தோல்வி நிரந்தரமல்ல...
தோல்வி நிரந்தரமல்ல...
வெற்றி பெற்றவர்களை உலகம் கொண்டாடும்
தோல்வி அடைந்தவர்களை எள்ளி நகையாடும்.
இதுதான் உலகம்.
வெற்றி தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை.
நல்லதும் கெட்டதும் நிறைந்ததுதான்உலகம்.
எவரும் நூறுவிழுக்காடு நல்லவர்களும் கிடையாது.
எவரும் நூறு விழுக்காடு கெட்டவர்களும் கிடையாது.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களும் கிடையாது.
தொடர்ந்து தோல்வி அடைந்தவர்களும் கிடையாது.
தோல்விகளைக் கண்டு ஒருபோதும்
துவண்டு போய்விடத் தேவையில்லை.
ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்
என நாம் கொண்டாடும் தாமஸ் ஆல்வா எடிசன்
பத்தாயிரம் முறை தோல்வியுற்ற பின்னர்தான்
அவரால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.
தோல்வியால் பெற்ற அனுபவங்களைப் பாடமாக
எடுத்துக் கொண்டு அவரால் மறுபடியும் மறுபடியும்
புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய தமது
பயணத்தைத் தொடர முடிந்தது.
தோல்விதான் நம் பலவீனங்களை
நமக்கு அடையாளம் காட்டும்.
மோசமான தோல்விகளே
நல்ல பாடங்களாக அமையும்.
மறுபடியும் நாம் அதே தோல்வியை
அடைந்துவிடக்கூடாது என்ற தரிசனத்தை
ஏற்படுத்தும்.
தோல்வி என்பது அழுவதற்கு அல்ல.
அதே இடத்தில் நம்மை தயங்கித்தயங்கி
நிற்க வைப்பதற்கும் அல்ல.
அடுத்த ஓட்டத்திற்கு நம்மைத் தயார்படுத்த
சொல்லும் ஒரு எச்சரிக்கை மணி.
அடுத்தது என்ன... அடுத்தது என்ன
என்று வெற்றியை நோக்கிய பயணத்தைத்
தொடங்குவதற்கான முன்னோட்டம் .
பல அறிஞர்கள் வாழ்க்கை
தோல்வியில்தான் தொடங்கப்பட்டிருக்கும்.
வெற்றியாளர்களின் வாழ்க்கை
வரலாற்றினைப் படிக்கும்போது
நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
செருப்பு தைக்கும் தொழிலாளியின்
மகனான ஆபிரகாம் லிங்கன்
தனது 52 வது வயது வரை எத்தனை
முறை தோற்றிருப்பார் தெரியுமா ?
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன்
" நான் மிகவும் பரிதாபமான மனிதனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் அனுபவித்த தோல்விகளை உலகின்
அனைத்து குடும்பங்களுக்கும் பகிர்ந்தளித்தால்
இந்த உலகில் மகிழ்ச்சியாக எவருமே
இருக்க மாட்டார்கள் " என்றாராம்.
எவ்வளவு நொந்து போயிருந்தால்
இப்படிப்பட்ட வார்த்தைகளைப் அவரால்
பேசியிருக்க முடியும்.
எத்தனையோ தோல்விகள்...
எத்தனையோ அவமானங்கள்....
குரங்கு மூஞ்சி என்று கிண்டலடிக்கப்பட்டார்.
அந்த அவமானங்களும் தோல்விகளும்
அவரை முடங்கிப் போடவில்லை.
இவை எல்லாவற்றுக்குமான
வெகுமதிதான் தனது 52 வது வயதில்
அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக
அவர் பெற்ற வெற்றி.
தோல்விகளைத் தோற்கடித்து ஒரு சாமானியனால்
சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு
இது நல்ல எடுத்துக்காட்டு.
தோல்வி வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
தெரியுமா?
தோற்கும் போதும் அதனை கம்பீரமாக
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டுமாம்.
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன்
தனது மகனுடைய ஆசிரியருக்கு
" ஏமாற்றுவதைவிட தோற்பது கௌரவமானது.
தோற்கும்போது எப்படி கம்பீரமாக நடந்து கொள்வது
என்று போதியுங்கள் " என்று கடிதம் எழுதியிருந்தாராம்.
ஊக்கம் இருந்தால் போதும் எந்த
தோல்வியிலிருந்தும் மீண்டு வந்துவிடலாம்.
இதைத்தான் வள்ளுவர்,
" உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரமக்க ளாதலே வேறு "
என்று அழகாகச் சொல்லுவார்.
உங்கள் மனம் விரும்பியதைச் செய்யுங்கள்.
மனதின் சக்தி மாபெரும் சக்தி.
.
வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும்
முக்கியமானதுதான்.
முதல் ஒலிம்பிக்கில் பெற்ற தோல்வி
தனக்கு நல்ல பாடமாக அமைந்து
தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான பாதையை
அமைக்கும் விவேகத்தைக் கற்றுத் தந்தது
என்பார் மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர்.
" வினாடிகளின் அருமையை முதல் ஒலிம்பிக்
எனக்குக் கற்றுத் தந்தது
.சில வினாடிகளைத் தவறவிட்டதால்
நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது "
என்றார் மைக்கேல்.
" நீ வெற்றி பெற்றால் பிறருக்கு
நின்று கொண்டு விளக்கத் தேவையில்லை.
நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விக்கான
காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது."
என்பார் அடால்ஃப் ஹிட்லர்.
தோல்வியை மறக்க நினைக்கிறோம்.
வெற்றியைச் சொல்லிச் சொல்லி
பெருமிதம் கொள்கிறோம்.
ஆனால் தோல்வியை மறப்பது முட்டாள்தனம்.
தோல்வி தந்த காயங்கள் வடுவாக
நம்மில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
நாளை வெற்றி பெறுவோம் என்ற
நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கான மருந்து.
வழுக்கலான பாறைகள் நிறைந்த
கடற்கரை பக்கமாக செல்கிறோம்.
வழுக்கி விழுந்தவன் "பாறை வழுக்குகிறது. கவனமாக போ"
என்று சொல்கிறான்.
அதன் மூலமாக உங்களுக்கு ஏற்பட
இருந்த விபத்தையும் தடுக்கிறான்.
அவனுடைய தோல்வி நமக்குப் பாடமாக
அமைகிறது.
அடுத்தவர் தோல்வியையும் கவனிக்கத்
தவறக்கூடாது.
அவற்றிலிருந்தும் நாம் பாடங்கள்
கற்றுக்கொள்ளும்போதுதான் எந்தவித
சறுக்கல்களும் நடைபோட முடியும்.
வீழ்வதுஇழிவன்று ; வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு.
அடுத்தவர் வந்து தூக்கும்வரை வீழ்ந்து
கிடக்காதே.
நீயாக உன் சொந்த முயற்சியில் எழும்பு.
அப்போதுதான் என்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை கிடைக்கும்
ஒருமுறை ஒரு அரசர் தன் மந்திரிகளிடம்
நான் கேட்கும் கேள்விக்கு சரியான
பதில் சொல்பவருக்கு சிற்றரசர்
பதவி வழங்கப் போகிறேன் என்றாராம்.
அனைவரும் என்ன கேள்வி கேட்கப் போகிறார்
என்று ஆவலோடு மன்னனைப் பார்த்தனர்.
கேள்வி என்னவென்றால்
"வெற்றி பெற்றவரிடம் அந்த வார்த்தையைச்
சொன்னால் கலங்க வேண்டும்.
தோல்வி பெற்றவரிடம் அந்த வார்த்தையைச்
சொன்னால் மகிழ வேண்டும்." இதுதான்கேள்வி
என்றார் மன்னர்.
எல்லோரும் அது எப்படி?
ஒரு வார்த்தை இரண்டு துருவங்களில்
நிற்பவர்களிடம் வெவ்வேறு விதமான
தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
சிற்றரசர் ஆகலாமே என்று அனைவரும்
ஏதோ ஒரு வழியில் முயற்சிசெய்து விடை
சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றனர்.
அப்போது மந்திரி ஒருவர் எழும்பி
"மன்னா ,எனக்கு இந்த கேள்விக்கு
விடை தெரியும் "என்றார்.
அனைவரும் மந்திரியை இவர் என்ன
சொல்லிவிடப் போகிறார் என்பது போல பார்த்தனர்.
மந்திரி "இதுவும் மாறும் "என்பதுதான்
நீங்கள் கேட்ட கேள்விக்கான
விடை "என்றார்.
"சரியாகச் சொன்னீர்கள் . பாராட்டுகிறேன் "
என்றார் மன்னர்.
'எப்படி ...'.என்பது போல அனைவரும்
மன்னரையே பார்த்தனர்.
" வெற்றி நிலையானது அல்ல .....
இதுவும் மாறும் காலம் வரும் என்று தெரிந்தால்
வெற்றியாளன் கலங்கிப் போவான்.
தோல்வி நிரந்தரமானதல்ல... என்று தெரிந்தால்
நாளை நமக்கு வெற்றி கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் தோல்வி அடைந்தவன்
மகிழ்ச்சி அடைவான்" என்று விளக்கம் அளித்தார் மந்திரி.
அருமையாகச் சொன்னீர்கள் என்று அனைவரும்
பாராட்டினர்.
அரசரும் அமைச்சரின் அறிவை மெச்சி
அவருக்கு சிற்றரசர் பதவி கொடுத்து
மகிழ வைத்தார்.
இதுதாங்க உண்மை.
எல்லாம் மாறும்.
தோல்வி ஒருபோதும் நிரந்தரமானதல்ல...
இதனை பசுமரத்தாணி போல மனதில்
ஏற்றி பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
இனி உங்களை எந்த தோல்வியும்
புரட்டிப் போட்டுவிட முடியாது
எத்தனை முறை வீழ்ந்தாலும் எழும்பும்
பீனிக்ஸ் பறவை நீங்கள்.
இதெல்லாம் தோல்வியா?
உங்களையே கேட்டுக்கொண்டு
அடுத்தகட்டத்தை நோக்கியே
உங்கள் பயணம் இருக்கட்டும்.
தோல்வி உங்களிடம் தோற்றுப் போகும்.
தோல்வியின் சுவடு காணாமல் போகும்.
இந்த உண்மையை மனதில் நிறுத்தி செயல்பட்டால் மட்டுமே போதும்.
தோல்வி தொலைந்து போகும்.பீனிக்ஸ் பறவையைப் போல மேலே எழும்புங்கள்.
வெற்றி நிச்சயமாக நம்மை வந்து சேரும்.
Comments
Post a Comment