உண்ணுநீர் விக்கினான்

உண்ணுநீர் விக்கினான் 

காதலும் வீரமும் இல்லாமல்
தமிழரின் வாழ்வியலைச் 
சொல்லிவிட முடியாது.
வீரத்தை சொல்லும்போதும் காதல்
சொல்லப்படும்.
காதலைச் சொல்லும்போதும்
வீரம் சொல்லப்படும்.
இப்படி தமிழரின் வாழ்வியலில்
காதலும் வீரமும் இணைந்தே தான்
போய்க்கொண்டிருக்கும்.

காதல் வருவது ஒன்றும்
இயற்கைக்கு முரணான
ஒரு செயலல்ல.
அனைவருக்கும் காதல் வரும்.
ஒரு தரப்பினர் முளையிலேயே 
காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு
தான் உண்டு. தன் வேலை உண்டு
என்று பொருளீட்டும் சிந்தனையில்
போய்க்கொண்டே இருப்பர்.

மற்றொரு தரப்பினரோ 
காதலே வேலையாகச்  
செய்து கொண்டிருப்பர்.

எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும்
முளைவிட்ட காதல் நினைவுகள்
என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும்.
அதனைக் காலத்தாலும் 
அழித்துவிட முடியாது.
அப்படியே கால வெள்ளத்தில்
காணாமல் போயிருந்தாலும் 
அங்கங்கே படிக்கும்
சில செய்திகள், கவிதைகள் நம்மை
இளமை கால நினைவுகளில்
மூழ்கடிக்க வைக்கும்.

காதல் செய்வது அவரவர் விருப்பம்.
காதல் செய்யாதிருந்தவர்கள்
அடுத்தவர் செய்யும் காதலை
எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு. 

காதலித்தவருக்கும் காதல் செய்யாதவருக்கும்
 மகிழ்ச்சியைத் தருவதற்காக
சங்க இலக்கியத்தில் ஒரு பாடல்
இருக்கிறது.

முதல் நாள் .முதல் அனுபவம்.
காதலில் வீழ்ந்த கதை.
ஆம் ....வீழ்ந்தவர் யார்?
வீழ்த்தியவர் யார்?

காதலைச் சொல்லியவர் யார்?
காதல் எந்தச் சூழலில் 
எவ்வாறு சொல்லப்பட்டது?

அப்போது நடைபெற்ற
 நிகழ்வுகள் என்னென்ன?

அறிய ஆசையாக இருக்கிறதல்லவா?

இந்தப் பாடலை வாசியுங்கள்.
எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும்.

பாடல் உங்களுக்காக..


"சுடர் தொடீஇ! கேளாய்!
தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா
அடைச்சிய 
கோதை பரிந்து, வரிப் பந்து 
கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி,
மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா,
'இல்லீரே! 
உண்ணு நீர் வேட்டேன்'
என வந்தாற்கு ,அன்னை
'அடர்பொன் சிரகத்தால்
வாக்கிச் ,சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா '
என்றாள்; என யானும் 
தன்னை அறியாது சென்றேன்;
மற்று
என்னை வளை முன்கைப் பற்றி
நலியத், தெருமந்திட்டு
'அன்னாய்! இவன் ஒருவன்
செய்தது காண் !'என்றேனா,
அன்னை அலறிப் படர்தர,
தன்னை யான்
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா
அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ,
மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான்
 போல் நோக்கி,
நகைக் கூட்டம் செய்தான்,
அக் கள்வன் மகன்!"
    
                        - கலித்தொகை
          
தோழி ஒருத்தி தன் தலைவியிடம்
உன்னிடம் ஏதோ மாற்றம்
தெரிகிறதே என்று கேட்கிறாள்.
அதற்குப் பதிலாக தலைவி சொன்னதுதான்
இந்தப் பாடல்.

சொல்லாமலே வளர்ந்த காதல்.
ஒற்றைப் பார்வையில்
விழ வைத்தக் காதல்.
அதை கபிலர் சொன்ன விதம்
கவித்துவமான காதல்
இதோ உங்களுக்காக.

சுடர் வளை அணிந்த என் தோழியே கேள்!
ஒருநாள் நாம் தெருவில் விளையாடிக்
கொண்டிருந்தோம்.
அப்போது நாம் கட்டிய வீட்டை காலால்
சிதைத்ததோடு மட்டும் நில்லாமல் வரிந்து
கட்டிய முடியையும் பிடித்து
ஒருவன் இழுத்தான்.
நினைவிருக்கிறதா?

"நினைவில்லை....சரி இப்போது
அவன் கதை இங்கே எதற்கு?"

"கேள்....
அது மட்டுமா செய்தான் அவன்?
ஓலையால்
செய்த நம் வரிப்பந்தையும்
அல்லவா எடுத்துக்கொண்டு
ஓடினான்."

ஓ....அவனா?நினைவு வருகிறது.
அது நடந்து நெடுநாளாயிற்றே....
அப்போது அவன் சிறுபயல்.
அவன் நினைவு இப்போது எதற்கு?"

"அவன் விடலையாகிவிட்டான்."

"அவனைப் பார்த்தாயா?"

"பார்த்தேனா? வீட்டிற்கே வந்துவிட்டான்."

"வீட்டுக்கு வந்தானா?
அப்புறம் என்ன நடந்தது?"

"நானும் அம்மாவும் வீட்டுத் திண்ணையில்
இருக்கும்போது முன்பின்
தெரியாதவர் போல தாகமாக இருக்கிறது
தண்ணீர் தருவீர்களா?" என்று 
எங்கள் வீட்டின் முன் வந்து
நின்று கேட்டான்.

"தண்ணீர் அம்மா கொடுத்தார்களா?"

அம்மா கொடுக்கவில்லை....என்னை கொடுக்கப்
சொன்னார்கள்.

பொற்செம்பில் தண்ணீர் எடுத்து 
கொண்டு வந்து கொடு என்றார்கள்.
நானும் தண்ணீர் எடுத்து வந்து 
செம்பை அவனிடம் நீட்டினேன்.

அப்புறம்......

"அப்புறம்....அப்புறம் எனக்கு
வெட்கமாக இருக்கிறது?"

"நீ வெட்கப்படும் அளவுக்கு அப்படி
என்ன நடந்தது?"

"தண்ணீரை நீட்டியபோது
தண்ணீரை வாங்குவது போல்
செம்போடு சேர்த்து என்
கையைப் பிடித்தான் அந்தக்
கள்வன் மகன்"

"ம்.... அப்படிப் போகுதா கதை .
அதற்கு நீ என்ன செய்தாய்.?"

" எதிர்பாராமல் நடந்துவிட்டதால்
ஒன்றும் புரியாமல் 
அம்மா...இவனைப் பாருங்களேன்
என்று கத்திவிட்டேன்."

"கத்தினாயா?
அம்மா வந்து அவனைத்
துரத்தி அடித்திருப்பார்களே?"

"அதுதான் இல்லை....
அம்மா என் குரலைக் கேட்டதும்
அலறியடித்துக் கொண்டு
ஓடி வந்தார்கள்.
என்னம்மா என்னாயிற்று என்று
பதறியபடி கேட்டார்கள்."

"அப்புறம் நிகழ்ந்ததை
அம்மாவிடம் சொல்லிவிட்டாயா?"

"நானா....சொல்ல வாய்வந்த
வார்த்தையை வாய்க்குள்ளே
அடக்கி வைத்துவிட்டேன்.
மெதுவாக...
இவனுக்கு 
தண்ணீர் விக்குதும்மா?
என்று சொல்லி சமாளித்துவிட்டேன்" 

"என்ன தண்ணீர் விக்குது என்றாயா?
வேடிக்கையாக இருக்கிறதே?
அம்மாவும் நம்பினார்களா?"

"நம்பாமல்......
அம்மா அப்படியே நம்பி விட்டார்கள்.
அவன் முதுகைத் தடவிக் கொடுத்து
பார்த்து மெதுவாகக் குடித்திருக்கலாமே
தம்பி என்று பரிவோடு கேட்டார்கள்."

"இவ்வளவு எல்லாம் நடந்திருக்கிறதா?
சரியான ஆள்தான் போடீ....
எது எப்படியோ.....அவனை அம்மாவிடம்
காட்டிக் கொடுக்காமல்
காப்பாற்றிவிட்டாய் இல்லையா?
காரணம்?...."

"அடிப்போடி......எனக்கு வெட்கமாக இருக்கிறது."

"இன்னுமா வெட்கம்....?"

"அதன் பிறகு அவன் என்ன 
செய்தான் தெரியுமா?"

"இன்னும் கதை முடியலியா?"

"அப்புறம் அவன் கண்ணால் கொல்வான் போல்
என்னைப் பார்த்தான்.....அந்தப் பார்வையால்
 என்னைக் கொள்ளை கொண்டுவிட்டான்
அந்த பாவி மகன்." என்று சொல்லியபடி
முகத்தை மூடிக்கொண்டாள் தலைவி.


"அப்புறம் நீ உன்னை மறந்தாய்
அவன் தன்னை மறந்தான்
 என்று சொல்....."

" அடி போடீ....இப்போது
 அவன் நினைவாகவே இருக்கிறேன்"
 
இப்போது பாடலைத் திரும்ப 
ஒருமுறைப் படியுங்கள்.
தலைவியின் கூற்றுதான் இந்தப்பாடல்.


ஒரு காதல் எங்கே... எப்படி 
தொடங்கியிருக்கிறது பாருங்கள்.

தண்ணீர் குடிப்பதில் தொடங்கிய
 இந்தக் காதல்.....
கேட்கவே இனிமையாக இருக்கிறதல்லவா?

ஒரு சிறு நிகழ்வைக் கையிலெடுத்து 
அதில் காதல் கவிதை வடித்துக் கொடுத்து
அதில் நம்மை மறக்க வைத்து
மகிழ வைத்திருக்கிறார்
கபிலர்.

அழகான காதல் இல்லையா?
அரவமற்ற காதல்.
கண்களால் பேசிய காதல்....
காலத்திற்கும் நினைவில் நிற்கும்
காதல். 
கபிலர் சொல்லிய இந்தக் காதல்.




Comments

Popular Posts