வள்ளுவரும் காக்கையும்

                        வள்ளுவரும் காக்கையும்


காக்கை என்றால் எல்லோருக்கும் ஓர் அலட்சியம்.
    கறுப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா என்று இழிவு படுத்துவதற்காக கூறுவோம்.
    கஞ்சத்தனம் உள்ளவனை எச்சில் கையால் கூட காக்கையை விரட்டமாட்டான் என்போம்.
    கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும் காக்கா கூட்டம் மாதிரி வந்து அப்பிட்டானுவ என்போம்
  இப்படி நாம் காக்கையைப் பற்றி வைத்திருக்கும் கண்ணோட்டம் வேறு.
    ஆனால் வள்ளுவருக்கு காக்கையைப் பற்றிய எண்ணம் மிகவும் உயர்வானது.
    அதனால்தான்
    "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
     வேந்தர்க்கு வேண்டும் பொழுது
"
என்று கூறுகிறார்.
அதாவது காக்கையைவிட கோட்டான் வலிமையானது.
ஆனால் கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. இந்த உண்மை காக்கைக்குத் தெரியும்.
   அதனால் கோட்டானைக் காக்கை பகல் நேரத்தில் வென்று விடும்.
   அதாவது தக்கநேரம் பார்த்து எதிரியை வீழ்த்தும் அறிவு காக்கைக்கு உண்டு.
   அதுபோலதான் வேந்தர்களும் தங்கள் எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அந்த சமயத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திப் போர் தொடுக்க வேண்டும்.
    அப்போது எளிதாக எதிரியை வெற்றி கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.
     மன்னனுக்கு அறிவுரை சொல்லுமிடத்து காக்கை உவமை சொல்லியது திருவள்ளுவரிடமிருந்து காக்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.
     அதுபோல்தான் இன்னொரு இடத்திலும் காக்கையைப் பெருமைப்படுத்துகிறார் திருவள்ளுவர்.
     "காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும்
      அன்ன நீராக்கே உள "

      என்கிறார்.
      காக்கை ஒருபோதும் சுயநலவாதிபோல் தனித்து உண்பதில்லையாம்.
      இரையைக் கண்டால் போதும்.
         கா..கா...என்று தன் கூட்டத்தைக் கரைந்து...கரைந்து அழைத்து
         அனைவரும் வந்த பின்னரே சேர்ந்து உண்ணுமாம்.
         எவ்வளவு பெரிய உயர்ந்த பண்பு பாருங்கள்.
       "  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
         தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

         ஆம்.நமக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கு கொடுத்து பாதுகாத்தலாகிய பண்பு அறநூல்கள் எது எல்லாம் அறம் என்று கூறுகிறதோ அந்த அறங்களில் எல்லாம் தலையாய அறமாகும்.
         இந்த உயரிய பண்பு காக்கையிடம் மட்டுமே உண்டாம்.
     இப்படி காக்கையைப் போன்று தன் சுற்றத்தை அழைத்து பகிர்ந்தளிக்கும் பண்பு கொண்டவருக்கே சுற்றத்தாரின் அன்பு கிட்டுமாம்.
     காக்கையை இதைவிட பெருமைப்படுத்த வேறு ஆள் வேண்டுமா என்ன!
     காக்கையை மாதிரி இருங்கப்பா என்கிறார் வள்ளுவர்.
     பண்பில் நம்மைவிட எவ்வளவு உயர்வான பறவை காக்கை!
     வள்ளுவரின் பார்வையில் காக்கை உயர்வாக மதிப்பளிக்கப்பட வேண்டிய பறவை.
      காக்கையைப்போல நேரம் பார்த்து செயலில் ஈடுபடுவோம்.வெற்றி பெறுவோம்.
      காக்கையைப் போல பிறருக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.
          அனைவரின் அன்பையும் பெறுவோம்.
     

Comments

Popular Posts