செல்லரித்த ஓலை செல்லுமோ

செல்லரித்த ஓலை செல்லுமோ?


விளம்பரங்கள் இல்லா பொருட்கள்

விற்பனையாகாது என்ற ஒரு போலியான

பிம்பத்தைக் கட்டமைத்து விட்டோம்.

எதற்குத் தான் விளம்பரம் என்று இல்லாமல்

எல்லா இடங்களிலும் விளம்பரம்....

விளம்பரம்... விளம்பரம்.


விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்குக் கொடுக்கும்

தர வரிசையைப் பொறுத்து அந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு ஏறுவதும்

இறங்குவதுமாக இருக்கும்.

பொருட்களுக்கு இது சாத்தியம்.

மனிதர்களுக்கு இது சாத்தியமா

என்றால் இல்லையா ஆமாவா என்ற

குழப்பமான இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.


ஆனால் மனிதர்களுக்கும் விளம்பரம்

வந்து விட்டது.

விளம்பரம் இல்லாமல் எந்த வியாபாரமும்

நடைபெறுவதில்லை என்னும் போது

மனிதர்கள் மட்டும் விதிவிலக்கு

என்ன?


திருமணத் தகவல் மையங்கள்

பெருமளவில் பலுகி பெரிய அளவில் வியாபாரம்

நடத்திக் கொண்டிருக்கின்றன.

திருமணத் தகவல் மையங்களில்

பதிவு செய்யாவிட்டால் திருமணமே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு

விட்டோம்.


ஆனால் இந்தத் தகவல் தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாக் காலத்தில்

திருமணங்கள் எப்படி நடைபெற்றன

என்ற கேள்வி எழுகிறதல்லவா?


தரகர்கள் மூலமாக இருக்குமோ?

இல்லை தூது அனுப்பி

பேசி முடித்து இருப்பார்களோ?

இப்படி எப்படியெல்லாமோ

நினைக்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.


சொல்லி அனுப்பி அதாவது

தூது அனுப்பி பேசி முடித்து

திருமணங்கள் நடைபெற்றன

என்பதற்கு இலக்கியத்தில்

ஆதாரங்கள் உள்ளன.


 நேரடியாக தூதுவர்கள்

 விளம்பரதாரர்களாக அதாவது

தரகர்களாக

பயன்படுத்தப்பட்டனர்.


ஆனால் இப்படித் தூதுவர்களாக

செல்லும்போது ஏற்படும்

இன்னல்கள் ஏராளம்.

நேரடியாகக் கேட்டுவிட முடியாது.

பேசும் சொற்களில் கவனம் வேண்டும்.


சற்று வார்த்தைப் பிசகிப் போனால் சொற்களால் 

தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவர்.. அப்படி ஒரு

தூதுவர் சொல்லால் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டாலும் பிளக்கப்பட்டாலும்

தான் வந்த காரியத்தைச் சாதித்துவிட

வேண்டும்.

அதுதான் தூதராக வந்தவர்க்கு அழகு. திறமை.புத்திசாலித்தனம்.


இங்கே ஒரு தூதுவர் தான் தூதாகக் கொண்டுவந்த ஓலையை மற்றொரு நாட்டு மன்னனிடம்  நீட்டி நிற்கிறார்.

ஓலை நைந்து பிய்ந்து செல்லரித்துப் போன நிலையில் இருக்கிறது.


ஒரு ஓலையைக் கூட சரியாக

கொடுத்துவிடத் தெரியாத

மன்னனுக்கு பெண் கேட்க என்ன அருகதை இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது மன்னனின் பார்வை.

அப்படியே விட்டிருந்தால் பரவாயில்லை .

கேட்டும் விட்டார்.

 சொல் தாக்குதலாக வந்து விழுந்த பாடல் ஒன்று

இதோ உங்களுக்காக...

பேச வந்த தூத

செல்லரித்த ஓலை செல்லுமோ

பெருவரங்கள ருளங்கர்

பண்ணை கேள்வர் தாளிலே

பாசம் வைத்த மறவர் பெண்ணை

நேசம் வைத்து முன்னமே

பட்ட மன்னர் பட்டதெங்கள்

பதி புகுந்து பாரடா

வாசலுக்கிடும் படல் கவித்து

வந்த கவிகை மா

மகுட கோடி தினையளக்க

வைத்த கால் நாழியும்

வீசு சாமரங் குடிற்றொடுத்

தகற்றை சுற்றிலும்

வேலியிட்ட தவர்களிட்ட

வில்லும் வாளும் வேலுமே எங்கள் பெண்ணை மணம்

பேசுவதற்கு வந்த தூதுவனே!

செல்லினால் அரிக்கப்பட்ட

ஓலை கொண்டு வந்து நீட்டி

நிற்கிறாயே. அது செல்லுமோ?

எம் பெண் எப்படிப்பட்டவள் தெரியுமா?

நம்பின்னை கணவராகிய எம்பிரான்

தாள் வணங்கும் மறவர் குலத்தைச் சேர்ந்தவள்.

அவள் மீது காதல் கொண்டு

முன்னமே வந்து பெண் கேட்ட

பட்டத்து இளவரசர்கள் நிலைமை என்னானது என்று வந்து பார்.


எங்கள் வாசலை மூடி வைத்திருக்கும்

படல் என்னவென்று தெரியுமா?

அவர்கள் பிடித்து வந்த கவிகை

குடைகள்தான் எங்கள் படல்களாக இன்று

காட்சி தருகின்றன.


எங்கள் அரண்மனையில் தினை அரிசி அளக்கப் பயன்படுத்தும் மரக்காலும் நாழியும் அவர்கள் அணிந்து வந்த கிரீடங்களாகும்.


எங்கள் வீட்டு மேல் கூரை

என்ன தெரியுமா ?

அவர்கள் வீசி வந்த சாமரங்கள்.


எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாக நட்டு வைத்திருப்பது என்னவென்று வந்து பார்.

வில்லும் வாளும்.

இது யாருடைய என்பது தெரியுமா?

பெண் கேட்டு வந்த மன்னர்கள் தோல்வியடைந்து  போட்டுவிட்டு ஓடிய வில்லும் வாளும்தான் வேலியாக

நட்டு வைக்கப்பட்டுள்ளது. 

என்பது பாடலின் விளக்கம்.

எப்பேர்ப்பட்ட பட்டத்து இளவரசர்கள் எல்லாம்

 பெண் கேட்டு வந்தார்கள்.

அவர்களுக்கே பெண் கொடுக்கவில்லை.

நீ வெறுமனே ஒரு செல்லரித்த ஓலையைக்

கொண்டு வந்து

 நீட்டிக்கொண்டு நிற்கிறாய்.

உங்கள்  மன்னனுக்கு பெண் கொடுப்போமா என்று ஏளனமாக கேட்பது போல் அமைந்தப் பாடல்.


ஏளனமாகப் பாடப்பட்டப் பாடல் ஆயினும்

இலக்கிய சுவைக்குக் குறைவில்லை.

பொருள் நயத்திற்கும் பஞ்சமில்லை.

சொல்லிலும் கஞ்சமில்லை.

பேச்சிலும் வஞ்சமில்லை.

நெஞ்சுக்கு எதிராக 

நேரடியான தாக்கு.


பெண் கேட்டு போன இடங்களில் அவமானப் பட்டவர்களுக்குச்  சற்று ஆறுதலைத் தரும் பாடல்.

ஆனானப்பட்ட இளவரசனுக்கே

பெண் கொடுக்க மறுத்து விரட்டியடிக்காத

குறையாக விரட்டியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கேட்கும்போது ஒப்பீட்டளவில் நாம் பட்ட அவமானங்கள் சற்று குறைவுதான் என்ற ஒரு சின்ன ஆறுதல்.

வேறு ஒன்றுமில்லை... இருப்பினும் அவமானத்தில் சின்ன அவமானமென்ன பெரிய அவமானமென்ன?

அவமானம் அவமானம் தான்.


செல்லரித்த ஓலை செல்லுமோ?

நெஞ்சையரித்துச் சென்ற பாடல்.
Comments

Popular Posts