மும்மாரி பொழிகிறதா

மும்மாரி பொழிகிறதா 

அரசர் ஒருவர் நாட்டை நல்லமுறையில்
ஆட்சி செய்து வந்தார்.
ஒவ்வொரு நாளும்
நாடு எப்படி இருக்கிறது?
நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?
நாட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?
என்று நாட்டைப் பற்றியும் நாட்டு
மக்களைப் பற்றியும் 
கேட்டுவிட்டுத்தான் தன் 
வேலைகளைத் தொடங்குவார்.

அன்றும் அப்படித்தான். 
அரசவைக்கு வந்தார்
மன்னர்.

அரசவை கூடியது. 
"நாடு எப்படி இருக்கிறது ?
அமைச்சரிடம் என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர்,
"மன்னா!வணக்கம்.
நாடு நன்றாக இருக்கிறது .
உங்கள் ஆட்சியில் நாட்டிற்கும்
நாட்டு மக்களுக்கும் ஏது குறை
என்று சொல்லிக்கொள்கிறார்கள்?"
என்றார்.

"தாங்களாக கூறுகிறீர்களா?
நாட்டு மக்கள் கூறினார்களா?"

நாட்டு மக்கள்தான் கூறினார்கள்.

விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது?
மழை பொழிகிறதா?

"அதற்கெல்லாம் குறைச்சல் இல்லை
மன்னா...மாதம் மும்மாரி பொழிகிறது"


"மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் .
ஒரு மாறி... உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது என்ன மும்மாரி? "என்று கேட்டார் மன்னர்.

மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை
எதிர்பார்க்காத அமைச்சருக்கு
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"சும்மா ....நல்ல மழை பெய்கிறது என்பதைத்தான்
அப்படிச் சொல்லி வைத்தேன் "என்று
ஏதோ சொல்லி மழுப்பினார் அமைச்சர்.

"பொருளில்லாச் சொற்களை எல்லாம்
சொல்லி அவை நேரத்தை 
வீணடிக்க வேண்டாம்"
கடிந்து கொண்டார் மன்னர்.

தேவையில்லாமல் பேசிவிட்டோமோ என்று
தலை கவிழ்ந்து நின்றார் அமைச்சர்.

அரசவை புலவர் ...
"மன்னா!நான் இதற்குப் பதில்
சொல்லலாமா?"என்று அவையில்
பேச அனுமதி கேட்டார் புலவர்.

"ஓ... தாராளமாக....
தங்களுக்குத் தெரிந்த கருத்தைத்
தாராளமாகப் பேசலாம்"அனுமதி
அளித்தார் மன்னர்.

"அமைச்சர் ஏதும் தவறாகப் சொல்லிவிடவில்லையே!
நாட்டில் இப்போது மும்மாரி தான்
பெய்துகொண்டிருக்கிறது. வேண்டும் என்றால்
நீங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம்" என்றார்
பணிவாக.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஒரே மழைதானே பெய்து கொண்டிருக்கிறது.
அதை எப்படி நீர் மும்மாரி என்று
சொல்கிறீர்? 

"இப்போது நம் நாட்டில் மும்மாரி பொழிகிறது என்று
என்னால் உறுதியாக சொல்ல
முடியும்."

"அதெப்படி? நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"
என்றுதானே வள்ளுவர் கூறியிருக்கிறார்."
என்றார் மன்னர்.


"மாரி ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்து
இல்லை.ஆனால் அந்த மாரி எனப்படுகின்ற
மழை பெய்வற்கான காரணம் என்ன?"

"கார்மேகம் இருந்தால் மழை பெய்யும்.
காடுகள் நிறைய இருந்தால் மழை
பெய்யும்.வேறு என்ன காரணம் இருந்துவிடப்
போகிறது.?"

"அதுதான் இல்லை என்கிறேன்.
மழை பெய்வதற்கு கார்மேகமும் காடுகளும்
காரணம் அல்ல. நீங்களும் ஒரு காரணம்."

"நானா ....நானா....நான் காரணமா?
 மழை பெய்வதற்கு நான் எப்படி 
 காரணமாக இருக்க
முடியும்?"

"நீங்கள் நல்லாட்சி செய்கிறீர்கள் இல்லையா?"

"என் ஆட்சி நல்லாட்சியா இல்லையா என்பதை 
மக்கள் தானே தீர்மானிக்க வேண்டும்."

"உங்கள் ஆட்சி நல்லாட்சி என்பதற்கு
மாரி தான் சாட்சி"

"ஒன்றுமே புரியவில்லை"


"புரியும்படி கூறுகிறேன் கேளுங்கள்.

"வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே"

என்ற விவேக சிந்தாமணி பாடல் கூறுவது
தாங்கள் அறியாததா என்ன?

"அறிந்திருக்கிறேன்.... அறிந்திருக்கிறேன்."

"அறிந்துமா மும்மாரி பெய்யும் என்பதில்
நம்பிக்கை இல்லை.

அதாவது வேதங்களை ஓதும் கற்றறிந்த
வேதியர்க்கு ஒரு மழை பெய்கிறது.

 நீதி நெறிபிறழாத நல்லாட்சி
செய்யும் மன்னனுக்கு இன்னொரு மழை.

 பெண்கள் கற்புடையவர்களாக 
 வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்கொரு மழை.

ஆக இந்த மூன்றும் நல்லமுறையில்
நடந்து கொண்டிருப்பதால் நாட்டில்
மும்மாரி பெய்கிறது" என்பதைத்தான்
 அமைச்சர் 
 மும்மாரி பெய்கிறது என்று கூறினார் என்றார் புலவர்.

"இதையா கூறினீர்கள்?" என்பதுபோல 
அமைச்சரைப் பார்த்தார் மன்னர்.

"ஆம் மன்னா....ஆமாம் மன்னா...."
என்று சொன்னபடியே தக்க
நேரத்தில் என்னைக் காப்பாற்றினீர்களே
என்று நன்றியோடு
புலவரைப் பார்த்தார் அமைச்சர்.

மும்மாரி பெய்யும் அளவுக்கு
நல்லாட்சி புரிவதை எண்ணி மகிழ்ந்த
மன்னர் தன் கழுத்தில் கிடந்த
மணிமாலையைக் கழற்றி
அமைச்சர் கழுத்தில் அணிந்து புன்னகைத்தார்.

மன்னர் மும்மாரி பொழிய காரணமாகிவிட்டார்.
மும்மாரி பற்றி அறிந்தும் கொண்டார்.

மன்னர் மட்டுமா அறிந்து கொண்டார்.

இப்போது மும்மாரி என்ற சொல் 
எதனால் பயன்படுத்தப்படுகிறது?
மும்மாரி பொழிய
காரணம் என்ன? என்பதை
நாமும்
அறிந்து கொண்டுவிட்டோமல்லவா?


மாதம் மும்மாரி பொழியட்டும்.
மக்கள் மகிழ்ச்சியாய் வாழட்டும்.



























ஒரு

Comments

Popular Posts