அம்மாவின் மடியில்.....
"தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை"
எவ்வளவு அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதியப் பாட்டு.
ஆம்.துயரத்துக்கு ஒரே மருந்து அம்மா.
அம்மாவின் மடிதான் குழந்தைக்குச் சொர்க்கம்.
அம்மா வருடிக் கொடுத்த அந்த நாட்கள் கவலையில்லா பேரின்ப நாட்கள்.எத்தனை வயதானாலும்..எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அம்மாவின் அன்பிற்காக...அம்மாவின் அரவணைப்புக்காக அனைவர் உள்ளமும் ஏங்கும்.இது உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
அம்மா என்றால் அன்பு :
" தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
அம்மாவுக்கு முன்னால் எதுவும் ஈடில்லை.
தாயின் அரவணைப்பில்தான் உண்மையான பாதுகாப்பு கிடைக்கிறது.
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதனால்தான் வீல் வீல் என்று கத்திக்கொண்டிருக்கும் குழந்தை அம்மா தொட்டுத் தூக்கி தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்ததும் அப்படியே அடங்கிப் போய்விடுகிறது.
என் அம்மா வந்தாயிற்று இனி எனக்கு என்ன? என்பது போன்ற பாதுகாப்பு உணர்வு.
அந்த அன்பிற்கு முன்னால் அப்படியே அடங்கிப் போய் விடுகிறது.
அம்மா என்றால் பாதுகாப்பு :
முதல் அரவணைப்பு ஒரு குழந்தைக்கு அம்மாவிடமிருந்துதான் கிடைக்கிறது.
அந்த அரவணைப்புதான் இன்றுவரை நம்மை அம்மாவோடு கட்டி போட்டிருக்கிறது.
இன்றும்கூட எப்போதெல்லாம் பாதுகாப்பு இல்லாதது போன்று உணர்கிறோமோ அப்போதெல்லாம் மனம் அம்மாவைத் தேடும்.
என் அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் எனக்கு இதெல்லாம் நடந்திருக்காது என்ற எண்ணம் எழும்.
என் அம்மா என்னைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனம் ஏங்கும்.
அம்மா என்றால் தெம்பு :
சிறுபிள்ளையாய் இருக்கும்போது அண்ணனை அடித்துவிட்டு அம்மாவின் முந்தானைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்வோம்.
மெதுவாக அண்ணனை எட்டிப் பார்த்து இப்போ என்ன செய்யுவ...இப்போ என்ன செய்யுவ...என்று நக்கலாக சிரித்திருப்போம்.
அம்மா தன்னை எப்படியாவது அடிபட விடாமல் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த நக்கல் ...நையாண்டி ... எல்லாம் நடக்கும்.
வெளியில் குறும்பு செய்துவிட்டு ஓடிவந்து அம்மாவின் மடியில் பாதுகாப்பு தேடிக் கொள்வோம்.
எல்லாம் அம்மா கொடுத்த தெம்புதான்.
அம்மா என்றாலே நிம்மதி.:
கண்டாங்கியில் கட்டிய தூலிகையில் துயில் கொள்ளும்போது கிடைத்த நிம்மதி வேறெங்கும் கிடைப்பதில்லை.
தூலிகைக்கு இணையான மாளிகை இதுவரை எங்கும் கட்டப்பட்டதாக சரித்திரம் இல்லை.
நிம்மதியாக நம்மை தூங்க வைத்து அழகு பார்த்த மாளிகை அதுவல்லவா !
அம்மாவின் அரவணைப்பு தரும் நிம்மதியை ஆலயம் தோறும் சென்றாலும் அடைய முடியாது.
ஆறு ,குளம் தேடிச் செல்ல வேண்டாம். சொர்க்கம் உன் அம்மாவின்
காலடியில்தான் இருக்கிறது.
இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கிறதைத் தேடி அலைவானேன்.
அம்மா என்றால் மொழி :
மொழியை எத்தனையோ பேரிடம் கற்றிருப்போம்.
ஆனால் அம்மா சொல்லு ...அம்மா சொல்லு...என்று முதன்முதலாக நம்மை அம்மா ...அம்மா என்று நம் தாய்மொழியில் பேச வைத்து அழகு பார்த்தவர் அம்மா.
தாய் கற்றுத் தந்ததுதான் தாய்மொழி.
நம் உணர்வோடு உயிரோடு உதிரத்தோடு கலந்த மொழி .
அம்மா சொல்லு...அப்பா சொல்லு...ஆயா சொல்லு என்று ஆயிரம்முறை நம் அம்மா வாயிலிருந்து கேட்டமொழி.
மொழிப்பாடம் கற்றுத் தந்த முதல் பேராசிரியை அம்மா.
அம்மா என்றால் மதிப்பு :
உலகிலேயே மதிப்பு மிக்க பொருள் எது என்றால் அது அம்மா மட்டும்தான்.
உலகில் முதன்மையானது எது என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டதாம்.
அவர் தாய் என்றார்.
அப்படியானால் இரண்டாவதாகக் கருதப்படுவது எது என்று கேட்கப்பட்டது.
அதற்கும் தாய் என்றார் நபிகள் நாயகம்.
கேள்வி கேட்டவர் மறுபடியும் விடாமல் மூன்றாவதாக என்று கேட்டார்.
இப்போதும் நபிகள் நாயகம் தாய் என்றே கூறினார்.
முதலாவது ....இரண்டாவது ...மூன்றாவது...என்று தரம் பிரித்துப் பார்க்கத் தக்கவர் அல்லர் அம்மா.
என்றென்றென்றும் ஒரே தரம். முதல் தரம். உயர்தரம் .ஒப்புவமையற்ற தரம் . அவர்தான் அம்மா.
அம்மா என்றால் உயிர் :
உயிரைத் தந்தவள் அம்மா.
நம்மை உயர வைத்து அழகு பார்த்தவர் அம்மா.
எளிதாக கிடைக்கும் எந்த பொருளும் பெரிதாக மதிக்கப்படுவதில்லை.
அதனால்தானோ என்னவோ அன்னையின் அன்பையும் பலர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
கையை விட்டு போனபின்னே அம்மாடியோவ்..ஆத்தாடியோவ்..என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறோம்.
வயது முதிர்ந்தபோது சும்மா கெட என்று கிடப்பிலேயே போடப்பட்டவர் அம்மா.
சும்மா கிடப்பில் போடப்பட வேண்டிய பொருளல்ல அம்மா.
எம்மோ... எம்மோ ...என்று ஏந்தி முகம் பார்த்து தாங்கப்பட வேண்டியவர் அம்மா.
நாள்தோறும் அன்னையர் தினம் :
வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல அம்மா.
நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் அம்மா.
இது நம் உயிருக்கான கொண்டாட்டம்.
இது நம் பிறப்புக்கான கொண்டாட்டம்.
அம்மாவுக்கான கொண்டாட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை வாழ்த்துச் சொல்லும் அன்னையர் தினம் என்ற ஒற்றை சொல்லுக்குள் முடக்கிப் போடாதீர்கள்.
நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் அம்மா.
நாளும் கொண்டாடுவோம்.
நம்மோடு வைத்துக் காப்போம்.
👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
அம்மா அம்மாதான்.
ReplyDeleteமிக அருமையான பகிர்வு.
நன்றி.