கற்பெனப்படுவது......

கற்பெனப்படுவது....


கற்பெனப்படுவது ஓர் ஒழுக்கம்.

கட்டுப்பாடு.

ஒரு விழுமியம் எப்படி வேண்டுமானாலும்

எடுத்துக்கொள்ளலாம்.


இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும்

ஒரு விழுமியமாகக் கடைபிடிக்கப்படும்போதுதான்

வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை சிறப்பான

வாழ்க்கையாக கருதப்பட மாட்டாது.


அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும்

இருபாலாருக்கும் உரியதாக இருக்க

வேண்டும்.


ஆனால் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு

மட்டுமே உரியது என்பது போன்ற ஒரு பிம்பம்

கட்டமைக்கப்படுகிறது.

அதனால்தான் கண்ணகியை

கற்புக்கரசியாகக் கொண்டாடும்

இந்தச் சமூகம் ஆண்களில் ஒருவரை 

இவர்தான் கற்புக்கரசன் என்று

முன்னிருத்தவில்லை.

அதற்கான அவசியம் இல்லை

என்று நினைத்திருக்கலாம்.

அது பெண்களுக்கு மட்டுமே உரியது

என்று நின்று நினைத்துக் கண்டும்

காணாதது போல கடந்து சென்றிருக்கலாம்.


"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனுந்

திண்மை உண்டாகப் பெறின்"

என்கிறது குறள்.


கற்பு எனப்படும் பெருமைக்குரிய உறுதிப்பாடு

மட்டும்  இருக்குமானால் அதைவிட 

சிறந்த பண்பு ஒரு பெண்ணுக்கு வேறு எதுவும்

இருக்க முடியாது என்பது வள்ளுவர் கருத்து.


கற்பெனப்படுவது பெண்களுக்கே உரிய சிறந்த

பண்புகளுள் ஒன்று என்று வள்ளுவரே

சொல்லிவிட்டார்.


பிறகு என்ன?

வள்ளுவர் வாக்கிற்கு மறு வாக்கு

ஏதும் உண்டா என்று ஒரு முடிவுக்கே வந்துவிடுவோம்.

இது ஒருபுறம் இருக்க இப்போது கற்பு பற்றி ஔவை என்ன

சொல்கிறார் என்று பார்ப்போம்.


"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை"

என்கிறது கொன்றை வேந்தன்.

அதாவது கற்பெனப்படுவது சொன்ன சொல்

தவறாது புரட்டிப் புரட்டிப் பேசாது

ஒரு உறுதிப்பாடோடு நடந்து கொள்ளுதல் என்பது

ஔவையின் கருத்து.

மொத்தத்தில் சொன்னசொல் தவறாது
வாழ்தல்.

சொன்ன சொல் தவறாது வாழ்தல் பெண்ணுக்கு

மட்டுமே உரியதாகுமா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒரு

நற்பண்பு தான் சொற்திறம்பாமை

என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இங்கே கற்பு எனப்படுவது ஆண்பெண் 

 இருவருக்கும் பொதுவானது.

இருவருமே தாங்கள் எடுத்துக்கொண்ட

உறுதிமொழியில் பிறழாதிருத்தலே

கற்பு என்று சொல்கிறார் ஔவை.

அத்தோடு ஔவை நிறுத்திக்கொள்ளவில்லை.

அடுத்தவரியிலேயே 

"காவல்தானே பாவையர்க்கு அழகு"

என்றும் சொல்லி வைத்திருக்கிறார்.


தன்னை எல்லாக்காவலோடும் 

காத்துக்கொள்ளுதல் 

ஒரு பெண்ணுக்கு அழகு என்கிறார்.


அப்படியானால் முதலாவது சொல்லப்பட்ட

சொல்திறம்பாமை என்னும் பண்பு இருவருக்கும் 

பொதுவானது என்ற அவரின் கருத்து 

உறுதியாகிவிட்டது.


கலித்தொகையும்

"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்"

என்கிறது.

இதுவும் இருபாலாருக்கும் பொதுவாக

வைக்கப்பட்ட கருத்துதான்.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர்  யாத்தனர் கரணம்"

என்கிறார் தொல்காப்பியர்.

காதல் வாழ்க்கை தவறுதலாகப் போய்விடும்

பட்சத்தில் பெரியோர்கள் திருமணம்

என்ற ஒன்றை ஏற்படுத்தினர்.

திருமணத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட

இருவரும் ஒரு கட்டுப்பாட்டோடு

சேர்ந்து இருக்க வேண்டும் .


இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு

 ஒரு ஒருநீதி

என்று இருப்பது ஞாயமில்லை.

அதனால்தான் திருமண பந்தத்தில்

இணையும்போது எடுக்கப்படும்

உறுதிமொழி பிறழாது நடந்து

கொள்ளுதல் ஆண் பெண் இருவருக்குமான

சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது.


இதையேதான் பாரதியும் ,


"கற்பு நிலையென்று வந்தால்

இருகட்சிக்கும் 

அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திக் பெண்ணைக் கட்டிக்

கொடுக்கும்

வழக்கத்தைக் தள்ளி மிதித்திடுவோம்"

என்றார்.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்"

என்ற பாரதி,


"ஆணெல்லாங் கற்பைவிட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ

நாணமற்ற வார்த்தையன்றோ?

வீட்டைச் சுட்டால்

நலமான கூரையுந்தா னெரிந்திடாதோ?"

என்று ஆவேசமாகக் கேள்வி கேட்கிறார் பாரதி.

பாரதியின் இந்தக் கருத்துக்கள் யாவும்

கற்பு ஆண்பெண் இருபாலாருக்கும் உரியதாக

இருக்க வேண்டும் என்பதில் பாரதி

உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை

வலியுறுத்துகிறது.


இப்போது ஔவையின் கருத்துக்கு வருவோம்.


"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை"

இருவரும் ஒருமித்த கருத்தோடு

இணைந்து வாழ்ந்தால்தான்

அது சிறப்பான வாழ்வாகக் கருதப்படும்.

அந்த வாழ்வில் சொற்றிறம்பாமை என்னும்

விழுமியம் இருவராலும் 

பேணப்பட வேண்டும்.

அதுதான் கற்புநெறி தவறாத வாழ்வாக

இருக்கும்.


கற்பு என்பது சொற்றிறம்பாமை.

அது ஆணுக்கும் பெண்ணுக்கும்

பொதுவானது என்பதை மனதில்

வைப்போம்.

ஒத்தக் கருத்தில் உயர்ந்து நிற்போம்.

.

இப்படி ஆளாளாளுக்கு 

ஆண் பெண் கற்பைப் பற்றி பேசியிருக்கின்றனர்

என்று சொல்லிச் சொல்லி 

Comments

Popular Posts