அம்மிக்கல்லும் அறுசுவையும்

அம்மிக்கல்லும்  அறுசுவையும் 


கோபம் வந்தால் சிலருக்கு 

என்ன பேசுவது என்றே தெரியாது.

உன்னை எல்லாம் அம்மிக் கல்லில்

வைத்து அரைக்க விட்டால்தான் நீயெல்லாம்

அடங்குவாய் என்று சொல்லக்

கேள்விப்பட்டிருக்கிறேன்.

அம்மிக்கல்லே இல்லை. இதில் எங்கே

அம்மிக்கல்லில்  அரைக்க விடுவது?

வழக்கொழிந்துபோன ஒரு பொருள் இன்றும்

நம் பேச்சைவிட்டு வழக்கொழிந்து போகாமல்

தொடர்ந்து நம்மோடு 

பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

 அப்படியானால் அந்த அம்மிக்கல் 

 எங்கோ நம் ஆழ்மனதில் பதிந்துபோன 

 ஒரு சொல்லாகத்தான் 

 இருந்து கொண்டிருக்கிறது.

 அம்மிக்கல்லில் அரைக்க விடுவேன்

 என்பது தவறான சொல்லா....?

 அப்படியானால் நமக்குத் தண்டனை 

 தருவதற்காகத்தான் நம்மை அம்மிக் கல்லில்

 அரைக்க வைத்தார்களா...?

 இப்படி என்னென்னவோ எண்ணங்கள் நம்

 சிந்தையில் எழலாம்.

 

 எது எப்படியோ அம்மிக்கல்லில் அரைத்தல்

 என்பது ஒரு கலை.

 அது அம்மியில் அரைத்தவர்களுக்குத்தான்

 தெரியும்.

 எத்தனையோ சுவைகளையும் சுகங்களையும்

 தொலைத்துக் கொண்டு இன்றைய

 ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.


அம்மியில் வைத்து அரைத்து 

சுவைத்த துவையல்...

நினைக்கும்போதே நாக்கில் 

எச்சில் ஊறுகிறதில்லையா!

துவையலை வழித்து,

 அதை உருண்டை பிடித்து

அம்மியிலேயே வைத்து ஒரு 

கிண்ணத்தை வைத்து

மூடி வைத்து விடுவார்கள். 

எத்தனை முறை காணாமல் எடுத்து நக்கி ..

..நக்கி தின்றிருப்போம்.

அந்தக் கொஞ்சம்போல தின்ற

துவையலுக்கு இருந்த சுவையே

அலாதிதான்.

அதற்காக அடிவாங்கிய 

அனுபவம் எத்தனை பேருக்கு

கிடைத்திருக்கும்.


அது என்னங்க அடி...அந்தச் சுவைக்காக

எத்தனை தடவை வேண்டுமானாலும்

அடி வாங்கலாம். 

ஆனால் துவையலைக் காணாமல் எடுத்துத்

தின்னாமல் மட்டும் இருக்க முடியாது.

உள்ளங்கையில் வைத்து நக்கி ...நக்கி

தின்ற காலம் துவையலின் பொற்காலம்.


அந்தத் துவையலின் சுவைக்கு 

உலகின் எந்த ஓட்டல்

துவையலின் சுவையும் ஈடாகுமா?

காய்ச்சல் வந்தால் நாக்கில் சுவை தெரியாது.

அப்போது கொத்தமல்லியைப் பதமாக

வறுத்து ஒரு துவையல் பண்ணி கஞ்சிக்கு

தருவாங்க பாருங்க...

காய்ச்சலும் போயே போயிருக்குமே!


கோபம் வந்தால் போனை உடைப்பதும்

கையில் இருக்கும் ரிமோட்டைத் தூக்கி வீசுவதும்

இன்று வாடிக்கையாகிப் போன ஒரு 

நிகழ்வு.


கோபம் வந்தால்...இரண்டு சில்லு தேங்காயை

அம்மியில் வைத்து அரைத்து கோபத்தைத்

தீர்த்துக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா...?

அது ஒன்றும் பெரிய விசயமே இல்லைங்க..

இரண்டு சில்லு தேங்காயை அம்மியில் வைத்து

அம்மிக் குழவியை அதன்மீது வைத்து ஓங்கி ஒரு தல்லு தல்லுனால்

போதும். நமக்கு யார்மீது கோபம் இருக்கிறதோ 

அந்த நபரை அம்மியில் வைத்து

 தல்லு தல்லுன்னு

தல்லியது போல் ஒரு திருப்தி கிடைக்கும்.


இது எப்படியிருக்கு...?

நல்லா இருக்குல்ல.

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குல்ல.


நல்லா இல்லையா...?

அட போங்கங்க

இதுதாங்க எங்களைப் போன்ற கையாலாகாத

பெண்பிள்ளைகள் கோபத்தைக் தணிக்கும்

இடமாக ஒருகாலத்தில் இருந்தது.

அப்படிக் கோபத்தில் தல்லி விட்டு

அதற்கும் நாலு அடி முதுகில் வாங்கியிருக்கிறோம்.


ஏம்மாடியோவ்...ஆபத்தான ஆளாக இருப்பீர்கள்போல

தெரியுதே...என்று நினைக்கிறீங்களா.?


.அட போங்கங்க...

நாங்கள் எல்லாம் வாயில்லா பூச்சிங்க..

வாயிருந்தும் ஊமையாக வாழ்ந்தவர்கள்.


ஏனென்றால் பெண் பிள்ளைகளாம்.

பேச்சுரிமை தரப்படாத காலத்தில்

வளர்ந்தவர்கள்.

ஒரு வகையில் பார்த்தால் அடிமைகள் என்றுதான்

சொல்ல வேண்டும்...

இன்றுவரை அந்த அடிமைத்தனம் கூடவே

நடந்து வந்து கொண்டிருக்கிறது.


எங்கள் கோபத்தை அம்மிலேயும் 

தேங்காயிலேயும்தான்

காட்ட முடியும்.வேறெங்க காட்ட முடியும்?

நீங்களே சொல்லுங்க...


அம்மியில் அரைத்து வைத்த மீன்குழம்பு.

மண்சட்டியில் சுண்ட வைத்து மறுநாள் தின்றால்....

அதன் ருசி...வாவ்...என்னா ருசி என்னா ருசி...

அதைவிட ருசி என்ன தெரியுமா...

குழம்பு தீர்ந்துபோன பின்னர் 

சட்டியில் போட்டு விரவி தின்போம் பாருங்க...

பட்டும் படாமலும்....தொட்டும் தொடாமலும்....

அடடடடா... எம்மோ... எங்கிருந்து வந்தது இந்த

ருசி ....யார் கைப்பக்குவம்....எல்லாம்

புகழும் அம்மியாருக்கே!


அம்மியோடு போச்சு அறுசுவையும்

அம்மா சமையலும்.

இப்போதெல்லால் சொல்லில்தான் இருக்கிறது

அறுசுவை. சுவையில் இல்லை.


அம்மியே நீ இருக்கும்வரை உன் அருமை

தெரியவில்லை.

உன்னைத் துறந்ததால் வந்தது முதுகுவலியும்

தோள்பட்டை வலியும்.

இப்போது உடற்பயிற்சி என்ற பெயரில் 

வெறுங்கையால் அம்மி அரைக்கிறோம்.

இனி அம்மிக்கு மாற முடியுமா....?

ஆசைக்காக

ஒருநாள்...ம்கூம் அதுவும் முடியாது...

நினைவில் மட்டுமே அம்மிக்கல்லும் குழவியும்.


என்றென்றும் அம்மியின் நினைவில்....நான்....

இல்லை...இல்லை...நீங்களும்தான்.







Comments