

காலத்தின் கடமையாக இருந்திருக்கிறது

என்றுதான் சொல்ல வேண்டும்.


பாடங்கள் பலவிதம்.

சுவையானதும் கடினமானது ம்

என்று எல்லா வற்றையும் விரவி

நம் முன் நீட்டி நிற்கும்.

எல்லாப் பாடங்களிலும் எல்லோராலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது.

புரிந்து கொள்ள முடியாத

முன்னுக்குப்பின் முரணான

கடினமான நடையுடன் கூடிய பாடங்கள் இருக்கலாம்.எளிதாக புரிந்து கொள்ள க்கூடிய பாடங்கள் இருக்கலாம்.


புரிந்து கொண்டவன் புத்திசாலி.


புரிந்தாலும் புரியாதவர்கள்போல 

கடந்து செல்பவர்கள்தான் பலர்.

யாருக்கோ வந்தது நமக்கென்ன என்று

கண்டும் காணாமலுமாகக்  காட்சிகளைக் கடந்து வாழ்பவர்களும் உண்டு. 


இதில் நாம் எந்த ரகம் என்று

நமக்குள் சுய பரிசோதனை செய்து

பார்ப்போம்.


2023 ஆம் ஆண்டு நமக்குக் கற்றுத் தந்தது என்ன?

என்ன கற்று தந்தது ஞாபகம் இல்லையே

சற்று பொறுங்கள்

யோசித்துச் சொல்கிறேன்

என்கிறீர்களா?

தாராளமாக யோசியுங்கள்.

பிரச்சினைனையே இல்லை.

உண்மையை மட்டும் என் காதோடு

சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.


எத்தனை எத்தனைப் பாடங்களோ

யாரறிவார்...ஒன்றும் நினைவில் பதியும்படியாக இல்லை என்று

கையை விரித்து யாரையும் ஏமாற்ற வேண்டாம்.


அப்படி சொல்லிவிட்டீர்கள் என்றால்

நீங்கள் கற்க மறுக்கும் கடைநிலை மாணவர்

வரிசைக்குத் தள்ளப்படுவீர்கள்.

இல்லிக்குடமாக இருக்கிறீர்கள் என்று

பொருள்படும்.


காலம் கற்பிக்கும் பாடங்களில் நமக்கு

உகந்ததை மட்டுமே கையிலெடுத்து கற்பவர்கள்

ஓரளவுக்கு நல்ல மாணவர்கள்.

வாழ்க்கையில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.

கிளிப்பிள்ளைகள்.


மூன்றாம் நிலை இரண்டு பக்கமும் ஆராய்ந்து அப்படியொரு தவறு மறுபடி

நடக்காதபடி 

நடக்கவிடாதபடி

முறையான செயல் திட்டங்கள் வகுத்து

செயல்படுபவர்கள் .

பிறருக்கும் நம்மால் எந்தவிதமான

கேடும் நிகழ்ந்து விடாத படி 

நடந்து கொள்வார்கள்.

அன்னப்பறவை போன்று

முதல் மாணாக்கர்

வரிசையில் போய் நின்றுகொள்வர்.

எந்த வரிசையில் நம்மை நிறுத்திக் கொள்கிறோம் என்பது நாம்

படித்த விதத்தில் இருந்து புரிந்து கொள்ளப்படும்.


நல்லதையும் கேட்டதையும்

கண்முன்னே நிகழ்த்திக் காட்டி

படித்துக்கொள் மானிடா என்று

செயல்முறை விளக்கமளித்துக்

கடந்து போகிறது காலம்.


எவ்வளவோ நிகழ்வுகள்.

பத்திரிகைகள் தொலைக்காட்சிகள்

நேரடி நிகழ்வுகள் என்று கண்முன்னே வந்து

காட்சிகள் வரிசைகட்டி நிற்கின்றன.


அவற்றுள் ஏதாவது ஒன்று நம் மனதில்

தைய்க்கும்.

நெகிழ வைக்கும் .

இப்படி நாமும் செய்திருக்கலாமே என்று

நினைக்க வைத்திருக்கும்.

எப்பா...இப்படியெல்லாம் நாம்

செய்துவிடக் கூடாது என்று ஒதுங்கி

நிற்க வைத்திருக்கும்.


இவையெல்லாம் நாம் படிக்க மறுத்தாலும்

நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்

செல்லும்.

அவற்றில் அதிக கவனம் செலுத்தி

அதனை ஒரு பாடமாக எடுத்து

நல்லவற்றைப் பழக்கி

அல்லவை களைந்து

புதிய ஆண்டை எதிர் நோக்குபவர்களுக்கு

புத்தாண்டு புதுமையான புரிதலுள்ள

மகிழ்ச்சியான 

ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


சொல்வது எளிது.

செய்ய முடியுமா? செய்வதற்குக்

காலம் ,சூழல் ,பொருளாதாரம்

யாவும் ஒத்து வருமா...?இப்படிப் பல கேள்விகள் நம் முன் வந்து

பதில் கேட்டு நிற்கும்.


புத்தாண்டு வந்ததும் ஆளாளுக்கு

அறிவுரையும் புத்தாண்டு 

உறுதிமொழியையும் கையில்

தூக்கிக் கொண்டு அலைவர்.

எதை எடுத்துக்கொள்வது எதைப் புறந்தள்ளுவது குழப்பத்திலேயே

நாட்கள் கடந்து விடும்.


யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கென்று ஒரு மனம் இருக்கிறது. சிந்திக்கும் திறன் இருக்கிறது.

என் எண்ணப்படி என் வழியில்

செல்வேன் என்று முடிவெடுங்கள். அப்படி

முடிவெடுத்தால் தான் கடைசிவரை

நான் எடுத்த முடிவு. இது எனக்கானது.

எனது நலன் சார்ந்தது. இதில் எந்தக் குறைபாடும் இருக்காது என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.

அதை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உறுதி இருக்கும்


அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று

ஏதாவது ஒரு முடிவை எடுக்க

அது அரைகுறையாக அந்தரத்தில்தான்

தொங்கும். இறுதிவரை வந்து

எட்டாது.


உங்களை நம்புங்கள்.

இந்த வருட உறுதிமொழி 

உங்களுடையதாக இருக்கட்டும்.


ஆண்டொன்று போனால் அனுபவங்கள்

ஏராளம் கிடைக்கும்.

கிடைத்த அனுபவங்களை வைத்து அடுத்த ஆண்டுக்கான 

திட்டங்களை வகுத்தால்

 பெரிய சறுக்கல்கள்

ஏற்படாது மேலே ஏறிவிடலாம்.

இப்படியொரு நம்பிக்கை இருந்தால் போதும்.

பெரிதாக உறுதிமொழி எதுவும் எடுக்க வேண்டும் என்ற தேவையில்லை.

ஏதோ ஒன்று செய்ய வேண்டும்.

அதுவும் நம்மை யார் என்று அடையாளம்

காட்டுவதாக இருக்க வேண்டும்.

எல்லோரும் ஓடும் பாதையில் பயணிக்காமல் நமக்கென்று 

தனிப்பாடல் அமைத்து நடக்க முயற்சித்தால்   முத்திரை பதித்த ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

எது செய்வதற்கு முன்பாகவும்

கடந்த காலத்தை ஒருமுறை

நினைவுபடுத்திப் கொண்டால் போதும்

நிகழ்காலம் நினைவில் நிற்கும் காலமாக

நிற்கும்.

பலர் நினைவில்

நம்மை நிலை நிறுத்திக்

கொள்ள உதவும் காலமாக 

அமையும்.

இனிய நினைவுகளைக் கொண்டு வரும் ஆண்டாக பலர் வினைவில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆண்டாக

இந்த ஆண்டு அமைய

வாழ்த்துகள்.







Comments

Popular Posts