பீனிக்ஸ் பறவை


                                பீனிக்ஸ் பறவை


பீனிக்ஸ் பறவை என்று ஒரு பறவை உண்டா?

பீனிக்ஸ் பறவை பற்றிய கதைகள் யாவும் 

உண்மையா? பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து 

உயிர்த்து எழும்பி புதிதாய் பிறக்குமாமே!

உண்மையா? இப்படி மனதிற்குள்

எத்தனை...  எத்தனையோ கேள்விகள்.

 பீனிக்ஸ் பறவை பற்றி பண்டைய

 கிரேக்க, ரோமானிய புராணக் கதைகளில் 

தகவல்கள் காணப்படுகின்றன.

அரேபிய ,கிறிஸ்தவ கதைகளிலும் 

பீனிக்ஸ் பற்றிய குறிப்புகள் 

இருந்ததாக கூறப்படுகிறது.

 சீனாவிலும் பீனிக்ஸ் பறவை

 இருந்ததாகவும் அது பாம்பைப் பார்த்தால் 

தனது சிறகை விரித்து கால் நகங்களால்

 தாக்கும் ஆற்றல் மிக்கது என்றும் கூறுவர்.


பீனிக்ஸ் பறவையை செந்தூரமும்

 தங்க நிறமுமான இறகுகளைக் கொண்டதாகவே

உருவகப்படுத்தி நம் மனதில் பதிய வைத்துள்ளனர்.


 நமக்குக் கிடைத்த எல்லா குறிப்புகளும் 

  பீனிக்ஸ் பறவையை நெருப்புடன் 

தொடர்புபடுத்திப் பேசும் ஒரு விசயத்தில் 

 மட்டும் ஒத்துப் போவதாக உள்ளன.

பீனிக்ஸ் பறவைக்கும் சூரியனுக்கும் 

நெருங்கிய தொடர்பு  உண்டாம்.

அதனால் பீனிக்ஸ் பறவையைச் சுற்றி 

எப்போதும் ஒரு ஒளிவட்டம் காணப்படும்படியான

படங்களையே நம்மால் காணமுடிகிறது.


பீனிக்ஸ் பறவைக்கும் சூரிய வழிபாட்டுக்கும்

தொடர்பு உண்டு என்பதையும் புராண

கதைகள் மூலம் நாம் அறியலாம்.

புராண கதைகளின்படி ஒரு சமயத்தில் 

ஒரு பீனிக்ஸ் பறவைதான் வாழுமாம்.

ஒரு பீனிக்ஸ் பறவை 500 ஆண்டு காலம்

 உயிர் வாழும் என்று கூறுகின்றனர்.

 பீனிக்ஸ் பறவை தனக்கு மரணம் 

வரும் என்று உணரும்போது

 மரச் சுள்ளிகளை எடுத்து வந்து 

கூடு கட்டுமாம்.பின்னர் அதனுள் இருந்து

கொண்டு தன் கூட்டுக்கு தானே 

நெருப்பு வைத்துக் கொள்ளுமாம்.

நெருப்பு பீனிக்ஸ் பறவையைக் கூட்டோடு

சேர்த்து எரித்து சாம்பலாக்கிவிடும்.

பின்னர் அப்படி எரிந்த சாம்பலில் இருந்து 

சின்னஞ்சிறிய பீனிக்ஸ் குஞ்சு

 ஒன்று பிறந்து வருமாம்.

அந்த சிறிய குஞ்சு தனது தந்தையின்

 சாம்பலை எல்லாம் திரட்டி 

 ஒரு பந்தைப்போல உருட்டி 

எடுத்துக் கொண்டு எகிப்து நாட்டை நோக்கி

 பறந்து செல்லுமாம்.

அங்குள்ள ஹீலியாபோலிஸ் என்ற 

இடத்திலுள்ள சூரிய கடவுளின் 

பலிபீடத்தில் தான்  கொண்டு வந்த  சாம்பலைப் 

பத்திரமாக வைத்தி வைக்குமாம்.

இப்படி சாம்பலில் இருந்து பிறந்த 

 இந்த சிறிய  குஞ்சு அடுத்த  500 ஆண்டு 

காலம் உயிர் வாழும் என்பது செய்தி.

இவ்வாறு தீயில் இறப்பு  ....

மறுபடியும் அதே சாம்பலில்  இருந்து மறுபிறப்பு ...

 என்று 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை  

இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டே இருக்கும்

என்று புராணங்கள் கூறுகின்றன.

இதன்மூலம் பீனிக்ஸ் பறவைக்கு

அழிவு இல்லை என்ற கருத்து

சொல்லப்படுகிறது.

வாழ்க்கையில் அடிபட்டு பிரச்சினையில் 

விழுந்து அதிலிருந்து மீண்டு வரும் 

கதாப்பாத்திரங்களைக்  கதாசிரியர்கள் 

பீனிக்ஸ் பறவையோடு ஒப்பிட்டு 

எழுதி வருவது  வழக்கம்.

எது எப்படியோ... பீனிக்ஸ் பறவை 

ஒரு லட்சியவாதி பறவையாகவே

நம் கண் உலா வருகிறது.


இதற்கு இன்னொரு சாரார் வேறு 

ஒரு கதையும் கூறி வருகின்றனர்.

பீனிக்ஸ் பறவைக்கு எப்படியாவது

 சூரியனைத் தொட்டுவிட வேண்டும்

என்று ஆசையாம்.

எப்படியாவது சூரியனைத் தொட்டுவிட 

வேண்டும் என்ற ஆவலில்  சூரியனை நோக்கி

விடாப்பிடியாகப்  பறந்து போகுமாம்.

ஆனால்   குறிப்பிட்ட தூரம்வரைதான்

 பீனிக்ஸ் பறவையால் பறக்க முடியும்.

அதற்குள் சூரியனின் வெப்பம் தாங்க 

முடியாமல் உடல் கருகி,சாம்பலாகி 

மண்ணில் விழுந்து விடுமாம்.

வீழ்ந்து போனோமே என்று சோர்ந்து விடாது

மீண்டும் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு 

புதிய உத்வேகத்தோடு மறுபடியும்

 தனது முயற்சியை மேற்கொள்ளும்.

இது வெற்றி கிடைக்கும்வரை தொடர்ந்து

நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

 இவை யாவும் காலங்காலமாக 

சொல்லப்பட்டு வந்த கதைகளாக இருக்கலாம்.

ஆனால் எந்தப் பறவைக்கும் இல்லாத 

ஒரு சக்தி அதாவது தன்னால் முடியும் 

என்ற தன்னம்பிக்கை பீனிக்ஸ் 

பறவைக்கு இருப்பதாக நம்பப்படுகிறது

என்பது மட்டும் உண்மை.

அதனால்தான் பலமுறை தோல்வி

அடைந்திருந்தாலும் மறுபடியும் மறுபடியும்

வெற்றியை நோக்கிக் காய் நகர்த்தும்

விடாமுயற்சி கொண்டவர்களுக்கு 

 பீனிக்ஸ் பறவையை உவமையாகக்

கூறுவதைக் கேட்டிருக்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 

பீனிக்ஸ் பறவையோடு ஒப்பிட்டு

பேசுவது வழக்கம். அதனால்தான் சென்னை 

மெரினாவில் உள்ள அவரது நினைவிடம்

பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ விடாமுயற்சிக்கும்

வீழ்ந்தவர் மீண்டு வருவதற்குமான

அடையாளமாக  அனைவராலும் 

ஏற்றுக்கொள்ளப்பட்ட

ஒரு பறவையாக பீனிக்ஸ் பறவை 

இருந்து வருவது மறுக்க முடியாத உண்மை.

வீழ்ந்தாலும் எழலாம் என்ற

தன்னம்பிக்கை ஊட்டுவதுதான்

பீனிக்ஸ் பறவை.

வீழ்ந்தாலும் எழுவோம் பீனிக்ஸ் போல...
     
     
       


Comments

Popular Posts