பழமொழிகளும் பழக்கமொழிகளும்
பழமொழிகளும் பழக்கமொழிகளும்
பழமொழிகள் என்பது அனுபவத்தின் மொழி.
அனுபவத்தை அறிவுரையோடு விரவி தந்த மூத்தோர்மொழி.
இந்த பழமொழிகள் காலங்காலமாக பலர் நாவினில் பயின்று பழக்கமொழியாக பொருள் மாறுபட்டுப் போனது எப்படி? தெரிந்து கொள்வோம்.வாருங்கள்.
1. "களவும் கற்று மற "
இது என்னப்பா இப்படி சொல்லியிருக்கிறார்கள்...?
களவு ஒரு தப்பான தொழிலல்லவா!
இதை முதலாவது கற்க வேண்டுமாம்.
அதன் பின்னர் மறக்கவேண்டுமாம்.
முரண்பாடாக தெரியலியா...?
இப்படியா நம் முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள்?
இருக்காது ....இருக்கவே இருக்காது".
"களவும் கத்தும் மற "என்றுதான் சொல்லியிருப்பார்கள்.
அது காத்துவாக்கில் நாலு காதுகளுக்குப் போயி கடைசியில் "களவும் கற்று மற" என்று
நம்ம காதுக்கு மாறிவந்து சேர்ந்திருக்கும்.
மாறியிருக்கும் என்ன ...மாறிதான் போய்விட்டது. அதுதாங்க உண்மை.
பஞ்சவர்ணத்தை பஞ்சாணம் என்றும் ஆபிரகாம் என்பவரை ஆவுரான் என்றும் மாற்றினவுங்க தானே நாம்.
'கத்து' என்பதும் 'கற்று' என்று மாறியிருக்காதா என்ன..?
.
' கத்து 'என்றால் தமிழில் பொய் என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால்தான் களவும் பொய்யும் இல்லாத தூய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக "களவும் கத்தும் மற "என்றுசொல்லி இருப்பார்கள்.
அதுதான் உண்மை.உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை.
இனிமேல் மறந்தும் தவறுதலான கருத்துக்களைச் சொல்லிக் கொடுத்துவிடக் கூடாது.
" களவும் கத்தும் மற" என்று சொல்லிக் கொடுப்போம்.
தமிழர்களின் வாழ்க்கை அறம் சார்ந்தது
"களவும் கத்தும் மற"
என்பதுதான் சரி.
நற்பண்புகளைப் பழமொழிகள் வாயிலாகவும் புகட்டி இருக்கிறார்கள்.வேறொன்றுமில்லை.
தமிழர்கள் என்றால் சும்மாவா!
2. "ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒருகாலம் வரும்"
ஆனை அதாவது யானை உருவத்திலும் பலத்திலும் பெரிதான விலங்கு.
அப்படிப்பட்ட யானைக்கு எப்போதும் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
பூனை மிகச் சிறிய விலங்கு.அதுவும் மதிக்கப்படத்தக்க காலம் கண்டிப்பாக வரும்.
மேலிருப்பவர்கள் கீழும் கீழிருப்பவர்கள் மேலும் என்று மாற்றம் நடைபெற்று வருவதுதானே வாழ்க்கை.
ஆனை போன்ற பெரிய விலங்குகளுக்கு மதிப்பும்மரியாதையும் கிடைத்ததுபோல
பூனை போன்ற சிறிய விலங்குகளுக்கும் ஒரு நல்ல காலம் வரத்தான் செய்யும் என்பதுதான் இதன் பொருள்.
அதாவது சமுதாயத்தில் பெரிய நிலைமையில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் நல் வாய்ப்புகள் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களுக்கும் கிடைக்காமல் போகாது என்பது இதன் மூலமாக நாம் அறியப்படும் செய்தி.
நல்ல செய்திதான் .பாராட்டுதலுக்கு உரியது.
ஆனால் அதற்கு இன்னொரு பொருளும் உண்டாம்.
இரட்டை அர்த்தம் வைத்துப் பேசுவது ...பொடி வைத்துப் பேசுவது இதெல்லாம் புலவர்களுக்குக் கைவந்த கலைதானே!
அதாவது ஆ என்றால் பசு என்று ஒரு பொருள் உண்டு.
பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ஆ நெய் எனப்படும்.
இது உடலுக்கு நல்லது என்று உண்ணலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் .
நெடுநாளைக்குச் சாப்பிட்டு வந்தால் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும்.
கொழுப்பு சேர்ந்துவிட்டால் ...
அதற்கு மாற்று மருந்து தேடி ஆக வேண்டுமே...
பின்னர் பூவிலிருந்து எடுக்கப்படும் நெய்யாகிய தேனைத்தான் உண்ணவேண்டும்.
இதைத்தான் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும் என்று கூறியிருந்தார்கள்.
ஆஹா...உடல் வளர்க்க ஆ நெய்.
அதைக் கட்டுப்படுத்தும் மருந்தாக பூ நெய்.
ஓகோ..
இரண்டு பொருள்களுமே நன்றாக இருக்கு இல்ல..
இதைத்தான் ஒரே கல்லுல இரண்டு மாங்காய் என்று சொல்வார்களோ...
3. "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?"
இது என்னப்பா புது கேள்வியா இருக்கு...
கழுதைக்கு கற்பூரவாசனை தெரியுமா ?என்று கழுதைகிட்ட அல்லவா கேட்கணும்.
நம்ம கிட்ட கேட்டா....குசும்பா தெரியல..
குசும்புதான்....குசும்புக்குள்ளும் தமிழ் வாசனை வீசத்தான் செய்யுது.
கற்பூரத்தின் சுகந்தம் மனமகிழ்ச்சி தருவது.. இனிமையானது.அதை சாதாரணமான ஒரு கழுதையால் நுகர்ந்து பார்த்து அறிய முடியாதாம்.
அதாவது கழுதைக்கு கற்பூரத்தின் மதிப்பும் தெரியாது. வாசனையும் தெரியாது.
அதைப் போன்றதுதான் மேன்மக்கள் அருமையை சாதாரண எளிய மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதாம்.
அவர்கள் அதனை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வர்.
பொருள் நன்றாக இருக்கு இல்ல...
இவ்வளவுதானா....இது மட்டும்தான் பொருளா ... கேட்பது கேட்கிறது.
இல்லங்க....இன்னொரு பொருளும் இருக்கு.
இதுவும் சிலேடை வகையைச் சார்ந்ததுதான்.
'கழு' என்றால் கோரைப்புல்லின் இன்னொரு வகையாம்.
'தை 'என்றால் 'தைத்தல்' என்று பொருளாம்.
அதாவது 'கழு 'எனப்படும் கோரைப் புல்லில் வேயப்பட்ட பாயை நுகர்ந்து பார்த்தால் கற்பூர வாசனை வருமாம்.
அதைத்தான் "கழு தைக்க அறியுமாம் கற்பூர வாசனை "என்று சொல்லி இருக்கிறார்கள் .
தமிழின் வாசனை எப்படி எல்லாம் கமழுதுல்ல..
சொன்னவர் என்ன பொருளில் சொன்னாலும் நாங்க கற்பூரம் போல பச்செக்கென்று பற்றிகிடுவோமில்ல...
கேட்டா இன்னும் இரண்டு பொருளும் சேர்த்து சொல்லுவோமில்ல...
4. "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பான்"
சாதாரணமாக கீழ்மட்டத்தில் இருந்த ஒருவன் திடீர் பணக்காரனானான்.
அவனுக்குத் தலையும் புரியல காலும் புரியல....
தலைகீழாக நடக்க ஆரம்பித்தான்.மழையும் பெய்யல...வெயிலும் அடிக்கல..
நடு ராத்திரி குடைய பிடிச்சுட்டு பவுசு காட்ட வெளியில் புறப்பட்டுட்டான்.
இதைத்தான் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலே குடைபிடிப்பான் என்று சொல்லி வைத்தார்கள்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் மாதிரி நாளையே காணாமல் போய்விடும் கூட்டம் இது.
இதற்கு மற்றுமொரு பொருளும் உண்டு.
அதாவது எந்த செயலையும் அர்ப்பணிப்போட செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.
வெற்றி பெற்று நன்றாக பணம் சம்பாதித்துவிட்டால்.... நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டான்.
இரவானாலும் பரவாயில்லை..
இல்லை என்று வருவோரை பொழுது சாய்ந்து விட்டது நாளை வா என்று கூற மாட்டான்.
கொடுத்து கொடுத்து கொடை வள்ளல் என்ற பெயரை தனதாக்கிக் கொள்வான்.
அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்த ராத்திரியில் கொடை கொடுப்பான் இதுதான் பழமொழி.
வாய்க்கு வாய் உருண்டு ...தவழ்ந்து... வார்த்தைகள் எப்படியெல்லாம் பொருள் மாற்றம் பெறுகின்றன பாருங்கள்..?
குடை வள்ளல் ....கொடை வள்ளல் ஆன கதை இதுதானா...
நல்லா இருக்குதுல்ல...
நல்ல கருத்தா இருந்தா ஏற்றுக் கொள்வதில் தப்பே இல்லங்க....
5. " மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா.."
ஆமா..மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
தண்ணீருல கரைந்து போய்விடாது...
அப்புறம் நீங்க எதுல ஏறி கரைக்கு வருவீங்க?
கேள்வி சரியாக தானுங்க கேட்டுருக்காங்க...
நம்பிக்கை தராத எந்த ஒரு ஆளையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்க கூடாதாம்.
தெரியாத்தனமா நம்பிவிட்டால்...நட்டாற்றில் விட்டுவிட்டு கரைந்து போன மண்குதிரையைப்போல பாதிவழியில் கை கழுவி விட்டுவிட்டு காணாமல் போய்விடுவர்.
நடு ஆற்றில் கிடந்து அங்கிட்டும் போகமுடியாம ... இங்கிட்டும் போக முடியாம... அல்லோலப்பட வேண்டியதுதான்.
இதைத்தான் "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?" என்று கூறியிருக்கிறார்கள்.
இது மட்டும்தானா இன்னும் இல்லையா....
உங்களுக்கு இல்லாமலா...
மழைக்காலங்களில் ஆற்றில் அதிகமாக நீர் வரத்து இருக்கும்.
தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல் சற்று நீர் குறைய ஆரம்பித்துமே அங்கங்கே திட்டு திட்டாக தெரிய ஆரம்பிக்கும்.
அதனைக் 'குதிர் 'என்று கூறுவர்.
ஆற்றில் போய் குளிக்கச் செல்லும்போது வெறும் மணல்தானே என்று தெரியாத்தனமாக அதில் கால் வைத்துவிட்டால் இந்தக் குதிர் உள்நோக்கி இழுத்துவிடும்.
அதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமாம்.
குதிருக்குப் பின்னால் இப்படி ஒரு பயங்கரமா?
இதைத்தான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று சொல்லி இருக்காங்களா.!
பெரியவுங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க..
இனியாவது ஆற்றில் குளிக்கப்போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க....
சொல்லப்பட்ட இரண்டுமே சிந்திக்க வைக்கும் கருத்துதான்.
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதும் ஆபத்து.
குதிரை நம்பி கால் வைப்பதும் ஆபத்து..
எப்படி எப்படி எல்லாம் யோசிச்சிருங்காப்பா....தமிழர்கள் அறிவாளிகள் என்பதற்கு வேறு சான்றும் வேணுமா!
6. " வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை"
என்னப்பா வாயில் வந்தபடி இப்படி சொல்லிட்டாங்க...
அந்த காலத்தில் எல்லாம் ஆசிரியருக்கு ஊதியம் குறைவு.
அதனால் ஆசிரியர் வேலைக்கு யாரும் போக மாட்டார்கள்.
வேறு ஒரு வழியும் இல்லை என்றால் வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலை பார்க்க வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் வாத்தியார் வேலைக்குச் செல்வார்களாம்.
அது போன்றுதான் ஒரு போக்கும் இல்லை...ஒரு போலீஸ் வேலையிலாவது சேருவோம் என்று ஒரு சலிப்போடுதான் போலீஸ் வேலைக்கும் போவார்களாம்.
அதனால் இப்படி சொல்லி இருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீங்க...
இருக்காது...இருக்காது...இதை நான் ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
அது அந்தக்காலம்....இது...இது இந்தக்காலம்.
காலத்திற்குத் தக்க பழமொழியையும் மாத்திக்கணுமில்ல..
"அப்போ மாத்தியாச்சா...சொல்லவே இல்ல...."
" சொல்ல வந்துருக்கோமில்ல..."
வாக்கு நன்றாக கற்று அறிந்தவர்கள்தான் வாத்தியார் வேலைக்கு லாயக்கானவர்களாம்.
அதாவது நன்றாக பேசத் தெரிந்ததோடு மட்டுமல்லாமல் நற்பண்புகளைக் கற்றுக் கொடுப்பவர்களுக்குத்தான் வாத்தியார் வேலை.
ஓகோ... அப்படியா!
ஒரு மனிதனின் போக்கை நன்கு அறிந்தவர் அதாவது மனித நடவடிக்கைகளை அறியும் திறன் படைத்தவருக்கே போலீஸ் வேலையாம்.
போக்குக்காட்டி ஓடினாலும் துரத்தி பிடிக்கணுமில்ல ..
மனிதன் போகிற போக்கைப்பார்த்தே எளிதாக திருடன் யார் ?நல்லவர் யார்? என்பதைக் கண்டுபிடிக்க தெரிந்தவருக்குத்தான் போலீஸ் வேலை.
வாக்கு கற்றவருக்கு வாத்தியார் வேலை.
போக்கு கற்றவருக்கு போலீஸ் வேலை.
வாத்தியார் வேலைக்கும் போலீஸ் வேலைக்கும் எப்படி ஒரு அருமையான விளக்கம்.
தமிழ் எப்படி எல்லாம் விளையாடுது பாருங்க...
பழமொழியைப் பகுத்தறிவோடு பயன் தரும் விதத்தில் பயன்படுத்துவோம்.
வாத்தியார் மற்றும் போலீஸ் வாக்குகளையும் அள்ளுவோம்.
பழமொழிகளையும் அதன் விளக்கத்தையும் படிக்க படிக்க மேலும் தொடராதா என்ற உணர்வு தோன்றியது. மிகச்சிறப்பு.
ReplyDelete