தன்மானம்
தன்மானம்
ஆதித்தன் ஆட்சி செய்ய வந்து இரண்டுமணி நேரம் ஆகியும் வீட்டில் எந்த அரவமும் இல்லை.
மூலையில் முடங்கி கிடந்த மான்சி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கண்ணைத் திறந்து அம்மாவைப் பார்த்தாள்.
அம்மா இப்போதைக்கு எழும்புவதாகத் தெரியவில்லை.
மெதுவாக 'அம்மா 'என்று கூப்பிட்டுப் பார்த்தாள்.
அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அக்காவின் சத்தத்தைக் கேட்டதும் அம்மாவின் அருகில் படுத்திருந்த தம்பி மெதுவாக திரும்பி அம்மாவைப் பார்த்தான்.
"அம்மா...அம்மா.".மெதுவாக உலுக்கினான்.
' படு....'மெதுவாக தட்டிக் கொடுத்தார் அம்மா.
"அம்மா..விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிட்டு"
"பேசாம தூங்கு...அப்பா தூங்குறாங்கல்ல..."
" தூக்கம் வரல்லம்மா"
அதற்குள் தம்பி எழுந்து உட்கார்ந்தான்.
" தூங்கு....அப்பா விழிக்கட்டும்.."
" தூக்கமே வரல்லம்மா...எவ்வளவு நேரம்தான் தூங்கிட்டே இருப்பது
காப்பி தாங்கம்மா"
" அப்பா விழிக்கட்டும் என்று சொல்றேன்ல்ல."
" அப்பாவை எழுப்பட்டுமா"
" வேண்டாம்...அப்பா அசதியா தூங்குறாரு"
சின்ன தம்பி அம்மா பேச்சை நம்பாமல் அப்பா முதுகில் ஏறி அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.
அப்பா கண்கள் மூடிக் கிடந்தார்.
மெதுவாக கண் இமைகளைப் பிடித்து இழுத்தான்.
அப்பா விழித்துக் கொண்டார்.
" ஐய்....அப்பா விழிச்சாச்சி...அப்பா விழிச்சாச்சி."..கைகளைத் தட்டி சிரித்தான்.
எந்த சலனமும் இல்லாமல் பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தான் குப்தா.
"என்னங்க...பால் இல்ல. ..."
கண்களைத் திறந்ததுமே முதலாவது இல்ல....இல்லத் தலைவியிடமிருந்து வந்தது.
பதில் சொல்ல முடியாமல் பத்தினியைப் பார்த்தான் குப்தா.
அவளைப் பார்த்து என்னசெய்ய...
அவள் வைத்துகிட்டேயா இல்ல...இல்ல என்கிறாள்.
சூழல் அப்படி அமஞ்சு போச்சி ...
பிள்ளைகளை மடியில் இழுத்து வைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள் ஆஷா.
அதற்குள் பக்கத்து வீட்டு மாமி ஆஷாஜி...ஆஷாஜி என்று கதவைத் தட்டினாள்.
மடியில் இருந்த பிள்ளைகளைக் கீழே உட்கார வைத்துவிட்டு போய் கதவைத் திறந்தாள் ஆஷா.
ரேசன் கடையில அரசி கொடுக்கிறாகளாம்.
மான்சி அப்பாவை சீக்கிரம் அனுப்பி வாங்க சொல்லுங்க.. ஒரே மூச்சில் தகவலைச் சொல்லிவிட்டு ஓடினாள் .
"ரேசன் போடுறாகளாம்...சட்டுபுட்டுன்னு போய் வாங்கிட்டு வாங்க...லேட்டா போனா சாமான் தீர்ந்து போயிட்டு என்பான்."
சொல்லிக் கொண்டிருக்கும்போதே பையையும் ரேசன் கார்டையும் எடுத்து வந்து நீட்டினாள் ஆஷா.
ஏதோ வேண்டா வெறுப்பாக எழும்பியவன் கால் கை கழுவிட்டு வந்து சட்டையை மாட்டினான்.
மறுபடியும்' காப்பி..'..நினைவுபடுத்தினாள் மான்சி.
"ஏங்க..போகும்போது பால் வாங்கி தந்துட்டு போங்க"
பதிலே பேசாமல் சென்றான் குப்தா.
பால் கடையில் போய் பால் வாங்கி வந்து தந்தான்.
ரேசன் கடையை நோக்கிச் சென்றான்.கால்கள் கூசின.
நெஞ்சுக் குழிக்குள் ஏதோ பிசைவதுபோல் இருந்தது.
வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.
அதற்குள் ரேசன் கடை வந்துவிட்டது.
ரேசன் கடையில் இருபது பேருக்குமேல் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
கடைசியாக போய் நின்று கொண்டான்.
உடம்பெல்லாம் கூசுவது போல் இருந்தது.
இதுநாள் வரை தான் உழைத்த பணத்தில்தான் பொருட்கள் வாங்கி போடுவான்.
ஏதோ யாசகம் வாங்க வந்தது போன்ற கூச்சம் மனதைப் பிடுங்கித் தின்றது.
"இடம்விட்டு நில்லுங்க...இடம்விட்டு நில்லுங்க..".லத்தியால் முதுகைத் தட்டினார் போலீஸ்காரர்.
மனதிற்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது.
பின்னால் நின்ற பெண் "என்னவெல்லாம் கொடுக்காங்களாம்.."குப்தாவிடம் கடைக்காரரிடம் கேட்பது போல் விசாரித்தாள் .
"தெரியாது "என்பதுபோல தலையை ஆட்டினான் குப்தா.
ஒருவழியாக பக்கத்தில் நெருங்கியாயிற்று.
இன்னும் நான்கைந்து பேர்தான்.
சீக்கிரம் வாங்கிவிடலாம்...முதன்முறையாக தலையை நிமிர்ந்து எட்டிப் பார்த்தான் குப்தா.
"குப்தாஜி....ஆப் கைசா ஹை..."குரல் வந்த திசையை எட்டிப்பார்த்து சன்னமாக தலையை ஆட்டினான்.
"காம் தந்தா நஹீ ...
தெக்கோ... கியா கரேகா.. "புலம்பினார் கேட்டவர்.
"க்யா கரேகா...."ஒப்புக்கு ஏதோ சொல்லி வைத்தான்.மனசு மட்டும் அவமானத்தால் குறுகிப் போனது.
இன்னும் இரண்டுபேர்தான்.எப்படியாவது வாங்கிடணும்.கொண்டு போனாதான் பிள்ளைகளுக்கு கஞ்சி....
நாற்பது ஆண்டுகாலத்துல இப்படி ஒருநாளும் நின்னதுல்ல...நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் ஏதோ பிசைவது போல இருந்தது.
அதற்குள்..."நிறுத்து நிறுத்து...நேரம் ஆயிற்று..".போலீஸ்காரர் குரல் கொடுத்ததுதான் தாமதம் ரேசன் கடைக்காரர் கடையைச் சாத்த புறப்பட்டார்.
குப்தாவுக்கு முன்னால் நின்ற பெண்ணுக்கு கண்ணீரே வந்து விட்டது.
"அண்ணாச்சி...அண்ணாச்சி...சாப்பாட்டுக்கு சுத்தமா அரிசி இல்ல..
தயவு செய்து கொடுங்க..."கெஞ்சிப் பார்த்தாள்.
"நேரமாயிற்று ....இனி நாளைக்குத்தான் "கறாராக பேசினான் ரேசன் கடைக்காரன்.
பெண்ணின் கெஞ்சலில் பிள்ளைகளின் பசி ஆற்றமுடியாமல் போய்விடுமோ என்ற என்ற ஏக்கம் இருந்தது.
.ஒருவேளை ரேசன் கடைக்காரன் மனது இரங்க மாட்டானா...என்று நினைத்தபடி குப்தாவும் கால்களைத் தேய்த்துக்கொண்டு அங்கேயே நின்று பார்த்தார்.
" போங்க....போங்க கூட்டம் கூடக்கூடாது". விரட்டியடித்தார் போலீஸ்காரர்.
வேறுவழி இல்லாமல் வெறும் பையோடு வீடு திரும்பினான் குப்தா.
"என்னங்க அரிசி போடலியா "அப்பாவியாககேட்டாள் ஆஷா.
" நேரம் ஆயிற்று என்று கடைய மூடிட்டாங்க.."
" காலையிலேயே எழும்பி போயிருக்கணும்.
நீங்கதான் போவ சோம்பல் பட்டு போய் படுத்திட்டிங்க.."என்று குறைபட்டுக் கொண்டாள் ஆஷா.
ஏய்....சோம்பேறி என்று சுளீர் என்று அடிப்பது போல இருந்தது மனைவியின் பேச்சு.
பத்து வருட திருமண வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலைக்குப் போகாமல் முடங்கிக் கிடந்ததில்லை.
வேலை....வேலை...வேலைதான்.
இருபத்து நான்கு மணி நேரமும் வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க...
ஒரு நாள் பொண்டாட்டிப் பிள்ள குட்டிகளோட வீட்டுல இருக்கியளா...
இப்படி குறைபட்டுக் கொள்ளும் ஆஷாவா பேசுறது....நம்ப முடியல...
ஆமாம்...நான் தான் சீக்கிரமே போயிருக்கணும்....
இரந்து வாழ வேண்டும் என்ற நிலைக்கு வந்தாயிற்று.
இனி என்ன தயக்கம்.....
நாளை முதலாளாய் வரிசையில் போய் நின்றுவிட வேண்டியதுதான்.
மானத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு முடிவோடு மூலையில் முடங்கினான் குப்தா.
Comments
Post a Comment